ஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா? – நேர்காணல்

19FEB, 26FEB 2017 திகதிகளில் இலங்கை தினக்குரல் பத்திரிகையில் வெளியானது.
நேர்காணல் : கருணாகரன்


1. கூடிய கவனிப்பைப் பெற்ற உங்களுடைய “ஆறாவடு”, “ஆதிரை” க்குப் பிறகு, யுத்தமில்லாத புதிய நாவலைத் தரவுள்ளதாகச் சொன்னீங்கள். அடுத்த நாவல் என்ன? அது எப்ப வருது?

அந்த நாவலுக்கு இப்போதைக்குக் கலையாடி என்று பெயர். எழுதிக்கொண்டிருந்த காலம் முழுவதும் பெரிய மன அழுத்தத்தைத் தந்த நாவல் ஆதிரை. அந்த நாவல் ஒரு கட்டத்திற்குப் பிறகு தன்னைத்தானே கொண்டிழுத்துக்கொண்டுபோனபோது ஒரு கையாலாகாதவனாக நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்., மனம் சலிச்சு, இதிலிருந்து வெளியேறி விடவேண்டுமென்று நொந்துகொண்டிருந்தேன். அதுவொரு அலைக்கழிப்பான காலம். அதை எழுதிமுடித்து அது வெளியாகிவிட்ட பிறகும் கூட, துயரப்படும் ஒரு மாந்தர் கூட்டத்தைக் கைவிட்டுவந்த ஓர் உணர்வுதான் இருக்கிறது. இதை மறுபடியும் எழுதித்தான் கடக்கவேண்டும்போலிருக்கிறது. உண்மையைச் சொன்னால் மனது ஒரு கொண்டாட்டத்தை விரும்புகிறது.
ஆறாவடு எள்ளலும் துள்ளலுமாக எழுதப்பட்ட ஒரு நாவல். இப்பொழுது யோசித்தால் ஒரு துயரக்கதையை பகிடியும் பம்பலுமாக எப்பிடிச் சொல்லியிருக்க முடியும் என்று தோன்றுகிறது. அதனால் அந்த மொழியை மட்டும் எடுத்துக்கொண்டு அவுஸ்ரேலியாவின் மெல்பேண் நகரிலிருந்த ஒரு பல்கலைக்கழகம், ஒரு பெற்றோல் ஸ்ரேஷன், ஒரு மக்டோனால்ட்ஸ் உணவகம், ஒரு மாணவர் விடுதி இவற்றைச் சுற்றுகின்ற ஒரு குறுநாவலாக அது உருவாகியிருக்கிறது. கலையாடியை ஆண் மனமும், பெண் உடலும் என்றவாறாகக் குறுக்கிச் சொல்லலாம்.

img_3867

2. இப்படி வெவ்வேறு தளங்களில் புதிய வாழ்க்கையை எழுதுவது அவசியமே. ஆனால், புதிய நாவலில் “ஆண்மனமும் பெண் உடலும் பேசப்படுகின்றன” என்று சொல்கிறீங்கள். இதில் நீங்கள் குறிப்பிடும் பெண் உடல் என்பது தமிழ்ப் பெண்ணை மையப்படுத்துகிறதா? தவிர, பெண்ணுடலை எந்த வகையில் வைத்து நோக்குகிறீங்கள்?

கலையாடியில் ஓர் ஆண்மனம், பெண்ணைப் புரிந்துகொண்டிருக்கிற அரசியல்தான் பேசப்பட்டிருக்கிறது, பெண்ணை வெறும் உடலாக நோக்குவதும், அதனை ஒரு சொத்து என்று கருதி அதில் தனது உரிமையை நிறுவும் அதிகாரமும், பெண்ணின் ஆன்மாவை எதிர்கொள்ளும் துணிச்சலற்று, தோல்வியை மறைக்க அவளின் உடலில் கட்டவிழ்க்கும் வன்முறையும்தான் ஓர் இழை என்றால் அதற்குச் சமாந்தரமாக மறு இழையில் இவற்றையெல்லாம் கேலியாக்கி எள்ளி நகையாடும் பெண் உணர்வும், சமயங்களில் சிலிர்த்துத் திருப்பியடிக்கும் கோபமுமாகப் பிரதி நிறைந்திருக்கிறது. மிகுதியைப் பிறகொருநாளில் பேசுவோம்.

3. “ஆதிரை” பற்றிய உங்களுடைய இன்றைய மனநிலை அல்லது அனுபவம் எப்பிடியிருக்கு?

அதனுடைய அரசியலிலும், இலக்கியத்திலும் சரியையும் நிறைவையும் உணர்கிறேன். என்றாவது ஒருநாள், அதன் இலக்கியத் தரத்தின் பற்றாக்குறையை உணரும் விதத்தில் என்னுடைய சிந்தனைகள் மாறுபடலாம். ஆனால் ஈழப்போர் தொடர்பான அதன் அரசியல் செய்தியில் நான் என்றைக்கும் மாறுபட்டு நிற்கப்போவதில்லை.

4. அதை எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? எதுவும் மாறுதலுக்குள்ளாகும். மாற்றம் என்பதே அடிப்படையானது என்பதால், ஈழப்போர் மற்றும் ஈழப்போராட்டம் தொடர்பான கருத்தியலும் நோக்கும் மாறுபடுவதற்கான, மீள் பார்வைக்குட்படுவதற்கான சூழல் உருவாகும்போது உங்களுடைய நிலைப்பாடும் அனுபவமும் மாறுதலடையுமல்லவா?

