யூட் ப்ரகாஷ்

“ஆதிரை” என்ற இலக்கிய செழுமை நிறைந்த ஒரு தரமான நாவலை விமர்சிக்கும் தகைமை எனக்கில்லை. எம்மினத்தின் வலிகள் சுமந்த ஒரு புத்தகத்தை, எங்கள் போராட்டத்தின் இன்னுமொரு பிம்பத்தை வரைந்த ஒரு நாவலை, போர் சுமந்த வன்னி மண்ணின் அவலத்தை மீட்ட ஒரு பதிவை, நாங்கள் தப்பியோடி வெளிநாடு வந்து விலாசம் காட்டி கொண்டிருப்பதை கண்முன் கொண்டு வந்த மனசாட்சியின் மறுவுருவத்தை, வாசித்த ஒரு சாதாரண வாசகனாக எனது வாசிப்பனுவத்தை பகிருவதே, இந்த பதிவின் நோக்கமாக அமைகிறது.

“எதிரிகளை மன்னித்து விடலாம். துரோகிகளை மன்னிக்கவே முடியாது” என்று பற்களை நறுமியபடி சிங்களத்தில் சொல்வதை முதற் தடவையாக கேட்டபடி அவளை கடந்து இழுத்து செல்லப்பட்டேன்”

1991ல் கைதாகி சித்திரவதைக்குள்ளாகும் லெட்சுமணனின் அவஸ்தையில் ஆரம்பிக்கும் நாவல், 2008 ஆண்டின் கடைசி நாளில் முகமாலை காவலரணில், ஜோன் தமிழரசி என்ற ஆதிரை குப்பியடித்து வீரமரணமடையும் பதினாலாவது அத்தியாத்திற்கிடையில் மூன்று தசாப்த விடுதலை போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளை மண்ணின் மணம் மாறாமல் பதிவு செய்கிறது, சயந்தனின் “ஆதிரை” நாவல்.

“தீர்வுகளை சொல்லாமல் வெறுமனே கேள்வியளை மட்டும் கேக்குற புத்திசாலிகளெல்லாம் மொக்கு சாம்பிராணிகள்”

இயற்கை என் நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி என்ற தேசிய தலைவரின் பொன்மொழிகள் உட்பட ஏதிலி, ஓயாத அலைகள், புகலிடம், சுதந்திர பறவைகள், வெற்றி நிச்சயம், படுகளம் என்ற பொருள் பொதிந்த வலிய வார்த்தைகளை தலைப்புகளாக அமைத்தது நாவலின் சிறப்பம்சங்களில் ஒன்று. யாழ்ப்பாண தமிழர் அறிய விரும்பாத 1977ன் மலையக தமிழர்களின் இடப்பெயர்வுடன் தொடங்கி பின்னர் முஸ்லிம்களின் இடப்பெயர்வு, யாழ்ப்பாண இடப்பெயர்வு, இறுதி யுத்தத்தின் போதான இடப்பெயர்வுகள் என நாவல் இடப்பெயர்வுகளையே வாழ்க்கையாக வாழ்ந்த ஒரு இனத்தின் நிலைகண்ணாடியாகிறது.

“நாடுன்னா என்ன.. நான் பொறந்த இடமா.. இல்லைன்னா ஒரு வேலையும் வேலைக்கு சம்பளமும் தர்ற இடமா.. இல்லையே .. நானும் புள்ளகளும் நாளைக்கும் காலேல உசிரோட எழும்புவோம்கிற நம்பிக்கையைத் தாற பூமி தானே நாடு.. இல்லயா”

