ஆதிரை – ஆதிலட்சுமி சிவகுமார்

1977 தொடக்கம் 2009 வரையான காலத்தை பேசும் ஒரு நாவல்.

விமர்சனம் அல்லது கருத்துரை என்பதற்கு அப்பால் சயந்தனின் இந்த ஆர்வம் அல்லது முயற்சியை வரவேற்பதுடன் பாராட்டியும் ஆகவேண்டிய கடமை எனக்கு உண்டு என நினைக்கின்றேன். மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் சயந்தன்.

படைப்பியற்றுறையில் சயந்தன் தனித்துவமான ஒரு கதைசொல்லியாக தன்னை அடையாளப்படுத்தியிருப்பதுடன், நிறுவியுமிருக்கின்றார். ஆதிரைக்கு முன்பதாகவே இதனை அவர் நிறுவியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

நாடற்றஒருவன் சிறையில் அனுபவிக்கும் மிகக்கொடூரமான சித்திரவதைகளுடன் நாவல் ஆரம்பிக்கிறது. “லெட்சுமணன்” இனத்துவேசத்தால் கொல்லப்பட்ட, மற்றும் இன்னமும் சிறைகளில் வதைபடும் தமிழ் இளைஞர்களின் ஒரு குறியீடாகவே தெரிகிறான்.

மிகநீண்ட இடைவெளிக்கு பிறகு மலையக தமிழ்மக்களின் பிரச்சினைகளை வெளிப்படையாக பேசுகின்ற ஒரு படைப்பாகவும் ஆதிரை உள்ளது. கண்டுகொள்ளப்படுவதில் பின்தள்ளப்படுகின்ற மக்களைப்பற்றி பேசும் ஆற்றல் வரவேற்கத்தக்கது.

தன்னுடைய நறுக்கென்ற உரையாடல்கள் மூலமாக படிப்பவர்கள்நெஞ்சில் ஆணிஅறைந்துவிடுகிறார் சயந்தன்.

உதாரணமாக, (பக்கம் 28, 29 ல்வரும் உரையாடல்)

“யாருக்கு தனிநாடு கேக்கிறாங்க? “

“தமிழங்களுக்கு தான்”

“நமக்குமா..”

இது மலையகத்தில் வாழ்ந்த தமிழனின் கேள்வி. இந்தக்கேள்விக்குள் தொங்கிநிற்கும் அரசியல் மிகப்பெரியது. இதனை நாசூக்காக வெளிப்படுத்தும் சிறப்பு சயந்தனுக்குரியது.

மலைநாட்டிலிருந்து அன்று ஏதிலிகளாக வந்தவர்கள் பட்ட துன்பதுயரங்கள், அவர்கள்மீது பிரயோகிக்கப்பட்;ட அடக்குமுறைகள் மற்றும் மனவடுக்கள்,  மிக கச்சிதமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. நானும் பல ஆண்டுகாலம் இவர்கள் மத்தியில் ஒன்றாகவாழ்ந்து, இவர்களின் துன்பதுயரங்களில் பங்கெடுத்திருக்கின்றேன்.

ஆனால் ஒரு காலத்தில் இருந்த இந்த ஒடுக்குமுறைகள் படிப்படியாக குறைந்துசென்றிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

இதற்கு நாவலிலேயே எடுத்துக்காட்டு உள்ளது. (பக்கம் 83)

மூத்ததலைமுறையான இராசமணி “ வேலைக்காரப் பெடியன்…ஒருயோசினை இல்லாமல் தன்ர வீடுமாதிரி வாறான் போறான்…..” என கேட்க,

“ஆர் வேலைக்காரப் பெடி…” என்ற அடுத்த தலைமுறைச் சந்திராவின் கேள்வி

தான் சேகரித்த அல்லது அறிந்த தகவல்களை திரட்டி ஒழுங்குபடுத்தி வரலாற்று நாவல் ஆக்கியிருக்கிறார் சயந்தன்.