நாவலில் ஒரு சாமானிய மக்களின் பார்வைதான் முதன்மை பெறுகின்றது. வாசகர் அதன் அரசியலை மொழிபெயர்க்கிறார். ஒரு சாமானியனின் வாழ்வும், துயரமும், மகிழ்ச்சியும் அவனுடைய வாழ்வின் அடிப்படையாயிருந்தவை. காலம் மாறுகிறபோது ஆய்வாளர்கள் வேறுவேறு விதமாக மொழிபெயர்க்கலாம். ஆனால் அடிப்படையாயிருந்தவை மாறிவிடப்போவதில்லை. அதனால்த்தான் இலக்கியப் பிரதிகளை காலத்தால் அழியாதவை என்கின்றோம். சரி ஒரு பேச்சுக்கு என்னுடைய நிலைப்பாடும் அனுபவமும் மாறிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள், நாவலில் நான் உருவாக்கிய ஏதோ ஒரு பாத்திரத்தின் அரசியல் மாறிவிடுமா என்ன..? அது நாவலில் செலுத்திய செல்வாக்கு மாறிவிடுமா..?

5. அது (ஆதிரை) வாசக, விமர்சன, இலக்கியப் பரப்பில் உண்டாக்கியிருக்கும் அடையாளம் குறித்த உங்களுடைய புரிதல் அல்லது மதிப்பீடு?

யாரால் எழுதப்பட்டது என்ற ஒரு செய்தியை வைத்தே அது பெருமளவிற்குப் பார்க்கப்பட்டது. அதன்படியே.. புலி ஆதரவு, புலி எதிர்ப்பு.. அல்லது எழுதியவரைப்போலவே குழப்பமானது என்றவாறாக அடையாளப்படுத்தியிருந்தார்கள். ஒரு இலக்கியப் படைப்பை அது வெளியாகிய நாளிலேயே இது புலி ஆதரவு நாவல், எதிர்ப்பு நாவல் என்று வரையறுக்கிற திறனாளர்கள் நம்மிடையில்தான் அதிகமிருக்கிறார்கள் என்பதை பெருமையோடு கூறிக்கொள்கிறேன்.

6. ஆனால், புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்பதெல்லாம் அர்த்தமுடையதா? அத்தகைய சொல்லாடல்களும் அடையாளப்படுத்தல்களும் அவசியம்தானா? இத்தகைய அணுகுமுறை எரிச்சடைய வைக்கும் ஒன்றாகவே பலராலும் உணரப்படுகிறது. தவிர, இந்த இரண்டு தரப்பினரும் அடிப்படையில் ஒரு புள்ளியில்தான் நிற்கிறார்களல்லவா?


முதலில் அடிப்படைப் பிரச்சினைகள் என்ன என்பது தொடர்பான கேள்விகளை எமக்கு நாமே கேட்கும்போது, நீங்கள் சொன்ன தரப்புக்கள், அவற்றின் செயல்முறை பற்றியதான விடயங்களைக் கடந்துவிடுவோம் என்று நினைக்கிறேன். இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் அடக்குமுறையை எதிர்கொள்கிறார்களா..? அவர்கள் இரண்டாம் தரப் பிரசைகளாகக் கருதப்படுகிறார்களா..? சம வாய்ப்புக்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றனவா.. ? இவைதான் பிரச்சினைகளின் அடி நாதம். இவற்றை நோக்கி நம்முடைய உரையாடல் நகர்கின்றதென்றால் ஆதரவு – எதிர்த் தரப்புக்களைப்பற்றி அதிகம் பேசத் தேவையில்லை. ஆனால் நாம் ஆதரவு – எதிர்ப்பு, அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறோமெனில் எங்களுடைய நேர்மையை நிச்சயமாகச் சந்தேகிக்கத்தான் வேண்டும். மக்களுடைய பிரச்சினை தொடர்பில் எமக்கிருக்கின்ற அக்கறையை கேள்விக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்.

7. இந்தியாவிலும் புலம்பெயர் நாடுகளிலும் “ஆதிரை” அறிமுகமான அளவுக்கு இலங்கையில் அறிமுகம் நிகழவில்லை என எண்ணுகிறேன். இதைப்பற்றிய உங்களுடைய அவதானம் என்ன? இதற்கான காரணம் என்ன?

என்னுடைய முயற்சியில்லை என்பது ஒரு காரணம். பதிப்பாளரும், “நல்ல புத்தகம் அதுவாகப் போகும், நாம் எதற்குத் தனியாக மெனக்கெடவேணும்.. அதனால் வேலையைப் பாருங்க சயந்தன்” என்று வழமைபோல சொல்லிவிடுவார். அவர் சொல்வதுபோலவே நடப்பதால் நானும் தனி முயற்சிகளைச் செய்வதில்லை. இந்தியாவிலும், இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் அறிமுக நிகழ்வுகளையும் புத்தக விநியோகங்களையும் நண்பர்கள் தம் சொந்த முயற்சியில் செய்திருந்தார்கள். அவர்களை நன்றியுடன் நினைவு கூருகிறேன்.
இலங்கையில் இலக்கிய அமைப்புக்கள், ஒரு பண்பாட்டு நிகழ்வாக பிரதேசங்கள் தோறும், புத்தகச் சந்தைபோன்ற ஏற்பாடுகளை ஓர் இயக்கமாக ஏற்படுத்தினால், பதிப்பகங்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தினால் ஆதிரை மட்டுமல்ல, பல்வேறு புத்தகங்களையும் இலங்கையிற் கொண்டு சேர்க்கலாம். அவ்வாறு ஓர் அதிசயம் நிகழுமெனில் துறைசார்ந்த பதிப்பகங்களும் இலங்கையில் உருவாகும்.

