அ.இரவி (பொங்குதமிழ் இணையம்)

2011 நத்தார் தினங்களில் ஒன்று. ‘ஒருபேப்பர்’ வைத்த விருந்து ஒன்றில் சயந்தன் சொன்னார். “நான் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்.” நான் நினைத்தேன்: ‘அது இலேசான காரியமோ? சிறுபிள்ளை வேளாண்மை. வீடு வந்து சேர்ந்தாலும் உண்ண முடியாதது.’

பிறகு சயந்தன் சொன்னான். “அந்த நாவலுக்கு இயக்கம் என்று பெயர் வைத்திருக்கிறேன்.” மீண்டும் நான் நினைத்தேன்: ‘இது ஒரு பாஷன். ஷோபாசக்தி கொரில்லா என்று வைத்தார். இப்ப இவர் இயக்கம் என்கிறார்.’

அந்த விருந்து நன்றாக நடந்தது. நான் ‘நினைத்ததை’ ஒரு மூலையில் ஒதுக்கிவிட்டு சயந்தனுடன் மெல்லிய இருட்டுக்குள் நன்றாக அளவளாவினேன்.

ஒருசில மாதங்கள் கழிந்தன. ஒருபேப்பர் ஆசிரியர் கோபி தொலைபேசி எடுத்தார்.

“இரவியண்ணை, சயந்தனின் புத்தகம் சோக்காகத்தான் இருக்கு. நீங்கள் வாசிச்சியளோ..”

“எது..? இயக்கம் எண்ட புத்தகமோ..”

“அதுதான். ஆனால் ஆறாவடு என்ற பெயரோடு வந்திருக்கு. நீங்கள் கட்டாயம் வாசிக்கவேணும். அனுப்பி விடுறன்.”

எனக்குன் கோபியின் இரசனையில் சந்தேகமே இல்லை. படைப்பிலக்கியத்தில் அவ்வளவு பரிச்சயமில்லாதவர். அரசியல் கட்டுரை என்றால் அது வேறு. அம்புலிமாமாக் கதையைக் கூட அடுத்த மகாபாரதம் என்று எண்ணக்கூடியவர். அவர் ஆறாவடுவைப் புகழ்ந்தால் அது புரியக்கூடியதுதானே என்று விட்டுவிட்டேன். இரண்டொரு நாளில் ஆறாவடு வந்து சேர்ந்தது. ஒரு கிழமையின் பிறகு ‘கணிப்பிற்குரிய கதைஞன் வந்து சேர்ந்தான்’ என்று ‘ஆறாவடு’ குறித்து ஒரு இரசனைக் கட்டுரை எழுதினேன். ‘பொங்குதமிழ்’ இணையத்தில் அது வெளியாயிற்று.

அந்தக்கட்டுரையை இந்தக் கருத்துப்பட நிறைவு செய்திருந்தேன். ‘கணிப்பிற்குரிய கதைஞன்’ சயந்தன் என்பதனை அவரது அடுத்தடுத்த படைப்புக்களிற்தான் உறுதி செய்ய வேண்டும்.’

சரி, இவ்வாறுதாம் கேள்வி எழுகிறது. உறுதி செய்தாரா சயந்தன்? ‘ஒரு சொட்டுக் கண்ணீர்’ சிறுகதை அதை உறுதி செய்ய முயன்றது. ஆனால் அது சிறுகதை என்னும் கலை வடிவமாக இருந்தமையால் நிரூபிக்க முடியாமற் போயிற்று. இப்போது சயந்தன் ‘ஆதிரை’ என்னும் புதினத்தைத் தந்திருக்கிறார். 664 பக்கங்கள். அவ்வளவு பக்கங்களிலும் விரிந்த உலகம் பெரிது. அவ்வளவு பக்கங்களிலும் உலாவிய சுமார் இருபது கதை மாந்தர்களும் ‘கணிப்பிற்குரிய கதைஞர்தான் சயந்தன்’ என்று சொன்னார்களா.. ?

