காஸா! படுகொலை நாட்களின் குறிப்புகள்

Rasha N. AbuShaaban இங்கிலாந்தின் Aberdeen பல்கலைக்கழக முதுநிலைப்பட்டம் பெற்றவர். பலஸ்தீன சிவில் சமூக அமைப்புக்களிலும் மனிதாபிமான மற்றும் அபிவிருத்திச் செயற்திட்டங்களிலும் பணியாற்றியவர். தற்போது சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றார். உரிமைகளை உறுதிசெய்வதும், அதிகாரங்களைக் கையளிப்பதுவுமே, பெண்கள் குழந்தைகள், இளைஞர்கள் உள்ளடங்கலான அமைதிமிக்க பலஸ்தீன சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான திறவுகோல்கள் என்பது இவருடைய நம்பிக்கை. தற்பொழுது ஆக்கிரமிப்பு யுத்தம் நடைபெறும் காஸாவிலிருந்து இக்குறிப்புக்களை alochonaa.com இணையத்தளத்திற்காக எழுதுகின்றார்.

தமிழில் மொழிபெயர்ப்பு : சயந்தன்

Gaza, July 9, 2014
பாதுகாப்புமுனை, (“Protective Edge”)இஸ்ரேல்அறிவித்த புதிய யுத்தம், இன்று அதிகாரபூர்வமாக ஆரம்பித்தது.

மூன்று இஸ்ரேலியக் குடியேறிகள் கடத்தப்பட்டு வெஸ்ட்பாங்கில் சடலங்களாக மீட்கப்பட்ட நாள் முதலாகத் தொடர்ந்த அச்சுறுத்தல் இன்று வெடித்தது. இக்கொலைகளுக்கான மறுப்பையோ உரிமைகோரலையோ இதுவரை யாரும் வெளிப்படுத்தவில்லையென்ற போதும் இது ஹமாஸ் அமைப்பின் கைங்கரியம் என்பதே இஸ்ரேலின் உறுதியான நம்பிக்கை.

குடியேறிகள் கடத்தப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே வெஸ்ட்பாங்கிலுள்ள ஹமாஸ் உறுப்பினர்களின் வீடுகளை இஸ்ரேலியப் படைகள் தாக்கியழிக்கத் தொடங்கின. நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடந்த வாரத்தில் பாலஸ்தீன இளைஞர் ஒருவர் ஜெருசலேத்தில் கொலைசெய்யப்பட்டார். இவையனைத்தும் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கும் நடவடிக்கைகளாகவே கருதப்பட்டன.

இப்பிரதேசத்தில் பெருகிவரும் அழுத்தங்களுக்கு இஸ்ரேலின் பொறுப்பான பதிலுக்காகக் காத்திருந்த மக்கள், முதல்நாள் தாக்குதலிலேயே தாம் இலக்குவைக்கப்பட்டதில் உறைந்துபோயினர். ஆம், 365 சதுரகிலோமீற்றர் பரப்பும், 1.7 மில்லியன் மக்கட்தொகையும் கொண்ட காஸா நிலத்துண்டில் இஸ்ரேலியப் படையினர் நூற்றுக்கணக்கில் குண்டுகளை வீசத் தொடங்கினார்கள். ஆகாய வழி ரொக்கெற் வீச்சுக்களிலும் குண்டுகளின் பெருவெடிப்புக்களிலும் எங்களுடைய உடல்கள் குலுங்கி அதிர்ந்தன. இதயங்கள் நொருங்கித் துகள்களாயின.

இந்த யுத்தம் எத்தனை நாட்களைத் தின்னும்..? 2008 -2009 காலத்தய காஸ்ட்லீட் சண்டைபோல 23 நாட்கள் நீடிக்குமா..? அல்லது 2012 ஒபரேஷன் பாதுகாப்புத்தூணைப்போல 8 நாட்களில் முடியுமா.. ? இவற்றைவிட அதிக நாட்களா.. அல்லது சிலநாட்களுக்கா.. எது எப்படியோ இன்று முதல்நாள்.

Mideast Palestinians-Living Under Blockadeநேற்றிரவு ஒரு மணிநேரம்கூட என்னால் உறங்கமுடியவில்லை. வேவு விமானங்களின் இரைச்சலுடனேயே இரவு கழிந்தது.தலைக்கு மேலாக விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. புனித ரம்ஜான் மாதமென்பதால் நோன்பை முடித்து இரவிலேயே உணவு உட்கொள்வது வழமை. இரவிலிருந்தே குண்டுவீச்சுக்களும் தீவிரமடையத் தொடங்கின. இராணுவ நிலைகளையும் விவசாய நிலங்களையும் இஸ்ரேலியப் படைகள் குறிவைப்பதாக செய்தியில் சொன்னார்கள். விடியற்பொழுதில் இறுதியாகக் கண் சொருகும் வரைக்கும் செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இரைச்சல்களுக்கும் வெடியோசைகளுக்கிடையும் ஓரிரு மணிநேரம் தூங்கமுடிந்தது. ஓரிரு மணிநேரம்தான். திடீரென பூமி அதிர்வது போல, படுக்கையும் வீடும் அதிர்ந்தன. மார்புக் கூட்டிலிருந்து இதயம் துள்ளி விழுந்தாற்போல உணர்ந்தேன். மூச்செடுக்கவும் மறந்த கணம் அது.

காலை துயரச்செய்திகளோடேயே விடிந்தது. நூற்றுக்கணக்கான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருந்தனர், பலர் காயமடைந்தனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன, பள்ளிவாசல்கள் தாக்குதலுக்குள்ளாகின.