8. நிச்சயமாக. அதற்கான முயற்சிகளை எந்தத் தளத்தில் முன்னெடுக்கலாம்? இதில் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பு எப்படி அமையக்கூடும்?

முதலாவது சந்தை இல்லை. சந்தை இருந்திருப்பின் இலாப நோக்கம் கருதியாவது அதை யாராவது முன்னெடுத்துச் சென்றிருப்பார்கள். இப்பொழுது வேறு வழியே இல்லை. வேற்றுமைகளுடன் ஒன்றுபட்டுச் செயற்படக்கூடிய புள்ளிகளை இனங்கண்டு இலங்கை முழுவதுக்குமான வலைப்பின்னலை உருவாக்குவதுதான் அவசியமானது. தன் முனைப்பு அற்ற நபர்களால் இப்படியொன்றை நிச்சயதாக ஏற்படுத்த முடியும். இன்னொரு விடயம், முற்போக்காச் சிந்திப்பவர்களாலேயே இப்படியான உதாரண அமைப்புக்களைக் கட்டமுடியாதபோது எவ்வாறு வெகுசன அரசியலில் சிறப்பான அமைப்புக்களை உருவாக்க முடியும்.. என்று நம்பிக்கையீனம் எழுகின்றது. நீங்கள் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்புப் பற்றியும் ஏதோ கேட்டீர்கள்.. சரி விடுங்கள்.. அடுத்த கேள்வியைக் கேளுங்கள்.

9. இலங்கை, இந்தியா, புலம்பெயர் நாடுகள் என்ற மூன்று தளங்களிலும் ஆதிரை எவ்வாறு உணரப்பட்டுள்ளது?

வாசகப் பரப்பில் தமிழ்நாட்டிலிருந்தும், இலங்கையிலிருந்தும் எழுத்துமூல விமர்சனங்கள் நிறைய வந்துள்ளன. எழுத்துப்பரப்பில் இயங்குகிறவர்களில் தமிழ்நாடு, புலம்பெயர்நாடுகளிலிருந்து பலரும் ஆதிரை பற்றிக் கவனப்படுத்தியிருந்தார்கள். ஆனாலும் அதனுடைய அரசியல் செய்தியை பலரும் மௌனத்தோடு கடந்திருந்தார்கள் என்று உணர்கிறேன். விமர்சனமென்பது அதை நிகழ்த்துபவரின் அரசியல் நிலைப்பாடு, ரசனை மட்டம் போன்றவற்றோடு தொடர்புடைய, அதற்கான முற்றுமுழு உரிமையை அவர் கொண்டிருக்கிற ஒரு வெளிப்பாடு என்ற புரிதலோடு இயங்கினாலும் சில கருத்துக்கள் இதயத்திற்கு நெருக்கமாகிவிடுகின்றன. “காலையில் படிக்கத்தொடங்கினேன், இப்பொழுது நள்ளிரவு ஒரு மணி. முடித்துவிட்டுப் பேசுகிறேன்” என இயக்குனர் ராம் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள், எழுத்தாளர் இரவி அருணாச்சலம் நாவலைப் படித்துக்கொண்டிருந்தபோதே உரையாடியவை அனைத்தும் நான் ரசித்தவை. நாவல் வெளியாகிய ஒரு மாத காலத்தில், நாவல் பயணப்பட்ட நிலங்களுக்குச் சென்று, அவற்றைப் படம்பிடித்து, ஒரு தொகுதிப் படங்களாக ஒரு வாசகர் அனுப்பியிருந்தார். அதுவொரு நெகிழ்வான தருணமாயிருந்தது. ஓம்.. ஒரு விருது மாதிரி..

10. தொடர்ச்சியாக யுத்தம் சார்ந்தே அதிகமாக எழுதப்படுகிறது. ஈழத்தமிழர்கள் யுத்தத்தை இனியும் பேச வேண்டுமா? அல்லது அது தேவையில்லையா? அப்படிப் பேசுவதாக இருந்தால் எந்தப் பகுதிகள் இனிப் பேசப்பட வேணும்?

யுத்தம் எல்லோரையும் பாதித்திருந்தது. எதிர்கொண்டவர்கள், பங்காளிகள் என பாதிக்கப்பட்ட எல்லோரும் அதிலிருந்து வெளியெறுவதற்கான ஆற்றுப்படுத்தல் கிடைக்கும் வரையில் அந்த நினைவுகளால் பீடிக்கப்பட்டிருப்பார்கள். ஒரு சமூகத்தைப் பீடித்திருக்கும் நினைவுகளின் வலிகள் எழுத்தாவதில் ஆச்சரியமெதுவும் இல்லை. ஆகவே இதைத்தான் பேச வேண்டுமென்ற வரையறைகள் தேவையில்லை. ஆயினும் காலப்போக்கில் பின் யுத்தகாலத்தில் ஏற்படுகின்ற சமூக, பொருளாதார அசைவியக்கக் குழப்பங்கள், ஈழத்தில் இனிவரும் எழுத்துக்களில் செல்வாக்குச் செலுத்துமென்று நினைக்கிறேன்.