ஏறத்தாள 10 நாட்களில் சயந்தன் விபரித்த உலகில் என்னால் வாழ முடிந்ததா? அழுதேனா..? சிரித்தேனோ..? ‘ஆ’ என்று வியந்தேனா..? யாவற்றுக்குமான ரசனைக் குறிப்பையே நான் எழுத விளைவது..

1977 தமிழர் மீதான இனப்படுகொலையினால் மலையகத்திலிருந்து சிங்கமலை தன் மனைவி தங்கமையை மலையின் தேயிலைக் கொழுந்துகளுக்குத் தின்னக் கொடுத்துவிட்டு வல்லியாள், லெட்சுமணன் என்னும் இரு பாலகர்களுடன் வன்னிக்கு வருகிறான்.

அதுதான் ஆதிரையின் தொடக்கப்புள்ளி.

ஒரு சமூகம், நான்கைந்து குடும்பங்கள், சுமார் இருபது மானுடர்கள், தளம் என்று நான்கைந்து, பெரும் நிலப்பரப்பு, முப்பத்தைந்து வருட காலமான நீண்ட வெளி, வேட்டை, வேளாண்மை, தென்னைப் பயிர்ச்செய்கை, என்று பல்வேறான தொழில். விடுதலைப் போராளிகளின் இராணுவத் தாக்குதல்கள், சிங்கள இந்திய இராணுவ வன்முறை, இனப்படுகொலைகள், சுனாமி அனர்த்தம் என்று சுற்றிச்சுழன்று இடையறாது ஒலித்த ஒப்பாரிப்பாடல் முள்ளிவாய்க்கால் ஊழியில் அலறல்கள், கதறல்களாகி 2013 வரை ஓலமிடுகிறது. காற்று எங்கும் அதைக் கரைத்துவிடவில்லை. எந்த ஒரு தாய்மடியும் ஆறுதல் தரவில்லை. சுமார் முப்பத்தைந்து வருடங்களாக அப்பாடலுடன் அலைந்து உலைந்து அல்லல்பட்டுப் பயணிக்கிறோம்.

சாத்தியமற்ற ஒன்றைச் சயந்தன் ஆற்றியிருக்கிறார். இத்தகையதோர் புனைவு இவரினால் எப்படி இயன்றது? பாத்திர வார்ப்பு, புனைவு நுட்பம் யாவும் எங்கும் பிசிறு தட்டவில்லை. ஒரு பாத்திரமும் தன் உருவ அமைதியில் முரண்பட்டதல்ல. தன் வளர்ச்சியின் அடிப்படையில் தனக்குத்தான் முரண்பட்டது சந்திரா என்று உதாரணம் சொல்லப்புகுந்தேன். அல்ல.. அத்தனை பாத்திரங்களும் தம் வளர்முறைக்கு நியாயம் கற்பிக்கின்றன. நந்தன் ஆசிரியர் உட்பட.

புனைவு வழியில் இவ்வளவு சிறப்பான புதினம் ஈழத்துத்தமிழில் வந்ததில்லை. ஈழத்துப்படைப்புக்களில் பெரும்பாலானவற்றை வாசித்ததன் அடிப்படையில் சொல்கிறேன்.

இப்போது ‘புனைவு’ என்றால் என்ன என்பதை நான் விளங்கிய அளவில் சொல்லியாக வேண்டும். புனைவு என்பது ஓர் உணர்வை அல்லது பாத்திரத்தைத் தன்னுள் வாங்கி தான் அதுவாக நின்று வாசகர் மீது அந்த உணர்வைக் கடத்திக் கவியச் செய்வது. இதுவே நான் புரிந்த அளவில் புனைவு என்பேன்.

சுய அனுபவங்களைப் படைப்பாக்கல் ‘புனைவு’ என்று யாரும் சொன்னால் ஓம் என்று ஒப்புக்கொள்வேன். அதிலும் இந்த அனுபவங்களைச் சொல்லப்போகிறேன் என்ற தெரிவு, அந்தப்பருவம், சூழலுக்குரிய மனநிலை யாவற்றையும் அச்சொட்டான வடிவத்துள் கொண்டுவருதல் இவைதாம் புனைவின் பாற்படும்.

