comment 0

கயல்விழி – தமிழரசி – சந்திரிகா

1995ம் வருடம், யூன், 5ம் நாள் சூரிச் த்ரிம்லி ஆஸ்பத்திரியில் ஒரு முன்னிரவில், திரு திருமதி நவரட்ணம் அவர்களின் மூத்த புதல்வியாக திருநிறைச் செல்வி (அப்படித்தான் அவளது பூப்புனித நீராட்டுவிழா அழைப்பிதழில் உள்ளது) தமிழரசி பிறந்தாள். அவளை, வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த இந்தக் கோடை காலத்தில் , சூரிச் நகரின் சனநெரிசல் மிக்க இடத்திலமைந்த ஒரு மெக்சிகன் உணவகத்தில் நான் சந்தித்தபோது இந்தக் கதை ஆரம்பிக்கின்றது. அப்போது காதுகளுக்குப் பழக்கமான ஒரு துள்ளிசை, பழக்கமற்ற ஒரு மொழியில் என்னைச் சூழ்ந்திருந்தது.

தமிழரசி தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த, பளிச் என்ற க்ளாஸை மேசையில் வைத்தாள். அப்போது எஞ்சிய தண்ணீரின் ஊடாக அவளது மார்பின் ஒரு பகுதி அகன்று, தோற்ற மயக்கம் காட்டியது. அப்போது “அண்ணா, இது டன்னா பஓலாவின் இசை, (youtube இல் Danna Paola என்று தேடவும்) கேட்டிருக்கிறீர்களா..” என்று கேட்டாள் தமிழரசி. நான் சட்டென்று தலையைத் திருப்பி வாசலை நோக்கினேன். இரண்டு பேர் கைகளைக் கோர்த்தபடி வெளியேறிக்கொண்டிருந்தார்கள். அவர்களை முந்திக்கொண்டு நான் ஓடிவிடவேண்டும்போல ஓர் அந்தரத்தை உணர்ந்தேன். அதை மறைத்தபடி  திரும்பிச் சிரித்தேன். “அண்மைக்காலங்களில் விரும்பிப் பார்ப்பது கீதியா வர்மனின் இசையைத்தான். உங்களுக்கு அவரைத் தெரியுமா” (Youtube இல் Geethiyaa Varman எனத் தேடவும்)

தமிழரசி மௌனமாயிருந்தாள்.

“அவரும் உங்களைப் போலத்தான். ஈழத்தின் இரண்டாம் தலைமுறைப் பெண். இப்பொழுது கனடாவில் இருக்கிறார்.” என்றேன் நான்.  தமிழரசி சலனமில்லாமல் மெனு அட்டையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு தலையை நிமிர்த்தி “சொல்லுங்கள், நான் என்ன சொல்ல வேண்டும்..” என்றாள்.

சட்டென்று எப்படி ஆரம்பிப்பதென்று எனக்கு உடனடியாகத் தோன்றவில்லை. ஒவ்வொரு கேள்விகளாகக் கேட்டு குறித்துக்கொள்ளலாமா, அல்லது ஓர் உரையாடலைத் தொடங்கி ஒலிப்பதிவு செய்துகொள்ளலாமா என்று சிந்திக்கலானேன். மேசையில் விரிந்துகிடந்த டயறியில் குறித்துக்கொண்டுவந்த கேள்விகளில், மூன்றாவதை தமிழரசி அறிய முதல் அழித்துவிட மனம் அப்போது அவாப்பட்டது.

3. திருமணத்திற்கு முன்னான பாலுறவு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