நான், மனித அகவுணர்ச்சிகள் பற்றி அவற்றின் உறவுச் சிக்கல்கள், முரண்கள் பற்றியெல்லாம் அதிகம் எழுதப்படவேண்டுமென்று விரும்புகிறேன். ஆதிரையில் யுத்தம் பின் திரையில் நிகழ்ந்துகொண்டிருக்க, அந்தக் கதை மனிதர்களின், அன்பு, குரோதம், விசுவாசம், காழ்ப்பு என அகத்தின் உணர்ச்சிகளை நான் பேசியிருக்கிறேன். ஒருநாள் நாஞ்சில் நாடான் பேசும்போது சொன்னார். ஆதிரையிலிருந்து யுத்தத்தைப் பிரித்தெடுத்துவிட்டாலும், அதற்குள்ளே ஒரு கதையிருக்குமென்று. அதை நானும் ஆமோதிக்கிறேன்.

11. யுத்தம் அரசியலின் விளைபொருள். வாழ்க்கை அதைக் கடந்தது. பெரும்பாலான யுத்தக்கதைகள் அரசியலில் மட்டும் தேங்கியிருப்பதேன்? யுத்தத்தில் வெற்றிகொள்ள முடியாததன் வெளிப்பாடு இதுவா?

அப்படியில்லை. யுத்தம் எங்களுடைய வாழ்வின் ஓர் அங்கமாக இருந்தது. எம்முடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் அதனுடன் தொடர்பு பட்டிருந்தன. யுத்தத்திற்கு வெளியே ஒரு வாழ்க்கை இருந்திருப்பின் – நீங்கள் கேட்கிறது நிச்சயமாகச் சாத்தியமாயிருந்திருக்கும். ஆனால் இருக்கவில்லை. இதனை எழுதித்தான் கடக்க முடியும்.

12. ஆதிரையை வாசித்தவர்கள், நாவலில் காண்கிற நிலப்பகுதிக்குச் சென்று அந்தப் பகுதிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நிலப்பகுதியைச் சார்ந்த நாவல்களுக்கு இப்படி ஏற்படுவதுண்டு. ஜானகிராமனின் நாவல்களைப் படித்து விட்டு கும்பகோணம் தெருக்களில் திரிந்த வாசகர்கள் அதிகம். அதைப்போல, சிங்காரத்தின் நாவல் மதுரைத்தெருக்களில் பலரை நடக்க வைத்தது. மாதவன் கதைகள் கடைத்தெருக்களைப் போய்ப்பார்க்க வைத்தது. ஆதிரை எழுத முன்னும் எழுதிய பிறகும் நீங்கள் அந்த நிலப்பகுதியை எப்படி உணர்ந்தீர்கள்?

ஆதிரையின் பிரதான கதை நிகழும் நிலத்தில், அந்த மனிதர்களோடு நான் தொண்ணூறின் மத்தியில் மூன்று வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். அந்த மனிதர்களுக்கு முன்னால் ஒரு இருபது வருடத்தையும் பின்னால் ஒரு பத்து வருடத்தையும் புனைவில் சிருஸ்டித்ததுதான் நாவலாகியது. அதற்கு முன்னர் அந்த நிலம் ஒரு நிலமாகவே எனக்குள்ளிருந்தது. பிறகு, இதோ, உங்களோடு உரையாடிக்கொண்டிருப்பதற்கு 3 நாட்களின் முன்னர்தான் சென்று வந்தேன். இப்பொழுது ஒரு முழுமையான சித்திரமாக, ஒரு வாழ்க்கையாக் காட்சிகள் என் கண்முன்னால் விரிந்திருக்கின்றன. புனைவுக் கதாபாத்திரங்கள் கூட, இதோ இந்த இடத்திலேயே அவர்களுடைய கொட்டில் இருந்தது என்று கண்ணில் தோன்றினார்கள். கிட்டத்தட்ட அந்த ஒருநாள் மறுபடியும் நாவலுக்குள் வாழ்ந்ததுபோலிருந்தது.

13. இலக்கிய வாசிப்பும் இலக்கியச் செயற்பாடுகளும் சற்று அதிகரித்துள்ளதாகத் தோன்றுகிறது. எழுதுவோர், வாசிப்போர், வெளியீடுகள், வெளியீட்டகங்கள், உரையாடல்கள், அபிப்பிராய வெளிப்பாடுகள், விவாதங்கள், சந்திப்புகள் எனத் தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் உருவாகியுள்ளன. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது?

அவ்வாறான ஒரு மாற்றம் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை. சமூக வலைத்தளங்கள் தொகுத்துத்தரும் ஒரே சட்டத்தில் தோன்றும் காட்சியினால்தான் அப்படித் தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, ஒப்பீட்டளவில் வீழ்ச்சியைத்தான் நான் உணர்கிறேன். சிற்றிதழ்களின் எண்ணிக்கை, எழுத்தாளர்களின் எண்ணிக்கை, புத்தகங்களின் எண்ணிக்கை அவற்றையே எமக்கு எடுத்து இயம்புகின்றது. இன்றைக்கு ஈழத்தில் ஒரு இலக்கியப்பிரதியின் ஒரு பதிப்பென்பது 300 பிரதிகள்தான். ஓர் இலக்கிய நிகழ்வுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 20 தான்.