என்னை மிகவும் துருவி உழலச்செய்யும் ஒரு உரையாடல், (பக்கம் 521)

“றைபிள் எங்க?………”

“ ஐயோ அது சென்றிக்குள்ளை….மறந்துபோனம்…….”

“ (பக்கம் 317 – 319)

வெள்ளையனைக்காணவில்லை என்றதும், அவனையாராவது திட்டினார்களோ, அல்லது பொறுப்புக்கள் எல்லாம் தன்தலையில் ஏறிவிட்டது என்ற அச்சத்தில் போனானோ என பலரும் அங்கலாய்கக்கும் இடம், தனது சனத்தின் துன்பங்களை கண்டு பொறுக்கமுடியாமற்பொங்கிய இளையவர்களின் உணர்வை, தமது அறியாமையூடாக அவர்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் என தெரிவிக்கின்றது.

இந்த நாவல் வரலாற்று பதிவா என ஐயப்படுபட யாராவது நினைத்தால், தன்நாவலிலேயே அதற்கு அழகாக பதில்சொல்கிறார் நாவலாசிரியர். (பக்கம் 586)

“வரலாற்றுக்கென்ன….அது யாருடைய வாய்க்குள்ளிருந்து வருகுதோ அவைக்கு விருப்பமானதையும் வேண்டியதையும் சொல்லும்….”

இது நூறுவிழுக்காடு  உண்மை. வரலாற்றுக்கு உரியவர்கள் என கொண்டாடப்பட்ட அனைவரும், கிட்டத்தட்ட அந்த மண்ணில் வரலாறாகிவிட்டார்கள். இனி அது யாருடைய வாய்க்குள்ளிருந்து வருகுதோ அவைக்கு விருப்பமானதையும் வேண்டியதையும் தான் சொல்லும். இதுதான் இனி நாம் காண்பதுவும் காணப்போவதுவும். இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தியதற்கு ஆயிரமாயிரம் தடைவ நன்றி கூறிக்கொள்ளவிரும்புகிறேன் நாவலாசிரியருக்கு.

ஓவ்வொரு உயிரின் இழப்பின்போதும் மனம் கனக்கிறது. மயில்குஞ்சன் உண்மையாகவே எங்கள் கண்முன்னால் வாழ்ந்த மனிதன். விடுதலைப்போராட்டத்தில் அவருக்கும் கணிசமானளவு இடம் உண்டு. விடுதலைப்போராட்டத்துக்கு அவர்செய்த பங்களிப்புகளை முன்னர் படித்திருக்கின்றமையால், மயில்குஞ்சனின் இறப்பு மனதை பிழிகிறது. இப்படி எத்தனை மனிதர்கள் கனவுடன் மரித்துப்போனார்கள்?….இவர்களின் உழைப்பும் உன்னதமான சேவையும் இப்படியே அழிந்துதான் போகுமோ என நான் ஆதங்கம் கொள்கிறேன்.

போர் நடைபெற்றுக்கொணடிருக்கும் மண்ணில் வாழும் மக்கள் எத்தகைய மனநிலையில் இருப்பார்கள்?. இராணுவத்தினரின் முகாம்கள் தாக்கப்பட்டு அவர்கள் விரட்டப்படும்போது, போராளிகளை உயர்த்திபேசுவதும் அவர்களின் வீரத்தை மெச்சுவதும் அவர்களை தம் பிள்ளைகளாக கொண்டாடுவதும் இயல்பு. அதுவே போராளிகளுக்கு பின்னடைவுஏற்படும்போது அவர்கள் மீதான விமர்சனங்களாகவும் குற்றச்சாட்டுகளாகவும் நம்பிக்கையீனமாகவும் மாறிவிடுகிறது. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கழகு என மார்தட்டுபவர்களே…தோற்கும்போது ஏற்றுக்கொள்ளமறுக்கும் துயரமான நிலைஇது.