0             0             0

unbenannt

ஆதிரை (Tamil classic) வெளியான பிறகு எனது அடுத்த நாவலை புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் இரண்டாவது தலைமுறையினரைப் பற்றி எழுதவுள்ளேன் என்று ஓரிரு நேர்காணல்களில் நான் சொல்லியிருக்கின்றேன். ஏராளமான அக அலைக்கழிப்புக்களோடும் முரண்களோடும், அவர்களுடைய வாழ்வு ஒரு நாவலுக்குரிய கனதியோடு என்னுடைய கவனத்தை நெடுங்காலமாக ஈர்த்துக்கொண்டேயிருந்தது. அதனால், சுவிற்சாலாந்தில் பிறந்து வளர்ந்த, அல்லது சிறுவயதில் இங்கு குடியேறிப் பதின்மங்களையடைந்தவர்களை வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் நான் சந்தித்தபடியிருந்தேன். அவ்வாறு அந்த உண்மை மனிதர்களின் கதைகளைக் கேட்டறிந்து, பிறகொருநாள்  fiction என்ற பெயரில் நாவலாக்குவேன். அப்படி அறிமுகமாகித் தன்னுடைய  கதையைச் சொன்ன கபிலனே, (Facebook இல் Kabilan Sivapatham என்று தேடவும்.) எனக்குத் தமிழரசியின் வட்ஸ்அப் இலக்கத்தைத் தந்து பேசச்சொன்னார். நான் தமிழரசியின் இலக்கத்தை கை பேசியில் சேமித்தபோது, புரொபைல் படத்தில் அவள் ஊ என்று உதடுகளைக் குவித்த “வாத்துச் சொண்டுகளொடு” செல்பியில் சிரித்துக்கொண்டிருந்தாள்.  கபிலன் மீது ஒரு நெருக்கம் எனக்கு அப்போதுதான் உருவாகியிருக்கவேண்டும். பிறகொரு ஞாயிற்றுக்கிழமை, மதியம் நான் தமிழரசியை அழைத்தேன். மறுமுனையில் “ஹல்லோ” என்றபோது ‘ல்’ இற்கு அழுத்தம் அதிகமாயிருந்ததை இப்போது என்னால் நினைவுபடுத்த முடிகிறது. “நான் சயந்தன், கபிலன் இலக்கம் தந்தவர்… ” என்று வழமைபோல இயல்புக்கு வராமல் தடுமாறிக்கொண்டிருந்தபோது, “ஓ கபிலன் ‘இப்பவும்’ கதைக்கும்போது சொன்னவர்” என்றாள் தமிழரசி. எனக்கும் கபிலனுக்குமான ஒரு இடைவெளி இப்பொழுதுதான் விழுந்திருக்க வேண்டும்.

அதற்குப் பிறகு தமிழரசியுடன் மூன்று அல்லது நான்கு தடவைகள் பேசியிருக்கிறேன். எழுத்து அரட்டையின் எண்ணிக்கை நினைவில் இல்லை. அவற்றைச் சேமிப்பதும் இல்லை. தமிழரசிக்கு என்னுடைய நோக்கம் பற்றிப் பெரிதான ஆர்வமிருக்கவில்லை என்பதை நான் இரண்டொரு நாட்களில்  அறிந்தேயிருந்தேன். ஆனாலும், என் நாவலில் அவளுக்கென ஒரு கதையுண்டு என்று ஆன்மா சொல்லிக்கொண்டேயிருந்தது.

0             0             0

“ஏதோ கேள்விகள் கேட்கவேண்டும் என்றீர்கள். கேளுங்கள்” என்று மறுபடியும் நினைவுபடுத்தினாள் தமிழரசி. ஒவ்வொரு கேள்விகளாகக் கேட்டுக் குறித்தக்கொள்வதில் எதுவோ ஒன்று இடறிக்கொண்டிருந்தது. ஓர் இயல்பான உரையாடலாக முகிழ்த்து மலர்வதையே நான் விரும்பியிருந்தேன். ஆதிரை நாவலை எழுதுவதற்காக ஆட்களைச் சந்தித்தபோது அவ்வாறான சந்தர்ப்பங்கள் அதிகமாக வாய்த்திருந்தன என்று இந்த வரியை எழுதிக்கொண்டிருக்கும்போது, அப்படியில்லையென்றும் தோன்றுகிறது. ராணி அக்காவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதனால் எங்கும் தேட வேண்டாம்) சந்தித்தபோது நான் கேட்க நினைத்த எல்லாவற்றையும் என்னால் கேட்டுவிட முடியவில்லை. அப்படிக் கேட்ட அனைத்திற்கும் அவர் பதில் சொல்லியும் விடவில்லை. ராணி அக்காவின் காதல் கணவர் வவுனியாவில் காணாமற் போன பிறகு அவர் தன்னைவிடவும் மூன்று வயதிற்குறைந்த ஓர் இளைஞனில் காதல் வயப்பட்டிருந்தாரென்றும் பின்னர் அவனும் முள்ளிவாய்க்காலில் இறந்துபோனானென்றும் எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அவரிடம் நான், “உங்கள் கணவர் உயிரோடு இருந்தபோதே.. உங்களுக்கு மணிவண்ணனைத் தெரியுமா” என்று கேட்டேன். ராணி அக்கா என்னை ஊடுருவுவது போலப் பார்த்தார். பிறகு உதடு விரியாதளவுக்குப் புன்னகைத்தார். அந்தப் பார்வையும் புன்னகையும் கேலியாயிருந்தன. நான் தலையை நிமிர்த்தி மண்ணாலான சுவரைப் பார்த்தேன். அதில் ரத்த நிறத்தில் நீட்டிய நாக்கோடும், தலை விரி கோலத்தோடும் காளி படத்தைக் கொண்ட ஒரேயொரு கலண்டர் தொங்கிக்கொண்டிருந்தது. ராணி அக்கா காளியின் நெற்றியில் பொலிவான வட்டத்தில் குங்குமத்தை இட்டிருந்தார். நான் அவரிடம், “உங்களின் கணவரின் படத்தையா அல்லது மணிவண்ணனின் படத்தையா சுவரில் மாட்டுவீர்கள்” என்று கேட்டேன். ராணி அக்கா இப்பொழுது உதடுகள் விரியச் சிரிக்கலானார். “இரண்டு பேருடய படங்களையும் மாட்டினால் உங்கள் கதையில் என்னை எப்படி எழுதுவீர்கள்.” என்று கேட்டார். நான் எதுவும் பேசாமல் மௌனமாக வெளியேறினேன்.