14. ஆனால், இடையிருந்த காலத்தை விட ஒரு தொடர்ச்சியான உரையாடல் நிகழ்கிறதே. இன்றைய வெளிப்பாட்டை அல்லது செயற்பாட்டை வெளிப்படுத்துவதில் சமகால ஊடகம் அல்லது வெளிப்பாட்டுச் சாதனம் சமூக வலைத்தளங்கள்தானே ?

சமூக வலைத்தளங்கள் என்ன செய்தனவென்றால், அது முன்னர் இருந்த தீவிர இலக்கியம் – வெகுஜன இலக்கியம் – இலக்கியத்துடன் ஒரு தொடுசலும் வைத்துக்கொள்ளாத சமூகம் என்ற வேறுபாடுகளை, அல்லது அவற்றுக்கிடையிலிருந்த கோட்டை அழித்துப்போட்டுவிட்டன. அந்தச் சாதகத்தன்மைதான் நீங்கள் சொல்வதைப்போன்ற ஒரு தோற்றப்பாட்டைக் கொடுக்கிறது. அதுமட்டுமில்லை. எழுத்தாளர் – வாசகர் என்ற கோட்டைக்கூட இந்த நுட்பம் இல்லாமற் செய்திருக்கிறது. அதாவது இலக்கிய அதிகாரப் பல்லடுக்குத் தன்மையை இல்லாமல் செய்திருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன். ஆனால் நான் முதற் கூறிய பதிலுக்கு வேறு கோணமுண்டு. எத்தனை எழுத்துக்கள் புத்தக வடிவம் பெறுகின்றன.. எத்தனை பேர், உழைப்பைச் செலுத்தி காலத்திற்கும் நின்று பயனளிக்கக்கூடிய எழுத்தை உருவாக்குகிறார்கள். அந்த எண்ணிக்கையை யோசித்துப் பாருங்கள்.. சமூக வலைத்தளம் அந்தப் பரப்பில் ஒரு துரும்பைத்தன்னும் துாக்கிப்போடவில்லை.

15. புதிய இதழ்கள் எப்படி வரவேணும்? சமூக வலைத்தளங்களும் இணையமும் வாழ்க்கை முறையும் மாறியிருக்கும் சூழலில் சிற்றிதழ்களின் இடம் எப்படி இருக்கப்போகிறது?

சிற்றிதழ்கள் ஒரு சமரசமற்ற நோக்கத்திற்காக, அதை இலக்காகக் கொண்டு தீவிரத்தோடு உருவானவை. அந்த வெளியீட்டாளர்களைக் குட்டிக் குட்டி இயக்கங்களாகத்தான் பார்க்கிறன். மைய நீரோடடத்தில் இல்லாத / விளிம்பு நிலையில் உள்ள / அதிகம் கவனத்தை பெறாத கருத்தியலோ / கோட்பாடோ (அது கலை இலக்கிய கோட்பாடாக இருக்கலாம் அல்லது அரசியல் கருதுகோளாக இருக்கலாம் ) எண்ணிக்கையில் மிகச் சிறிய இலக்கத்தில் உள்ளவர்களால் மிகப்பெரிய உழைப்பை கொடுத்து முன்னெடுக்கப்படுபவை. இன்று நாம் காணும் சகல கருத்தியல்களும் ஏதோவொரு காலத்தில் மிகச்சிறிய எண்ணிக்கையுடைய நபர்களால் எடுத்துச் செல்லப்பட்டவையே. இது சிற்றிதழ்களின் பொதுவான பண்பு.

ஆனால் இப்போது பத்துப்பேரிடம் படைப்புக்களை வாங்கித் தொகுத்துவெளியிடுகிற மேடைகளாக இதழ்கள் உருமாறிவிட்டன. வெகுசன ரசனையிலிருந்து சற்று உயரத்திலிருக்கிற படைப்புக்களைத் தெரிவதைத் தவிர ஒரு கருத்தியல் சார்ந்த நோக்கு அவைகளுக்கு இல்லை. ஈழத்தில் வெளிவருகிற இதழ்களில், ஞானம், ஜீவநதி, புதியசொல் எல்லாமுமே நாலு கவிதை, ரெண்டு கதை, மூன்று கட்டுரையென்று வாங்கி கவரும் விதத்தில் லே அவுட் செய்து அச்சிட்டுக்கொடுக்கின்ற தொகுப்பு இதழ்களாகத்தான் பார்க்கிறேன்.

ஆனால் என்னைக் கேட்டால் இணையத்தின் வருகைக்குப் பிறகு இப்படித் தொகுப்பு இதழ்களின் தேவை இல்லாமல் போய்விட்டது என்றுதான் சொல்வேன். வெறுமனே அச்சு வடிவத்திற்கு வருவது மாத்திரமே தொகுப்பு இதழ்களின் பாத்திரமாகிவிட்டது. அதுமட்டுமில்லை. அவரவர் இருப்பை பதிவு செய்யும் நோக்கோடு இயங்குவதையும் வருத்தத்தோடு கருதிக்கொள்கிறேன்.