இதை பலஇடங்களில் சயந்தன் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

பாத்திரங்கள்அனைத்தும் அதனதன் போக்கில் இயல்பாக காணப்பட்டாலும், அத்தார் மிகமிக இயல்பான, என்னை மிகவும் பாதித்த பாத்திரப்படைப்பு. அவர் திலீபனைப்பற்றி சொல்லுகிற வார்த்தை, (பக்கம் 176) இன்னமும் மனச்சாட்சியை குடைகிறவிடயமாகவே உள்ளது. “சாப்பாட்டுக்கை கையை வைச்சால் அவன்ரை ஞாபகம்தானே வருகுது” என்று அவர்உருகுகிற இடம். சொல்ல வார்த்தைகள் இல்லை. இப்பவும் சயந்தன் சாப்பிடும்போது, திலீபனின் நினைவு வரத்தான் செய்கிறது.

அடுத்து சந்திரா, இதையும் சயந்தன் கொண்டுவந்த ஒரு குறியீட்டுப்பாத்திரமாகவே நான் பார்க்கிறேன்.  இராணுவத்தினர் தமக்கு துன்பத்தை தரக்கூடாது என்பதற்காக, போராளிகளை அவர் நையும் இடம், (பக்கம் 209)

“பெடியங்கள் காடுகளனிக்கை சண்டையைப்பிடிக்கலாம்தானே…”என்ற அவரின் கேள்வியில் விஞ்சிநிற்பது, சுயநலம் மிக்க ஒருசாராரின் உணர்வுநிலைப்பட்ட மனநிலைதான். அடுத்தவர்களின் பிள்ளைகள் சாவதால் தமக்கு எந்தவலியும் இல்லை என வாழ்ந்த ஒரு சாராரின் பாசநிலைதான்.

சந்திராவின் வார்த்தைக்கு  மலர் பதில் சொல்லும் அழகு, (பக்கம் 210)

“குறைசொல்லுறதுக்கும் ஒரு தகுதிவேணும்…” இந்தப்பதில் எனக்கு ஏனோ பிடித்திருந்தது.

ஓரிடத்தில் ஒருபோராளியின் வீரச்சாவு பற்றி ஒரு விடயம் வருகிறது. மட்டக்களப்பில் இராணுவக்கட்டுப்பாட்டில் பெற்றோர்கள் இருப்பதால் அவனுடலை எடுத்து கருமங்கள் ஆற்ற ஒருவரும் இல்லை என்றும், பக்கத்தில் இருந்த பேரனின் உடலுக்கு கிரியை செய்யவந்த மூதாட்டி அதுகுறித்து கருத்து கூறுவதாக வருகிறது.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வன்னிப்பெருநிலப்பரப்பிற்குள் உக்கிரம்நிறைந்த போர்ச்சூழலுக்குள் இலட்சோபலட்சம் மக்களுக்குள் பல ஆயிரக்கணக்கான போராளிகளுக்குள் வாழ்ந்தவள் நான்.

எத்தனையோ பெற்றோர் இல்லாதபோராளிகளுக்கு பெற்றோர்களாய் இருந்திருக்கின்ற நிறையப்பேரை எனக்கு தெரியும். எத்தனையோ பிள்ளைகள் தமக்கு ஆறுதல் அளித்த குடும்பத்தினரை தங்கள் உரித்துடையவர்களாக பதிவுசெய்து, அவர்கள் அந்தப் போராளிகளின் இறுதிநிகழ்வுகளை செய்திருக்கின்றார்கள். இறுதிநிகழ்வுகளுக்கு மட்டுமல்ல, போராளிகளின் திருமணங்களுக்கும் கூட பலர் பெற்றோராக நின்று திருமணத்தை நடத்தியதையும் நேரில் பார்த்தவள் நான். துயிலுமில்லங்களில் உரித்துடையோர் வர இயலாத நிலையில் அந்தப்பிள்ளைகளுக்கு விளக்கேற்றி உணவுபடைத்ததவர்கள் இருக்கிறார்கள்.