ஆனால் பிறர் அனுபவங்களைத் தன் அனுபவமாக உள்வாங்கும் படைப்பென்பது கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை போன்றது. இது அனுபவமும், கலை நேர்த்தியும், கற்பனை ஆற்றலும் கொண்ட ஒருவரால் மாத்திரமே சாத்தியமாகும். சும்மா கூடு விட்டுக் கூடு பாய்ந்துவிடமுடியாது. இப்போதும் நாம் மெச்சத்தகுந்த படைப்புக்கள் என விளிப்பது அது புனைவு வழிவந்த உச்சங்களையே..

ஆதிரை நம்முள் உலாவவிட்ட கதை மாந்தர்கள் வெறும் பெயர்கொண்டு மாத்திரம் பரிச்சயம் கொள்ளவில்லை. இதில் வருகின்ற சந்திரா எதனாலும் வன்முறை கண்ட சமயமெல்லாம் உரத்து ஏசியோ, மௌனமாகத் தன்னுள் குமைந்தோ தன் ஒவ்வாமையை வெளிப்படுத்துவாள். எப்போதும் அவளிடம் விடுதலைப்புலிகள் பற்றிய கடுமையான விமர்சனம் உண்டு. அவளது கணவன் அத்தார் விடுதலைப்புலிகளின் கடும் விசுவாசி. ஒருமுறை மாவீரர் நாளுக்குச் செல்ல முடியாதவாறு கடும் காய்ச்சல் அத்தாரைப் பீடித்தது. சாமம் போல அத்தார் ஓங்காளித்துச் சத்தியெடுத்துத் திரும்பியபோது மூன்று சுட்டி விளக்குகள் எரிந்தன. அவற்றைப்பார்த்தபடி சந்திரா இருந்தாள். அத்தாரை நிமிர்ந்து பார்த்துச் சொன்னாள். “இயக்கம் விடுற எல்லாப் பிழைகளையும் இந்தப்பிள்ளைகள் தங்கடை தியாகத்தால் வென்று விடுறாங்கள்” (பக்கம் 304)

இந்த இடத்தில் நான் உறைந்து போனேன். தொடரூந்தில் இருக்கிறேன் என்ற எந்த உணர்வுமில்லாமல் ‘ஆ..’ என்ற ஒலி என்னிலிருந்து வெளியேறியது. ஆதிரையினுள் இருந்து சந்திராவை உணர்ந்தவர்கள் யாரும் சந்திராவை வியப்பாக நோக்கார். அவள் அப்படித்தான் என்கின்ற விம்பத்தை சயந்தன் எம்முள் கட்டமைத்துவிட்டார். அதுவே புனைவு. எம்முள் இரத்தமும் சதையுமாக நுழைந்தவர்களில் சந்திரா ஒருத்தி. மேலும் பலர் உள்ளனர். அத்தார், சங்கிலி, மீனாட்சி, லெட்சுமணன், ராணி, வெள்ளையன், நாமகள், வினோதினி, மணிவண்ணன், மயில்குஞ்சன், மலரக்கா, நந்தன் சேர், சிங்கமலை என்று அவை நீள்கின்றன. அத்தனை பாத்திரங்களும் முதலிலிருந்து முடிவு வரை உறுத்தல் இல்லாதவாறு வளர்க்கப்பட்டிருந்தன. பாத்திரங்கள் ஒருபோதும் தத்துவம் பேசவில்லை. மனிதம் பேசுகிறது. அது பிரச்சாரமாக அல்ல. போகிற போக்கில் அப்பாத்திரங்களின் செயல், உச்சரிக்கும் வார்த்தைகள், மனிதத்தைப் பேசிவிடுகின்றன. இங்கு யாரும் தீயவர் அல்லர். பலவீனம் உள்ளவர்கள். சிங்களக் காடையர்கள், சிங்கள இராணுவம், இந்திய ராணுவம் என்கிற கொடியவர்கள் பாத்திரங்கள் ஆகவில்லை. கூட்டமாகத்தாம் நிற்கின்றன.