இன்றைக்கும் மைய நிரோட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியாத ஏராளமான கருத்தியல்களை முன்னெடுக்க வேண்டியவர்களாகத்தான் நாங்கள் இருக்கிறோம். நிறைய அசமத்துவ போக்குகள் எங்களைப் பாதிக்கின்றன. இருப்பினும் நாம் நம்புகின்ற அல்லது எமக்குச் சமாந்திரமான கருத்தியல் ஒற்றுமை உள்ளவர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற சிற்றிதழ்களின் அல்லது இயக்கங்களின் வெற்றிடம் நம்பிக்கை தரக்கூடியதாக இல்லை. வெற்றிடத்தை நிரப்புவது யார்…?

16. மாற்றிதழ்கள் அல்லது மையநீரோட்டம் தவிர்க்க விரும்பும் கருத்தியலுக்கும் அடையாளத்துக்குமுரிய எழுத்துகள், இதழ்கள் இன்று வந்தால், அதன் மீது புறக்கணிப்பிற்கான வசையும் எதிர்ப்புமல்லவா வெளிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக துரோகச் செயலின் வெளிப்பாடு என்ற விதமாக. தமிழகத்தில் சிற்றிதழ்கள் எதிர்கொள்ளப்பட்ட நிலைமையும் ஈழத்தில் இன்றுள்ள நிலைமையும் வேறானது. ஆகவே, இதை எப்பிடி எதிர்கொள்வது?

சிற்றிதழ் என்றாலே வசையும் எதிர்ப்பும் கூடப்பிறந்தவைதானே.. அவற்றுக்கு அஞ்சி ‘பங்கருக்குள்’ ஒளிந்துகொள்ளமுடியுமா.. ? ஒரு தெளிந்த நோக்கம் இருந்தால்போதும். சமாந்தரமான கருத்துள்ளவர்களின் பங்களிப்போடு சிற்றிதழ் இயக்கத்தைச் செயற்படுத்தமுடியும். நோக்கம் இல்லையென்றால், அல்லது எதிர்ப்புக்கு அஞ்சினால் சமரசத்திற்குத்தான் உள்ளாக நேரிடும். சமரச இதழ்கள் ஒரு போர்முலாவுக்குள் தம்மைச் சிறைப்படுத்திவிடுவன. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், காலச்சுவடு, உயிர்மை எல்லாமுமே ஒரு போர்முலாவிற்குள் இருந்தாலும், அவை தமக்குப் பின்னால் பெரிய பதிப்பகங்களைக் கொண்டியங்குகின்றன. அவர்களுடைய பதிப்பு முயற்சிதான் காலம் தாண்டியும் பேசப்படுமேயொழில இதழ்கள் அல்ல. இது தெரியாமல் ஈழத்து இதழ்களும் அதே போர்முலாவிற்குள் நிற்பது வருத்தம் தருவது.

17. சமூக வலைத்தளங்கள் இலக்கியத்துக்கு எப்படிப் பங்களிக்கின்றன? எவ்வாறான பங்களிப்பை அது செய்ய முடியும்?

இலக்கியம் தொடர்பான உரையாடலை மேலும் விரித்து விரித்துச் செல்ல வைத்ததை சமூக வலைத்தளப் பங்களிப்பின் ஒரு நல்ல விடயமாகப் பார்க்கலாம். ஓர் உரையாடலில் ஆர்வமுள்ள எல்லோரையும் அதில் பங்காளிகளாக்கியது ஒரு குறிப்பிடத்தகுந்த விடயம். அச்சு ஊடகங்களில் அது நடக்கவில்லை. அங்கே ஒரு தணிக்கையிருந்தது. மற்றையது நம்பிக்கையளிக்கக் கூடிய பலர் தம்மைச் சுயாதீனமாக வெளிப்படுத்திக்கொள்கிற வெளியாக அது இருந்தது. அது முக்கியமானது. தவிர இலக்கியச் செயற்பாடுகளை, ஆர்வலர்களை அது ஒருங்கிணைக்கிறது. திரட்டுகிறது. அதேவேளை சமூக வலைத்தளங்களில் ஒரு ‘திணிப்பு’ இருக்கிறது. மேலோட்டமான முன் கற்பிதங்களை இது ஏற்படுத்திவிடுகிறது.

அதனால் சமூக வலைத்தளங்களில் உலாவுகிற போது மூளையை அவதானமாக நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டியுள்ளது.

18. தமிழிலக்கியத்தின் ஆதிக்கம் அல்லது செல்வாக்கு இன்னும் இந்தியாவிடம்தான் உள்ளது என்று இந்திய எழுத்தாளர்கள் நம்பும் நிலை உண்டென்று கூறப்படுவதைப்பற்றி?

நிச்சயமாக, அது தமிழ்நாட்டை மையப்படுத்தியுள்ளதாகத்தான் கருதுகிறேன். புனைவு என்ற தளத்தில், ஈழப்பிரதிகள், தமிழ்நாட்டின் கவனத்தைப் பெறுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அப்புனைவின் கதைக்களம் மற்றும் அனுபவங்கள், அவர்களுடைய அனுபவப்பரப்பிற்கு அப்பால் நிகழ்வதால், இந்தக் கவனம் நிகழ்கிறது. அல்லது, ‘அடிபட்ட இனம்’ என்ற கழிவிரக்கத்தாலும் கூட இந்தக் கவனம் ஏற்படுகிறது. இவ்வாறான கழிவிரக்கத்தினால் எனது படைப்பொன்று தமிழகத்தில் கவனத்திற்குள்ளாகுமானால் அந்நிலையை நான் வெறுக்கிறேன்.