0             0             0

“நான் சொல்வதை நீங்கள் கதையாக எழுதுவீர்களா..” என்றாள் தமிழரசி. நான் “ம்” என்றேன்.

“அதை யாரெல்லாம் வாசிப்பார்கள்..”

“இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் நாடுகளிலிருந்து வாசிப்பார்கள்..”

“படித்தபிறகு நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்..” என்று குறும்பாகச் சிரித்தாள்.

“என் மீது காழ்ப்புணர்வு என்று சொல்வேன்..” நானும் மென் சிரிப்போடு சொன்னேன்.

“காழ்ப்புணர்வு என்றால்…”

மேற்சொன்ன உரையாடலுக்கூடாக ஓர் இயல்பான மனநிலையை நான் அடைந்திருந்தேன். சிந்தனை ஒருவாறாக ஒருமுகப்பட்டிருந்தது. க்ளாஸிலிருந்த தண்ணீரை தமிழரசி முற்றிலுமாகக் குடித்து முடித்திருந்தாள். நான் சற்றும் தாமதிக்காது, “நீங்கள் சுற்றுலாக்களுக்குச் செல்லும்போது பள்ளிக்கூடத்தில் உங்களுக்குக் கருத்தடை மாத்திரைகள் தருவார்களாமே உண்மையா..” என்று கேட்டேன். தமிழரசி சலனமேயில்லாமல் “ஆமாம்” என்று ‘அதற்கென்ன’ என்னுமாற்போல தலையாட்டினாள். அவளுடைய பதிலுக்கூடாக வாசகர்களுக்கு ஓர் அதிர்ச்சியை வழங்கக் காத்திருந்த எனக்கு இந்தப் பதில் சப் என்றானது. “இது உங்களுடைய அம்மா, அப்பாவிற்குத் தெரியுமா..” என்று கேட்டேன். அப்போது தமிழரசியின் கண்கள் சலனத்திற்குள்ளாகின. அப்போது நான் ஓர் கதையைத் தமிழரசிக்குச் சொல்லத்தொடங்கினேன். அந்தக் கதையை ஒரு காலத்தில் நானே எழுதியிருந்தேன். சுவிற்சர்லாந்து தமிழ் இலக்கியக் கழகத்தின் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற அக்கதைக்கு தங்க மோதிரம் பரிசாக அளித்திருந்தார்கள்.

 