ஆதிரை நாவலின் அத்தனை பாத்திரங்களிலும் மனிதம் எப்படியோ வெளிப்பாடுகொண்டு நிற்கிறது. ஒரு போராளி மாவீரன் ஆகின்றான். அவனுக்கு ஈழச்சடங்கு செய்யப் பெற்றோர் இல்லை. இங்கிருந்த கிழவியொருத்தி வித்தாக வீழ்ந்து கிடக்கும் மாவீரனைப் பார்த்ததும் கூறுகிறாள். “என் ராசா.. என்னையப் பாரய்யா.. நானும் ஒனக்கு அம்மாதான்யா.. உறவுண்ணு கண்ணீர் வடிக்க உனக்கு யாருமில்லைன்னு கலங்கிடாத.. வருசா வருசம் நான் உனக்குத் திவசம் பண்ணுறேன்யா.” (பக் 305)

இவ்வாறான வார்த்தைகளை, சம்பவங்களை ஆதிரையில் காண்கிறபோது அதை எவ்வாறு நோக்குவதென்று தடுமாறுகின்றேன். இக்காட்சியை சயந்தன் நேரில் தரிசித்தாரா..? அல்லது புனைவின் பாற்பட்ட ஒன்றா..? நேரிற் கண்டதாயின் அதன் தெரிவும் புனைவின் பாற்பட்டதாயின் அச்சிந்தனையும் சயந்தனை மனிதத்தின் உச்சத்தில் ஏற்றி வைத்துவிடுகிறது.

இது மாத்திரம் சந்தர்ப்பமல்ல. 595ம் பக்கத்தில் ஓரிடம். நான் படித்த எந்த இலக்கியத்திலும் காணாத காட்சி அது. ராணி திருமணம் முடித்த இளம் வயதில் சிந்து என்ற மகளைக் கொடுத்துவிட்டுப் புருசன் காணாமற் போகின்றான். காலப்போக்கில் மணிவண்ணன் என்பவனுடன் ராணிக்குக் காதலும் உடல் ரீதியான உறவும் ஏற்பட்டுவிடுகிறது. முள்ளிவாய்க்கால் ஊழி நிகழ்கிற நேரம், மணிவண்ணன் உதடுகள் சற்றே விரிந்திருக்க புன்னகைப்பதுபோல அநாதரவாக இறந்து கிடக்கிறான். தன் மகள் சிந்துவுடன் வந்த ராணி அதைக் காண்கிறாள். சிந்து அருகில். ராணி உதடுகளைக் கடித்து அழுகையை அடக்க முயற்சிக்கிறாள். ஓர் அடி எடுத்து வைக்க முடியாமல் கால்கள் சோர்கின்றன. பெற்ற மகளைப் பார்க்க முடியவில்லை ராணியால். சிந்து தாயின் இரண்டு கன்னங்களையும் கைகளில் ஏந்தி கெஞ்சுவதைப்போன்ற கண்களைக் காண்கிறாள். சிந்து சொல்கிறாள். “நீங்கள் அழுது தீருங்கோ அம்மா” ராணி ஓவென்று வெடித்தாள். மணிவண்ணனின் காலடியில் புழுதிக்குள் விழுந்து புரண்டு அலறினாள்.

“ஓ” என்று கதறிவிட்டேன். நான் இருந்த தொடரூந்துப்பெட்டியில் எவருமில்லை. எனக்கு மேலும் வாசிப்பைத் தொடரமுடியவில்லை. இவ்வாறான புனைவு எப்படிச் சாத்தியமாயிற்று என்று திகைத்தபடி இருக்கின்றேன். ராணியின் மனநிலையையும் சிந்துவின் மனநிலையையும் எப்படி ஒருவனால் விளங்கிக்கொள்ள முடிந்தது..? உண்மை என்னவென்றால் ‘அது அவ்வாறுதான் இருக்கவேண்டும்’ என்று சயந்தன் விரும்பினார். அவரது அறம் அவருக்கு அதைத்தான் உரைத்தது. அதனாற்தான் மகத்தான படைப்பாளியாகவும் மானுடத்தை நேசித்தவனாயும் சயந்தனால் இருக்க முடிகிறது.