மேற்சொன்னதைத் தாண்டிய ஒரு கரிசனை, ஈழ இலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு உள்ளதா என்பது கேள்விக்குரியது. ஏனெனில் இன்றைக்கும் ஈழத்தில் ஒன்றிரண்டோ ஐந்து ஆறோ புத்தகங்கள் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றில் எதைப்பற்றியாவது தமிழகத்திற்குத் தெரியுமா.. நாங்களாகக் காவிக்கொண்டு போனாலேயன்றி தமிழகம் தானாக அவற்றை அறிந்துகொண்டிருக்கிறதா..

ஆக அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.

அதே வேளை, கலை இலக்கியம் சார்ந்த கோட்பாட்டு தளத்தில் ஈழத்தின் பங்களிப்பு எந்தளவு துாரத்திற்குத் தாக்கம் செலுத்துகின்றது என்பதுவும் கேள்விக்குரியதே. புதுப்புதுச் சிந்தனைகள், புதிய கருத்தியல்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் மொழிபெயர்ப்புக்கள் என ஈழத்தில் ஏதாவது நிகழ்கிறதா? முன்பு அவ்வாறான ஒரு சிந்தனைச் செல்நெறி மரபாகவே இருந்திருக்கிறது. இன்று இல்லை. இனிமேலும் அதற்கான நம்பிக்கையேதும் தென்படுகிறதா.. ?

19. முன்பிருந்த சிந்தனைச் செல்நெறி பின்னர் இல்லாமல் போனதேன்? அத்தகையை சிந்தனை எழுச்சி எவ்வாறு சாத்தியமாகும்?

பல்கலைக்கழகத்தின் சீரழிவும் ஒரு காரணமென்று நினைக்கிறேன். முன்பென்றால் அங்கிருந்தவர்கள் அதைச் செய்தார்கள். முக்கியமாக அவர்கள் பல்கலைக் கழகம் அல்லாத சமூகத்துடனும் ஊடாடினார்கள். சிந்தனைகளை வெளியே கடத்தினார்கள். இன்று சமூகத்திற்கும் பல்கலைக் கழகத்திற்கும் இடையில் ஒரு தொடர்பும் இல்லை. அது தனியே வேலைக்கு ஆட்களைத் தயார்செய்துகொண்டிருக்கிறது.

20. உங்களுடைய புதிய நாவல்களின் அரசியல் என்னவாக இருக்கும்? அவற்றின் களம் எது?

நாவல்களில் என்ன அரசியலென்று நான் சொல்லவேண்டுமா? விமர்சகர்கள் தான் அதைக் கட்டுடைத்துக் கூற வேண்டும். ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். நான் புனைவுக்கு ஊடாக அரசியல் இலக்கொன்றை நோக்கி வாசகர்களை அழைத்துச்செல்லும் மேய்ப்பன் அல்ல. புனைவை நான் அவ்வாறே புரிந்தும் வைத்துள்ளேன். எனது நாவல்கள், அதிகாரமற்ற சனத்தின் பார்வையில், அவர்களைச் சூழவுள்ள சமூகத்தையும் அரசியலையும் பார்ப்பதுவே. நாவலோட்டத்தில் எனது சொந்த அரசியலுக்கு குறுக்கீடுகள் வருமானால் அவற்றை நான் தணிக்கை செய்வதில்லை.
ஓம். புனைவில் பாத்திரங்களுக்கு அரசியல் இருக்கும்தான். பாத்திரங்கள் அரசியலைப் பேசும்தான். ஆனால், அவ்வரசியலுக்கு மாற்றான கருத்துக்களை கொண்ட பாத்திரங்களும் இயல்பிலேயே அங்கிருக்கும். அப்பாத்திரம் தனக்கான நியாயத்தைப் பேசுவதற்கான வெளியும் அங்கிருக்கும். அதுதானே அப்பாத்திரத்திற்கு நான் செய்கின்ற நியாயம். ஒன்றுக்கொன்று எதிரான பல்வேறு நிலைப்பாடுகளை பிரதிபலிக்க கூடிய ஒரு கதைக்களனை நான் என்னுடைய படைப்புக்களில் உருவாக்கியுள்ளேன். ஒரு சமூகத்தின் குறுக்குவெட்டு அப்படித்தானேயிருக்கும்..
மற்றும்படி எனக்கு என்னுடைய அரசியலை நிறுவும் ஒரு தேவை இருக்குமானால், நிச்சயமாக நான் அதை ஒரு கட்டுரையூடாகச் சொல்லவே விரும்புவேன். நான் தற்போது இயங்கும் நாவல் வடிவத்தின் ஊடாக, ஒரு பெரும் அனுபவத் தொற்றை வாசகருக்குள் நிகழ்த்துவதே என்னுடைய பணி. ஒருவேளை அந்த அனுபவத்திற்கூடான சிந்தனை அவருக்கு ஒரு அரசியல் தெரிவை ஏற்படுத்தக்கூடும். மக்கள் சார்ந்த அரசியலாக அதுவிருக்கும் என்று நம்புகிறேன்.

21. இலங்கையின் எதிர்கால அரசியல் குறித்த நம்பிக்கைகள்?

நம்பிக்கையளிக்கக் கூடியதாக எதையும் உணரமுடியவில்லை. அதற்காக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம், நம்பிக்கையைத் தொலைத்த சமூகமாக இருக்கவேண்டியதுமில்லை.