நான் தமிழரசிக்குச் சொன்ன கதை

கயல்விழி, தன்னுடைய பதின்மூன்றாவது வயதில் பருவமடைந்தாள். ஓராண்டு கழிந்த பிறகு அடுத்த கோடை காலத்தில் அவளுடைய பெற்றோர்கள் அவளுக்கு வெகு விமர்சயாகச் சாமத்தியச் சடங்கு செய்தார்கள். கயல்விழி காலையில் பாடசாலைக்குச் சென்றால், மாலையில் பாடசாலை முடிந்த பத்தாவது நிமிடம் வீட்டிலிருப்பாள். அவள் கண்ணும் கருத்துமாகக் கல்வி கற்று வந்தாள். கயல்விழியைச் சிறுவயதிலேயே பரதநாட்டியம் பழக அனுப்பினார்கள். இந்தியாவிலிருந்து ஒரு நர்த்தகியை அழைத்து அவளுக்கு அரங்கேற்றம் செய்தார்கள். கயல்விழி தமிழர் பண்பாட்டிற்கேற்ப வாழ்ந்து வந்தாள். ஒருமுறை கயல்விழியை பாடசாலையில் கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது ஆசிரியர்கள் அவளிடம், சுற்றுலாவின் போது அவதானமாயிருக்கும்படியும் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும்படியும் ஆலோசனை சொன்னார்கள். மேலும் கருத்தடை மாத்திரைகளையும் அவர்கள் வழங்கினார்கள். இந்த விடயம் கயல்விழியின் பெற்றோர்களுக்குத் தெரியவந்தபோது, துடித்துப் பதைத்த அவர்கள் அடுத்தநாளே பாடசாலைக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்றார்கள். அவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் கீழ்வருமாறு உரையாடல் நிகழ்ந்தது. அப்போது கயல்விழியின் அம்மாவின் கண்கள் கண்ணீரால் நனைந்திருந்தன. அப்பாவின் கண்கள் கோபத்தால் சிவந்திருந்தன.

“என் மகளை ஒரு கேவலமான பெண்ணாக நினைத்து விட்டீர்களே..” என்றழுதாள் அம்மா.

“தமிழர்களுடைய கலாசாரம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா.. கண்டவன் நின்றவனோடெல்லாம் படுத்தெழும்புகிற உங்களுக்குக் கலாசாரம் பற்றி என்ன தெரியும்..” என்று கத்தினார் அப்பா.

அம்மாவின் கண்ணீரில் மிரண்டுபோன ஆசிரியர்கள் அப்பாவின் கோபத்திற்குச் சிரித்தார்கள். “மாணவர்களை நாம் மாணவர்களாகத்தான் கருதமுடியும். தமிழர் என்றோ அரேபியர்கள் என்றோ எங்களால் கருதமுடியாது” என்றார்கள்.

“என் பெண்ணின் எதிர்காலம் பற்றி நீங்கள் நினைத்துப் பார்த்தீர்களா..” என்றாள் அம்மா.

“உங்கள் பெண்ணின் மட்டுமல்ல, எங்கள் எல்லா மாணவர்களின் எதிர்காலமும் பற்றி யோசித்துத்தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் நாம் ஒவ்வொரு மாணவர்களின் பின்னாலும் கண்காணித்துக்கொண்டிருக்கவும் முடியாது. நீங்கள் போகலாம்.”

அதற்குப் பிறகு, கயல்விழி தன் பட்டப்படிப்பை முடிக்கும் வரையிலும், அவ்வப்போது சுற்றுலாக்களுக்குச் சென்று வந்தாள். அப்போதெல்லாம் அவளுடைய அம்மா தன் வயிற்றில் நெருப்பைக் கட்டி வைத்திருப்பதாக தன் தோழிகளுக்குச் சொன்னாள். பட்டமளிப்பு விழா நடந்த அன்று, கயல்விழி ஆசையோடு பெற்றோர்களைக் கட்டியணைத்து முத்தமிட்டாள். அவளைப் பெருமிதத்தோடு அவர்கள் தோள்களில் தாங்கிக் கொண்டனர். அப்பொழுது சிறிய அளவிலான, ரோஸ் நிறத்திலான, சிறுவர் கதைகளில் வருவதைப் போன்ற புதையல் பெட்டியை (அது அவளுடைய பத்தாவது பிறந்த தினத்திற்குப் பரிசாகக் கிடைத்தது) தன்னுடைய பையிலிருந்து எடுத்த கயல்விழி தன் பெற்றோரைத் தீர்க்கமாகப் பார்த்தவாறு அதைத் திறந்தாள். அதற்குள், அவள் பருவமடைந்த பிறகு முதன் முதலாகச் சுற்றுலாவிற்குச் சென்ற நாளிலிருந்து பள்ளியில் கொடுத்த அத்தனை கருத்தடை மாத்திரைகளையும் அவள் சேமித்து வைத்திருந்தாள். அவளுடைய அப்பாவும், அம்மாவும் அவளைப் பெருமை பொங்கப் பார்த்தார்கள். அவர்களது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. கயல்விழியின் விழிகளும் கசிந்தன. மங்கலாகத் தோன்றிய தன் பெற்றோரின் உருக்களைப் பார்த்தவாறே “அம்மா.. அப்பா.. நான் ஒரு அசல் தமிழ் பெண் அல்லவா.. ” என்று அவள் முணுமுணுத்தாள்.