ஆதிரை ஈழ தேசச் சமூகத்தாரில் உள்ள அத்தனை வகை மாதிரிகளையும் அதன் குண இயல்பு குன்றிடாமல் பாத்திரங்களாகக் கொண்டுவருகிறது. பாத்திரங்களுக்கிடையிலான இணைவும் இயல்பும் எங்கும் விலகிப்போகவில்லை. அது தொழில்நுட்பத்தின் நேர்த்தி. ஆனால் புனைவு முனைப்புப்பெறாமல் அது சாத்தியமில்லை.

எந்த ஒரு மூன்றாம் உலக நாடுகளின் சமூகவியல் போலவே ஈழத்துத் தமிழ்ச் சமூகமும் பல முரண்பட்ட சமூக நிலைக் கருத்துக்களைக் கொண்டுள்ளன. சாதியமைப்பு, பிரதேசவாதம் அவற்றில் முக்கியமானவை. அவை பிரதான முரண்பாடுகள் அல்ல. தமிழ் சிங்கள இன உறவு குறித்த பிரதான முரண்பாட்டைப் பேசுகிற சமயம், இச்சிறுசிறு முரண்பாடுகளின் சித்திரம் வரையப்படுகிறது.

வெள்ளாம்பிள்ளை சந்திரா, தாழ்த்தப்பட்டவர் என அறியப்பட்ட அத்தாருடன் ‘ஓடி’ வன்னிக்கு வந்துவிடுகிறாள். அத்தார் தாழ்த்தப்பட்டவன் என்று சொன்னாலும் இறுதிவரை அவன் என்ன சாதியென்று சொல்லப்படவில்லை. இறந்தபிறகு ஓர் உரையாடலில் அது தெரிகிறது. முள்ளிவாய்க்காலில் அனாதையாகச் சிதைந்த உடலை ஒருவர் அடையாளம் காட்டுகிறார். “இந்த அம்பட்டக்கிழவனை எனக்குத் தெரியும் .அத்தார் எண்டு கூப்பிடுறவை. ஒரு வெள்ளாளப்பொம்பிளையைக் கட்டியிருந்தவர். ” (பக் 592)

பல்லாயிரக்கணக்கில் சாவு விரிந்த அந்த மணல் வெளியில் சவங்களிலும் சாதி சொல்லும் ஒருவன் காட்டப்படுகிறான். சாதி வெறியின் கோரமுகத்தை இப்படி வெளிப்படுத்த முடிந்தது.. சயந்தனின் புனைவு அங்கும் கட்டியம் கூறி நிற்கிறது.

பிரதேசவாதம் பேசப்படும் இடங்களும் இவ்வாறுதான். ஆனால் என் மேலான ஆச்சரியம் என்னவெனில் வகை மாதிரிப் பாத்திரங்கள் வந்து, புனைவுடன் பொருந்திப்போகிற அம்சம் என்பதே. பிரதான முரண்பாட்டைச் சிதைக்காத வண்ணம் அவ்வகை மாதிரிப் பாத்திரங்கள் இயங்குகின்றன.

சந்திரா அத்தார் என்கிற சாதிய முரண்பாடு மாத்திரமல்ல, முத்து என்கிற மலையாள வம்சாவளிப் பிள்ளைக்கும் வன்னியைச் சேர்ந்த வெள்ளையனுக்கும் ஏற்படும் திருமண உறவிலும் பிரதேசவாதம் தலை துாக்குகிறது. அவ்வாறே சாரகன் என்ற யாழ்ப்பாணிக்கும் நாமகள் என்ற வன்னிப் பெட்டைக்கும் இடையிலான காதலில் பிரதேசவாதம் முளைவிடுகிறது.