அரசியற் சிந்தனைகளை முழுநேரமாகச் செயற்படுத்திவரும், ஓர் இளைய தலைமுறையைக்காணுகிறேன். சமூகம் அவர்களைத் தாங்கிக்கொண்டால் மட்டுமே, அவர்களால் தொடர்ந்து இயங்க முடியும். அந்த நிலைமை தோன்றும்போதே அரசியல் நம்பிக்கையளிக்கக் கூடியதாகவும் மாறும். இன்று நம்மிடையில் உள்ள அரசியல் தலைமைகளில் பெரும்பாலானவர்கள் அரசியலை பொழுதுபோக்காகச் செய்பவர்கள், தங்களுடைய ஓய்வு காலத்தில் செய்பவர்கள், பகுதி நேரமாகச் செய்பவர்கள், அல்லது தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காகச் செய்பவர்கள். இவர்களுடைய தலைமையில் இயல்பாகவே அரசியலின் தார்மீக அறம் இல்லாமற் போய்விடுகிறது.
எங்களிடையே ஒரு சாமானிய மனிதன், கட்சியொன்றின் கடைசி உறுப்பினராகி, படிப்படியாக மக்களுடைய செல்வாக்கைப் பெற்று, தலைவனாகும் சந்தர்ப்பமேதாவது உள்ளதா.. ? ஏதாவது ஒரு கட்சி பிரதேசவாரியாக தன்னுடைய கட்சிசார் நபர்களைக் காட்சிப்படுத்தியுள்ளதா..? பொதுசனத்தில் ஒருவர் ஒரு கட்சியில் அதன் கொள்கைகளைப் பார்த்து இணைந்து செயற்படுகிற நிலைமை உண்டா..? கட்சிகளின் தலைமைகள் உருவாகுவதில், கட்சியின் கடைசி உறுப்பினர்களின் பங்கு என்ன..? அதிலேதாவது ஜனநாயக வழிமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா..?
இவற்றுக்கெல்லாம் ஆம் என்ற பதில் கிடைக்கும்போதே, கிராமிய மட்டங்களிலிருந்து புதிய அரசியல் தலைமைகள் உருவாகும் வாய்ப்புத் தோன்றும். மக்களின் உண்மையான பிரச்சினைகளை அரசியல் தலைமைகள் உணரத்தொடங்கும். அதுவரை தமிழ் அரசியலின் தலைமைத்துவம் அதன் சரியான அர்த்தத்தில் வெற்றிடமாகவே இருக்கும்.

22. அரசியலினால் பெரும் இழப்புகளையும் வலிகளையும் அனுபவங்களையும் சந்தித்த மக்களின் அரசியல் தலைவிதி இப்படி இன்னும் இருளில் நீள்வதற்கான காரணம் என்ன?

அரசியலினால் பெரும் இழப்புக்களையும் வலிகளையும் சந்தித்தவர்கள் அரசியல் தலைமைக்கு வரும்போது இந்தத் தலைவிதி மாறக்கூடும். அவர்களால்தான் உடனடித் தீர்வுகள் – நீண்டகாலத் தீர்கள் என்ற அடிப்படையை உணர்ந்து செயற்படமுடியும். இன்றைக்கு இருக்கிற அரசியல் தலைவர்களில் எத்தனைபேர், யுத்தத்தை நேரடியாக அனுபவித்தவர்கள்.. அதற்குள்ளே இருந்தவர்கள்..?

23. யுத்தம் முடிந்த பிறகும் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தமிழ்ச்சமூகத்தினர் விருப்பமாக இருப்பதேன்?

பொருளாதாரமும் ஒன்று என்பதை மறைக்கவேண்டியதில்லை. ஆனால் நாட்டுக்குள்ளேயே தன்னிறைவு அளிக்கக்கூடிய இயல்பான பொருளாதார வளர்ச்சி குலைந்துபோனதிற்குப் பின்னால் இனப்பிரச்சினையும் யுத்தமும்தான் இருந்தன என்ற உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டும். மூளை சார் உழைப்பாளராக வருவதற்கான இயல்பற்ற அதேவேளை ஒரு மனிதப்பிறவியாக மற்றெல்லோரையும் போல வாழ விரும்பும் நியாயத்தைக்கொண்ட ஒருவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாதென்றால் அதற்குரிய தொழில்வாய்ப்புகளும், துறைகளும் பரவலாக உருவாக்கப்படவேண்டும். வாழ்வதற்கு உரியதாக பொருளாதாரச் சூழலை மாற்றவேண்டும். அதை அரசும், அரச அலகுகளும்தான் செய்யவேண்டும். இன்னொரு விடயம், மருத்துவர்களாக, பொறியியலாளர்களாகவும், கல்வியாளர்களாகவும் பலர் நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களையும் உங்கள் கேள்விக்குள் உள்ளடக்கியிருக்கிறீர்களா..?

24. தாயகம் திரும்புவதைப்பற்றிய புலம்பெயர்ந்தவர்களுடைய கனவும் நிஜமும் என்ன?

நான் ஒரு புலம்பெயர்ந்தவன் என்றவகையில் ஒருபோதும், தாயகத்து வாழ்வை ஒரு முடிந்தபோன கனவாக நினைத்து அழுதது இல்லை. கனவை நிஜத்தில் தொடரும் சூக்குமம் தெரிந்தவனாக இருக்கின்றேன். அவ்வளவே!

00
நேர்காணல் : கருணாகரன்