வடக்குக் காசாவில் ‘அபுகவெராவின்’ குடும்பத்தில் குழந்தைகளுட்பட பலர் கொல்லப்பட்டிருந்தனர். கூரையின்மீது கூடி நின்று தாம் அப்பாவிமக்கள் என்பதை அடையாளப்படுத்தினால் தாக்குதலிலிருந்து தப்பமுடியுமென்று அவர்கள் நம்பியிருந்தார்கள். ஆனால், எதிரிப்படைகளிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்கமுடியுமா.. அவர்களுடைய விமானங்கள் மிகச் சாதாரணமாக ஏவுகணைகளை வீசின. படுகொலை அரங்கேறியது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் வீட்டோடு சமாதியான புகைப்படங்கள் நெஞ்சை உருக்கின.

பலஸ்தீன வானொலிச் சமிக்ஞைகளை இடைமறித்து அவற்றில் தம்முடைய செய்திகளை இஸ்ரேல் இராணுவம் ஒலிபரப்பியது. பலஸ்தீனர்கள் தம்முடைய வீடுகளைக் காலிசெய்து பாதுகாப்பாக வெளியேற வேண்டுமாம். எங்ஙனம் சாத்தியம்.. ? காஸா கடலோரமெங்கும் இஸ்ரேலியப் போர்க்கப்பல்கள் வரிசையாகத் தொடுத்து நிற்கின்றபோது.. எங்கனம் சாத்தியம்.?முற்றுகைக்குள்ளான எல்லைகளைக் குறுக்கே கடந்துவிடத்தான் முடியுமா? தரையிலிருந்து சீறும் எறிகணைகளையும் வானத்தை மங்கச் செய்யும் விமானங்களையும் கடந்து பாதுகாப்பான வெளியேற்றம் எங்ஙனம்..?

இரவு பரவி விட்டது.நோன்பை முடித்துக்கொள்வதற்காக வானொலிகளை நிறுத்தி அமைதித் தருணங்களை முயற்சித்தோம். சாத்தியமானதுதானா அது..? விமானங்களையும் வெளியே கேட்கிற குண்டுச்சத்தங்களையும் நிறுத்திவைக்க இயலுமா. ? நாம் தொழுகை அழைப்பிற்காகக் காத்திருந்தோம். சோர்ந்த இதயத்தோடும் நீர்வழிந்தோடும் கண்களோடும் கைகளை மேலுயர்த்தித் தொழுதோம். இந்நாளில் தம்முடைய பிரியமான உறவுகளை இழந்தவர்களுக்காகவும், தம் வீடுகளைக் கண்முன்னே பறிகொடுத்தவர்களுக்காகவும், இறைவனைத் தொழுதோம். இன்றைய வலி மிகுந்த காட்சிகளை நினைவிற் கொண்டோம். இன்றைய முழுநாளும், இது யுத்தத்தின் முதல்நாள் என்ற நினைவு பரவியிருந்தது. இன்னமும் எத்தனை நாட்களை இது தின்னும்.. ?

இன்றைக்குப்பகல், தெற்கு இஸ்ரேல் நகரத்திலுள்ள இஸ்ரேலிய கடற்படைத்தளம் தாக்குதலுக்கு உள்ளானதாக ஹமாஸின் இராணுவப்பிரிவான அல்கஸாம் (Al-Qassam)தெரிவித்தது. இஸ்ரேலினுள்ளே சில மைல்களை எட்டும் உள்ளுார்த் தயாரிப்பு ரொக்கெற்றுக்கள், அப்பகுதி இஸ்ரேலியரைத் திகிலடையச் செய்திருக்கும். இச்செய்தி சிறுநம்பிக்கையை அளித்தது. ஆம். மிகக் கொடுமையான மௌனத்தை சர்வதேசம் கைக்கொள்ளும் இவ்வேளையில் அநியாயங்களைச் சகித்துக்கொண்டு மௌனமாயிருக்கத் தயாராயில்லாத புரட்சியாளர்கள் நம்முடனுள்ளார்கள் என்ற நம்பிக்கை இது. இவ்வகை ரொக்கெற்றுக்கள் இஸ்ரேலிற்குப் பெரியளவான இழப்புக்களை ஏற்படுத்தாதென்று தெரிந்ததுதான். பதிலடியாக நூற்றுக்கணக்கான எறிகணைகளை அவர்கள் ஏவுவார்கள். ஆனால், நாம் எதிர்த்துப் போராடுகின்றோம் என்பதையும் அரபு உலகிலிருந்தோ வேறெங்கிலுமிருந்தோ யாருக்காகவும் என்பதையும் உலகிற்குச் சொல்ல வேண்டும். ஏனெனில் நீதி நம்பக்கமே இருக்கின்றது. இழந்த உரிமைகளையும் நிலத்தையும் திரும்பப் பெறுவதற்கு நாம் போராடியே தீரவேண்டும்.

யுத்தத்தின் முதல் நாள் இரவில் கரைந்து போகிறது. இதுவரை 22 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 125 பேருக்குக் காயங்கள். இந்த எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் உயர்கிறது. காஸாவின் வெளியிலிருந்கும் சிலருக்கு இவை வெறும் இலக்கங்களே. ஆனால் எங்களுக்கு – காஸாவின் மக்களுக்கு, இவை புள்ளிவிபரங்கள் அல்ல. இந்த இலக்கங்கள் எங்களுடைய வலிகள், அடுத்து எவர் கொல்லப்படுவார் என்கிற துயர்.. எவ்வகைக் குண்டு வீசப்படுமென்ற அச்சம்..

இந்தப்பொழுதில் நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் வலிமையையும் பொறுமையையும் அருளும்படி இறைவனை வேண்டிக்கொள்வதுதான்.