இந்தவிடயத்தில் நாவலாசிரியருக்கு தகவல்களை திரட்டிக்கொடுத்தவர்கள் இப்படியான தகவல்களை ஏன் மறந்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. ஒருவேளை பிரதேசமுரண்பாட்டை உசுப்பிவிடவாகவும் இருக்கலாம். அப்படியாயின் அது துயரமானது தான்.

பக்கம் 642

“அதெல்லாம் மற்ற ஆக்களுக்குதான்…முன்னாள் போராளியள்ள யாழ்ப்பாணமெண்டும் முல்லைத்தீவெண்டும் அம்பாறையெண்டும் வேற்றுமை இல்லை…எல்லாருக்கும் ஒரே பிரச்சனைதான்…எல்லாருக்கும் முன்னாள்கள் எண்ட ஒரேபேர்தான்… ”

உண்மை. துன்பங்களும் பிரச்சினைகளும் தான் எல்லோரையும் ஒற்றுமையுடன் வைத்திருக்கின்றது.

பக்கம் 358

அப்ப தம்பிக்கு எந்த இடம்?

யாழ்ப்பாணம், கொக்குவில்

படிச்சது

யாழ்ப்பாணம் ஹிண்டுகொலிஜ்…பிறகு ஜவ்னா யூனிவேர்சிற்றி மெடிக்கல் பக்றி…பிறகு லண்டன்ல ஸ்பெஷல் செய்தேன்…

ம்…எங்கட பக்கத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் நல்லவசதியிருந்திருந்தா இங்கயிருந்தும் டொக்டரெண்டும் இஞ்சினியர்ஸ் என்றும் நிறையப்பேர் வந்திருப்பினம்…|| முருகேஸ்வரி ரீச்சர் பெருமூச்செறிந்தாள்.

ஓம். இது வயிற்றெரிச்சல். தன்வயிற்றில் பிறக்காவிட்டாலும் இன்னொரு தாயின் பிள்ளை நல்லாயிருக்கிறதே என பெருமைப்படமுடியாத ஆற்றாமை. இது ஒருகுறுகலான பரவலான மனப்பிரச்சினை. எமது சமுகத்தின் அடிப்படை உணர்வின் வெளிப்பாடு. இந்த உணர்வில் மாற்றங்கள் நிகழவேண்டும். இதையே ஆதிரையும் விரும்புவாள் என்பது என் நினைப்பு.

போராட்டத்தை வெறுத்த சந்திராகூட இறுதியில், செல்லில் செத்துப்போவது துயரமளிக்கிறது.

நாவல் தொடங்கிய காலப்பகுதியில் இருந்து, நிறைவுப்பகுதிவரை இந்தந்தக்காலத்தில் ஊர்மக்களையும் ஊர்மக்களின் வாழ்க்கைமுறைகளையும் இயல்புகளையும் அப்படியே ஒரு ஆவணப்படம் பார்ப்பதுபோல அச்சொட்டாக பதிவுசெய்திருக்கிறார் நாவலாசிரியர்.

எழுதுவதென்பது மிககடினமான பணி. அதிலும் ஆர்வத்Nதூடு தகவல்களை திரட்டி, அதை தன்மொழிநடையில் இத்தனை விரிவாகவும், தளர்ச்சியில்லாமலும் பதிவுசெய்வதென்பது நினைத்துப்பார்க்க நடுங்கும் பணி.

இப்படிப்பல விதமான உணர்வுகளை, சம்பவங்களை அழகாக கோர்த்து பதிவாக்கியிருக்கும் சயந்தனின் அர்ப்பணிப்பு  விமர்சனத்திற்கு அப்பால் மெச்சுதற்குரியது. மீண்டும் வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுத்துலகில் சயந்தன் நிலைத்து நிற்கவேண்டும்.

–     ஆதிலட்சுமி சிவகுமார்