இவ்வாறு பலவகை மாதிரிப்பாத்திரங்கள் அச்சொட்டாகப் பொருந்திப்போகின்ற அதே சமயம் ஒன்றுமே பிரதான கதைப்போக்கை இடையூறு செய்ததாகத் தெரியவில்லை. இவற்றினை வெறும் வார்த்தைகளால் கடந்துபோய்விடமுடியாது. ஒரு படைப்பாளி தன் புனைவுத்திறனை அதி உச்சத்தில் வைத்துப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

ஆதிரை பேசிய அரசியல் பற்றி அதிகம் பேசவிரும்பவில்லை. ஆயினும் சொல்லியே ஆகவேண்டிய சில விசயங்கள் உள்ளன. ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆழ்ந்த அக்கறை கொண்டு எழுதப்பட்ட படைப்பு இது. விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட தவறுகளை் யாவற்றையும் அனுதாபத்துடன் நோக்குகிறது. விடுதலைப் போரில் சக பயணியாகக் கூட வருகிறார் சயந்தன். வழியில் எதிர்ப்படும் முட்களையும் கற்களையும் அப்புறப்படுத்திவிட்டு பாம்பு, தேள், மற்றும் விஷ ஐந்துக்களை நசுக்கிவிட்டு பற்றைகளை விலக்கி குறுக்கேயிருந்த கொப்புக்களைத் தறித்துப் பயணிக்கிறார் இப்புனைகதை ஆசிரியர். மானுடக்கூட்டத்திலிருந்து அவர் விலகிச்செல்லவில்லை. அவர்களில் ஒருவர். அத்துன்ப துயரங்களில் ஒன்றோடு ஒன்றானவர்.

மானுட தர்மத்தை விரோதிப்பவர் விடுதலைப்புலிகளிடம் மாத்திரம் குற்றம் கண்டனர். அல்லது விடுதலைப் புலிகளையும் சிங்கள அரச பயங்கரவாதத்தையும் சமப்படுத்தினர். விடுதலைப்புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தியது, கட்டாய ஆட்சேர்ப்பு நிகழ்த்தியது, ஒருபடி மேலே போய் மக்களைக் கொன்றது என்பதை முதன்மைப்படுத்தி தம் நச்சு வார்த்தைகளை உமிழ்கின்றனர்.

ஆனால் விடுதலைப் புலிகள் மக்களுக்கு அரணாக நின்றதும், மக்களின் துன்ப துயரில் பங்குகொண்டதும், மக்களைக் கொன்றவனைக் கொன்றதும், மக்கள் தப்பியோட வழிகாட்டியதும், தாம் தவறி வீழ்ந்த இடத்தை ஒப்புக்கொண்டதும் இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. தெரியவும் மாட்டாது. ஆதிரை புனைவு நிலையில் நின்று உலகிற்குக் கோடி காட்டியது.

ஆதிரை புதினத்தை கையில் துாக்கி உயரத்திலேயே பிடிக்கிறேன். முள்ளிவாய்க்கால் ஊழியைக் காட்சிப்படுத்திய அதன் திறன் கண்டு. அய்யோ என்ற குழறல்களும், சடலம் சடலமாகச் சரிந்து கிடப்பதுவும், பதுங்கு குழிக்குள் உணவு கிடையாக் கொடுமையும், சதைத் துண்டங்களும், கந்தக மணமும் என்று மாத்திரம் முள்ளிவாய்க்காலை காட்டவில்லை.

அந்த அவலங்களுக்கிடையில் ஓர் உயிர்ப்பு இருந்தது. அந்த வதைபடல்களுக்கு இடையிலும் ஒரு வாழ்வு இருந்தது. சூரியன் சுடர்ந்தான். சுட்டெரித்தான். ஆகாயத்தில் நிலவும் ஜொலித்தது. நட்சத்திரங்கள் ஒளிர்ந்தன. அதைச் சயந்தன் அழகாகப் புனைந்தார்.

ஒருத்திக்குத் திடீர்க் கல்யாணம் நடக்கின்றது. ஆனால் அது கல்யாணம் அல்ல. ஒரு தாலியை எடுத்துத் தன் தலையைத் தானே நுழைத்துக்கொள்கிறாள். அவளுக்கு உண்மையில் திருமணம் ஆகாமல் விடுகிறது.

“அம்மா செத்திட்டாவோ” என்று கேட்ட மகள் அடுத்த கணம் கேட்கிறாள். “கஞ்சி வடிச்சிட்டியளே.. குடிக்கலாமே..” (பக் 580) சாவைச் சாதாரணமாகக் கடந்து போவதும், சன்னக் கோதுகளை பேணியிற் குலுக்கிச் சிறார்கள் விளையாடுவதும் அந்த அவலத்திற்குள்ளும் உயிர்ப்பூ மலர்வதைக் காட்டுகிறது.