0             0             0

நான் இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும்தான் தாமதம், தமிழரசி கெக்கே பிக்கே என்று சிரித்தாள். சிரிப்பை அடக்கும் எத்தனத்துடன் எனது  தண்ணீர் க்ளாஸையும் எடுத்துக் குடித்தாள். மறுபடியும் நினைத்துச் சிரிக்க, வாயிலிருந்து நீர்த்துளிகள் பறந்தன. நான் என்ன என்பதைப்போல நோக்கினேன். ஒன்றுமில்லையென்பதைப்போல தலையசைத்தாள். நான் இப்போது கைச் சைகையால் மறுபடியும் என்ன என்று வினாவினேன். தமிழரசி இயல்புக்கு வந்தாள். “இல்லை எனக்கெல்லாம் சிறுவயதில் முத்திரை சேகரிப்பதுதான் பொழுதுபோக்காயிருந்தது.” என்றவள் மறுபடியும் விக்கி விக்கிச் சிரித்தாள். “இந்தக் கதையை எழுதியது நீங்கள்தானா… ”

அதற்குப் பதில் சொல்லாமல், நான் தமிழரசியிடம் “இரவுக் க்ளப்புகளுக்குப் போவீர்களா..” என்று கேட்டேன். கேள்வியில் தொங்கி நின்ற சுவாரசியத்தைக் கண்டுகொள்ளாதவளைப்போல அவள் அசிரத்தையாக “ஏன்.. கபிலன் எதுவும் சொல்லவில்லையா” என்று அரை விழிகளால் கமுக்கமாகப் பார்த்துக் கேட்டாள். கபிலன் மீது ஓர் எரிச்சல் எனக்கு இப்போதுதான் தோன்றியிருக்க வேண்டும்.

“எனக்குப் பசிக்கிறது. சாப்பிடப்போகிறேன்” என்றவள் பரிசாரகனை அழைத்து மெனு அட்டையிலிருந்த டகுயிட்டோவைத் தொட்டுக் காட்டி ஒன்று என்றாள். நான் அவசர அவசரமாக “எனக்கும் அதுவே” என்றேன். ஒரு முழு ரொட்டியில் இனிப்பான பாணியைத் தடவி, உள்ளே வாட்டிய மாட்டு இறைச்சியும், சீஸ்சும் சில பல சலாட் சமாச்சாரங்களையும் சுற்றிய டகுயிட்டோவை, தமிழரசி ஒரு கடி கடித்துவிட்டு கீழே வைத்தாள். நானும் அதைப்போலவே செய்தேன்.

0             0             0

“இரவுக் க்ளப்புகளுக்கு சென்றுவிட்டு வீட்டிற்குத் தாமதமாக வந்தால் அப்பா அம்மா எதுவும் சொல்ல மாட்டார்களா..”

தமிழரசி “ப்ச்” என்று முகத்தைச் சுளித்தாள். எதையும் ஞாபகப்படுத்த விரும்பாதவளைப்போல அவளுடைய முகபாவமிருந்தது. பிறகு மெல்ல “அப்பா.. நாயே பேயே  என்று கத்துவார்.. உன் அம்மாவைப்போல வருகிற வழியில் எவனோடாவது படுத்துக் கிடக்கப் போகிறாயா.. என்று திட்டுவார். குடித்திருந்தால் ‘நீ என் இரத்தத்தில் பிறக்கவில்லை’ என்பார். அம்மா ஒரு மூலையில் ஒடுங்கிக் கிடந்து அழுதுகொண்டிருப்பாள்.. இப்போதெல்லாம் நான் ஐந்து மணிக்கே வீட்டிற்குச் சென்றுவிடுவேன்…  ஏனென்று கபிலனுக்கோ வேறெவருக்குமோ நான் சொல்லவா முடியும்..” தமிழரசி கபிலனுக்குச் சொல்லாத கதையொன்றை எனக்குச் சொல்லத் தொடங்கினாள். நான் அதை புன்சிரிப்போடு குறித்துக்கொள்ளத் தொடங்கினேன்.

 

தமிழரசி எனக்குச் சொன்ன கதை.

என்னுடைய அம்மா தொன்னுாற்று நான்காம் வருடம் சுவிற்சலாந்துக்கு வந்தாள். முன்னதாக, ஊரிலிருந்து வந்த ஒரு கல்யாண வீடியோக் கசெற்றில் மணப்பெண்ணுக்கு அருகாக நின்ற தோழிகளில் அப்பா அவளைக் கண்டாராம். அப்பாவிற்கு அப்பொழுது இருபத்தெட்டு வயது. அம்மாவிற்கு இருபது வயது. ஊரில் திருமணத்தை முற்றாக்கிய பின்னர் அம்மாவை சுவிற்சர்லாந்துக்கு அழைப்பதற்கான முயற்சிகளில் அப்பா ஈடுபட்டார். அதற்காக இரவும் பகலும் வேலைக்குப் போனதாக அவர் சொல்கிறார். அப்பா ஒரு ஏஜென்சிக்குச் சுளையாகக் காசைக் கட்டினார். ஏஜென்சி அம்மாவை டெல்லிக்கு அனுப்பினான். அம்மா அங்கிருந்து தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கசகஸ்தான் ஊடாக  மொஸ்கோவிற்குப் போனாள். பிறகு உக்ரேனுக்கு ஊடாக போலந்துக்கு வந்தாள். அப்போது கோடை முடிந்துகொண்டிருந்தது. போலந்தின் எல்லையில் ஓர் ஆற்றைக் கடந்தவேளையில் அம்மாவோடு வந்தவர்களில் இரண்டுபேரை ஆறு அடித்துச்சென்றது. போலந்து ராசா என்ற அந்த தமிழ் ஏஜென்சிக் காரன், தங்களை ஒரு பாகிஸ்தானியிடம் ஒப்படைத்ததாகவும், அவன், இடுப்பளவு தண்ணீர்தான் இறங்கிச் செல்லுங்கள் என்றதாகவும் அம்மா சொன்னாள். ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டவர்களில் ஒருத்தியின் பெயர் சுபத்திரா என்றும், அவளுக்கு வெளிச்சமான வட்ட முகம் என்றும் அவள் சொல்வாள். இருட்டுக்குள் ஒலித்த அந்த இருவரினதும் அலறலையும் அநாதரவாகக் கைவிட்டுவிட்டு பனிக்கட்டியாகக் குளிர்ந்திருந்த ஆற்றுக்குள் அழுதபடியே காலெடுத்து நடந்ததை அம்மா எப்போதாவது நினைவுகூர்வாள்.

அளவெட்டியிலிருந்து புறப்பட்ட பத்தாவது மாதம், ஜெர்மனியிலிருந்து புறப்பட்ட ஒரு தொடரூந்தில் ஜன்னலோரத்தில் தன்னந் தனியனாக சூரிச்சில் வந்து இறங்கினாள் அம்மா. அவளுக்காகக் காத்திருந்த அப்பா, முதன் முதலாக “நீங்கள் வீடியோக் கசெற்றிலே நல்ல வெள்ளையாக இருந்தீர்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை” என்றாராம். அப்பா அம்மாவைத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றார். அதே அறையில் அவரோடு தங்கியிருந்தவர்கள் அன்றைக்கு வேறு இடங்களுக்குச் சென்றார்கள். அப்போது பகலாயிருந்தது.

அப்பா, அம்மாவை அகதிகள் முகாமில் பதிவு செய்தார். இரண்டாவது மாதம் அழைத்து வந்து திருமணம் செய்தார். நான்காவது மாதம், ஒரு தொழிற்சாலையில் துப்புரவுப் பணியில் அவளை வேலைக்கு அனுப்பினார். அப்பா தனக்கு வேண்டாம் என்று சொன்ன சீதனத் தொகைக்குச் சமானமான தொகையை அம்மா ஐந்தாவது மாதம் உழைத்து அவரிடம் கொடுத்தாள். அடுத்த மூன்றாவதோ நான்காவதோ மாதத்தில் நான் பிறந்தேன்.

என்னுடைய முதலாவது பிறந்த நாளை அப்பா வெகு விமர்சையாகக் கொண்டாடினார். அன்றைக்குப் போலந்து ராசனையும் மொஸ்கோ சுரேசையும் அவர் அழைத்திருந்தார். பகலில் கொண்டாட்டம் முடிந்து பெண்களும் குழந்தைகளும் சென்றபிறகு இரவு மதுபான பார்ட்டி ஆரம்பித்தது. மறுபடியும் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவார்கள் என்று ஒரு சாராரும், இல்லை, புலிகளின் கதை முடிந்து விட்டதென இன்னொரு சாராரும் பந்தயத்தோடு பார்ட்டியைத் தொடங்கினார்கள். அது பின்னர், இனப்பிரச்சனையிலிருந்து குடும்பப் பிரச்சினைக்கு உருமாறி அவனின் கதை, அவளின் கதையென்று சென்று ஒரு கட்டத்தில் போலந்து ராசனை உச்ச போதையில் “போங்கடா டேய்.. இவளவையள் என்னோடை படுத்தெழும்பின பத்தினித் தெய்வங்கள் தானேடா..” என்று கத்தச் செய்தது.