ஓர் இடம் வாசித்த பிறகு இரண்டு நாட்களுக்கு முழுமையாக ஆதிரையை வாசிக்க முடியவில்லை. ஷெல் கூவுகிற ஒரு நள்ளிரவு. அத்தாரும் சந்திராவும் பதுங்கு குழிக்கு வெளியே ஒருவர் கையை ஒருவர் பற்றியவாறு நித்திரை கொள்ள முயன்றனர். திடீரென்று ஒரு பேரொலி. ஒளிப்பிளம்பு. அத்தார் அவனை மூடியிருந்த மண் துகள்களையும் புகையும் உதறிக்கொண்டு எழுந்து “சந்திரா” என்று அலறினான். “சந்திரா இருக்கிறியா..” என்று கத்தினான். “போயிட்டியா..” மெல்ல முணுமுணுத்தான். ‘ஷெல்லடி கூடுதண்ண, வாங்கோ போவம்’ வெள்ளையன் அத்தாரின் கையைப்பற்றினான். “டேய் நாயே, ஒருக்காச் சொன்னா கேட்கமாட்டியா.. குடும்பத்திலை ஆரும் வேண்டாமெண்டிட்டு என்னை மட்டும் நம்பி வந்தவளடா.. ஒரு அனாதையா விட்டுட்டு வரச்சொல்லுறியா..”

அத்தார் சந்திராவின் தலையைத் துாக்கி மடியிற் கிடத்தி “என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமெல்லே..”

பிறகு உடல் சிதைந்து வலது கண் மட்டும் திறந்திருந்த ஒரு தலையைப் பார்த்து ஒருவன் அடையாளம் காட்டுகிறான். “இந்த அம்பட்டக்கிழவன்………….” (பக் 592)

(முள்ளிவாய்க்கால் ஊழியின் சித்திரம் தனித்த ஒரு புதினத்தை வேண்டி நிற்கிறது)

முள்ளிவாய்க்கால் ஊழிச்சித்திரத்தின் இறுதி வார்ப்பு இப்படியாக அமைந்தது. கையில் துப்பாக்கி வைத்திருக்கின்ற போராளி லெமன் பப் பிஸ்கற் சரையை இரு சிறு பிள்ளைகளிடம் கொடுக்கின்றான். அப்பொழுது முத்து கேட்கிறாள். “அப்ப உங்களுக்கு..” போராளி சொல்கிறான். “இனித் தீன் வீண்” (பக் 599)

சயந்தன் எழுதிய ஆதிரை என்னும் புதினத்தை பதினைந்து நாளில் தொடரூந்தில் போகவர வாசித்தேன். இரண்டுநாட்கள் வாசிப்பதை நிறுத்தினேன். பல சந்தர்ப்பங்களில் வாசிக்கவிடாமல் கண்ணீர் திரையிட்டது. திருப்பித் திருப்பி வாசித்தேன். பல சந்தர்ப்பங்களில் அச்சூழலில் நான் இல்லை. வேறோர் உலகத்தில் இருந்தேன். இடையிடை என்னை அறியாது ஆ என்று ஒலிக்குறி. இறங்கவேண்டிய இடத்தை அடிக்கடி தவறவிடப்பார்த்தேன், என்று அந்த நாட்கள் பதட்டத்தால் நிறைந்தது. காரணமில்லாமல் அடிக்கடி அழுதேன். இன்னமும் அடிக்கடி அழுவது ஓயவில்லை.

அப்படித்தான் வியப்பும் விலகவில்லை. எப்படி இந்தப் புனைவு சாத்தியமாயிற்று..? எந்தக் கை இதை எழுதியது? அரசியல், ஆக்கம், புனைவு எனும் சகல தளத்திலும் இதனை முதல் நுால் என்பேன்.

நம் காலத்தின் காவியத்தையும் அதைப்பாடியவனையும் பற்றி இதுவரை பறைந்தேன்.

www.ponguthamil.com