அப்பா நிறை வெறியில் தள்ளாடியபடி ஓடிச் சென்று போலந்து ராசனின் குரல்வளையை கையால் கவ்விப் பிடித்துக்கொண்டார். “என்னடா சொன்னனி horensohn..” (தமிழரசி இந்த ஜெர்மன் வார்த்தையைத்தான் பயன்படுத்தினாள்)

போலந்து ராசன் கோழி கேருவதைப்போல கீச்சிட்டுக் கத்தினான். “விடுறா..”

மற்றவர்கள் ஓடிச்சென்று அப்பாவைப் பிடித்துக்கொண்டார்கள். “விடு.. நவத்தார்.. அவன் பகிடிக்குத்தானே சொன்னவன்..”  என்றார்கள்.

“பகிடிக்குச் சொல்லுறதென்றால் நவத்தின்ரை மனிசியைத் தவிர மற்றப் பொம்பிளையளோட படுத்தனான் எண்டு சொல்லலாம்தானே” என்றவாறே அப்பா போலந்து ராசனின் வயிற்றில் ஓங்கி உதைந்தார். அவன் சுருண்டு விழுந்தான். பிறகு கண்கள் சிவக்கத் திமிறி எழுந்தான். “உக்ரேனில இருந்து போலந்துக்குப் போறதுக்கு முதல்நாள் இரவு, ரோட்டில காருக்குள்ள என்ன நடந்ததெண்டு.. உன்ர மனிசியிட்டப் போய்க் கேளடா… ” அப்பா அவன் மிச்ச வார்த்தைகளைப் பேசாதபடிக்கு அவனை நொருக்கியெடுத்தார். அதே வேகத்தில் வந்து நித்திரையில் கிடந்த அம்மாவையும் நொருக்கியெடுத்தார். “என்ர காசில அவனோட படுக்க ருசிக்குதோடி உனக்கு” என்று கேட்டவாறே அவளைத் தள்ளிச் சென்று தலையைச் சுவரோடு மோதினார். நெற்றியுடைந்து ரத்தம் வழிந்தது. அம்மா அழுகைச் சத்தத்தை பீறிடாமல் அடக்கிக் கொண்டாள். ஆனால் நான் விழித்து அழத்தொடங்கினேனாம். அந்த நாளுக்குப் பிறகு எப்பொழுது சண்டை வந்தாலும் “நீ வழியில் வந்தவனோடு படுத்தவள்தானே” என்று அப்பா சொல்லத் தயங்கியதில்லை. படுப்பதென்றால் என்னவென்று நான் அறிகிற வயதிற்கு முன்னரே கூட அப்பா என்னை அப்படித்தான் திட்டினார். ஆனால் நான் அம்மாவைப் போல அழுததில்லை. படுத்ததற்காக யாராவது அழுவார்களா..”

தமிழரசி எழுந்து வோஷ் ரூம் போனாள். நான் அவள் நடந்துசெல்வதையே பார்த்தபடியிருந்தேன். அவளுக்கு ஆறேழு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லவேண்டும்போலத் தோன்றியது. அதற்காக என்னைத் தயார்ப்படுத்தினேன். அவள் திரும்பி வரும்போது, கையில் நுரைக்க நுரைக்க கொக்கோ கோலா நிரப்பிவந்தாள். ஒருவேளை அவள் பியரை நுரைக்க நுரைக் நிரப்பி வந்திருந்தால் இந்த வரியை நான் எழுதியிருப்பேனா என்று யோசிக்கலானேன். “நீங்கள் எதுவும் குடிக்கவில்லையா..” என்றாள் தமிழரசி. நான் அவள் சொன்ன கதையிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ளாதவனாகப் பாவனை காட்டியவாறே “சந்தேகம், உடனிருந்தே கொல்லும் வியாதி” என்றேன். என்ன என்பதைப்போலப் பார்த்தாள். “இல்லை.. உங்கள் அப்பாவின் சந்தேகத்தில் அம்மாவின் வாழ்வு ரணமாகிவிட்டது. எப்போதாவது நீங்கள் உங்கள் அம்மாவிடம் இதைப்பற்றிப் பேசியிருக்கிறீர்களா..”

தமிழரசி இல்லை என்று தலையாட்டினாள். “நான் ஏன் கேட்கவேணும்…” என்றாள். சில நிமிடங்கள் அமைதியாயிருந்தாள். பிறகு “ஆனால்… பத்து வருடங்களுக்கு முன்னாலிருக்கும், ஒரு நாள்  அப்பாவின் அடித்துக் கொண்டிருக்க, அழுதுகொண்டிருந்த அம்மா, திடீரென்று ஒரு சிறுத்தையைப்போல சிலிர்த்தபடி எரிப்பதைப்போல அப்பாவைப் பார்த்தா.. பிறகு ‘ஓம்.. படுத்தனான்தான்.. இப்ப அதுக்கு என்ன.. என்று கேட்டா..’

நான் சடாரென்று தலையைச் சிலுப்பிக் கொண்டேன். தேகத்தைப் பிடித்துப் பிதுக்கினாற்போல குபுக்கென்று வியர்த்தது. ஒரு தமிழ்க் கெட்ட வார்த்தை படு வேகமாக உதடுவரை வந்துநின்றது. தொண்டை காய்ந்து பாளம் பாளமாக வெடித்தமாதிரி.. உள்ளங்கால்களைத் தீயில் மிதித்த மாதிரி.. ஓர் அரியண்ட உணர்வில் அலைச்சலுற்றேன். கண்களிரண்டும் இருண்டு இருண்டு மீண்டன. “ச்செய்க்.. ச்செய்க்” என்று நான்கைந்து தடவைகள் மெதுவாகச் சொல்லிக் கொண்டேன்.  ஓடிச்சென்று ஒரு குவளையில் பியரை நிரப்பி வந்தேன். தமிழரசியின் முன்னால் sorry என்றவாறே உட்கார்ந்தேன். அவள் ஏன் என்றாள். ஒரு மிடறு பியரைப் பருகிய நான் அவளை நிமிர்ந்து நோக்கினேன். மறுபடியும் அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும்போலத் தோன்றியது.

“ம்.. கண்காணாத தேசம், அதிலிருந்து தப்பிவிடவேண்டுமென்ற வேட்கை, ஒத்துழைக்காவிட்டால் கை விட்டுவிடுவதாக.. ஏன்.. கொலையே செய்துவிடுவதாக  மிரட்டிக்கூட இருக்கலாம். இந்தச் சந்தர்ப்பங்கள் ஒன்று கூடி, அப்படியொரு நிர்ப்பந்தத்திற்கு அம்மாவைத் தள்ளியிருக்கலாம்…” நடந்தது நடந்துவிட்டதென்ற ஓர் தொனியில் நான் சொல்லி முடித்துவிட்டு செயற்கையாக ஒரு பெருமூச்சை விட்டேன்.

அப்போது தமிழரசி என்னைத் தீர்க்கமாக, கண்களை நேருக்கு நேரானதாக நோக்கினாள். “ஏன்.. ஒருவேளை அவளுக்கு, அதாவது அந்தப் பெண்ணுக்கு உடலாலும் மனதாலும் அது தேவைப்பட்டிருக்கலாம் என்றெல்லாம் நீங்கள் நினைத்துப் பார்க்க மாட்டீர்களா..”

தமிழ்க் கெட்ட வார்த்தை உதடுகளிலிருந்தும் வெளியேறியது. எஞ்சியிருந்த பியரை ஒரே மூச்சில் குடித்து முடித்தேன். சொண்டில் படிந்திருந்த நுரையை புறங்கையால் ஒரே வீச்சில் துடைத்தேன். எதுவும் சொல்லிக்கொள்ளாமல் விறுவிறுவென்று திரும்பி நடக்கத் தொடங்கினேன். “ச்செய்க்..”

இன்று இரவு என்னுடைய நாவலை நான் எழுதத் தொடங்குவேன். மிக நிச்சயமாக தமிழரசி சொன்ன கதைகளை அதில் சேர்த்துக் கொள்வேன். ஆனால், அந்த நாவலில் ஒருபோதும் தமிழரசிக்கு இடமில்லை. அவளை ஒரு வெள்ளைக்காரியாக, அல்லது கயானாக் காரியாக.. இல்லை.. வேண்டாம்.. அவளை  ஒரு சிங்களத்தியாக … ஆமாம்.. மாற்றிவிடவேண்டும். ஷிராணி.. ம்…. நுவாந்தி.. ம்… நிலுமி.. ம்… சந்திரிக்கா…. ஆம்! சந்திரிக்கா

-FICTION-

 

 

 

 

Filed under: Uncategorized

Leave a Reply