இடப்பெயர்வுகளோடு அந்த இருண்ட யுகத்தில் இடம்பிடித்த படுகொலைகளும் ஆதிரையில் நம்மை மீண்டும் உலுப்பி எடுக்கின்றன. ஒவ்வொரு படுகொலையும் உறவை இழந்த உறவினூடாகவும் நட்பை தொலைத்த நண்பனூடாகவும் காட்சிப்படுத்தப்பட, படுகொலைகளை செய்திகளாக மட்டும் வாசித்து வேதனைப்பட்ட எங்கள் உள்ளங்களில், படுகொலைகள் விட்டுச்சென்ற வலியை உணரவைக்கிறார் சயந்தன். ஒதியமலை படுகொலையில் இவ்வளவு நடந்ததா என்று அலற வைத்த சயந்தன், சுனாமியிலும் செஞ்சோலையலும் முள்ளிவாய்க்காலிலும் கண்கலங்க வைக்கிறார். பிரமனந்தாறு சுற்றிவளைப்பு மனதை உறைய வைக்க, சகோதர படுகொலைகளால் நம்மை நாமே அழித்த வரலாற்றை மீண்டுமொருமுறை “ஆதிரை” பதிவு செய்கிறது. ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகளை திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்த ஒரு இளம் தாயின் கதாபாத்திரத்தினூடாக சயந்தன் விபரிப்பது சயந்தனின் தனித்துவம்.

“இனிமேல் இந்த மண்ணில் சாவு ஒரு குழந்தைப்பிள்ளை மாதிரி எங்கட கையைப் பிடித்துகொண்டு திரியப்போகுது அத்தார்”

ஆச்சிமுத்து கிழவி சும்மாடு கோலித் தலையில் வைத்து உரப்பை சுமந்து தனிக்கல்லடியிலிருந்து ஒதியமலைக்கு நடந்த நடைப்பயணம், இரு முறை வாசித்து இன்புற்ற பக்கங்கள். தாய்நிலத்தின் இயற்கை வளத்தை , அதன் எழிலை எங்கள் இனத்தின் வாழ்வியலுடன் இணைத்து வரைந்த அழகிய எழுத்தோவியங்கள் இந்த பக்கங்கள். நாவலில் காதல் எம்மண்ணின் சாயலோடு விரசம் இல்லாமல் அழகாக விபிரிக்கப்பட்டிருக்கிறது.

“விடுதலைத் தத்துவங்களும் சுதந்திர கோஷங்களும் வெறும் பழிவாங்கல்கள் எண்ட அளவில குறுகிப்போச்சுது”

இந்திய இராணுவத்தின் யாழ் ஆஸ்பத்திரி படுகொலையும் நாம் கேட்டறிந்த வன்னிகாடுகளில் அந்நிய இராணுவம் அரங்கேற்றிய அட்டூழியங்களும் ஆதிரையில் பதிவாகின்றன. இந்திய இராணுவத்தை எதிர்கொண்ட புலிகளின் தீரமிகு சமரை சயந்தன் எழுத்துருவாக்கிய விதம் மெய்கூச்செறிய வைக்கும்.

“திலீபன்.. அவனுக்கென்ன போய்ச்சேர்ந்திட்டான் நாங்கள் தான் வேகி சாகிறம்”

சுனாமி முல்லைத்தீவை அண்டிய கணங்களையும் அது விட்டு சென்ற அழிவுகளையும் சயந்தன் விபரித்த விதம் பதைபதைக்க செய்தது. சுனாமி அடித்ததும் புலிகளின் மீட்பு அணிகள் களத்தில் இறங்கி செயற்பட்டதை வாசிக்க, இன்று ஒரு ஜுஜூப்பீ மாகாண சபையையே முறையாக நடத்த நாங்கள் படும் திண்டாட்டம் நினைவில் வந்தது.

“கடல் ஒரு அரக்கியை போல விறைத்து செத்த குழந்தைகளை அங்குமிங்குமாகத் தாலாட்டியது”

பொஸ்பரஸ் குண்டுகளின் தாக்கமும், பாதுகாப்பு வலயங்களில் சனம் பட்ட அவஸ்தையும், வட்டுவாகல் பாலமும், இறுதிவரை சளைக்காமல் இயங்கிய புலிகளின் நிர்வாகமும், அரப்பணிப்புடன் இயங்கிய வைத்தியர்களும், தப்பி செல்ல எத்தனித்த மக்களை புலிகள் எதிர்கொண்ட விதமும் என போரின் இறுதி நாட்கள் “படுகளம்” எனும் அத்தியாத்தில் பதிவாகிறது.

“அத்தாருடைய காதுகளை தடித்த தோல் வளர்ந்து மூடிக்கொண்டது”

ஜெயமோகனின் “காடு” நாவலுக்கு இணையான வாசிப்பனுபவத்தை “ஆதிரை” தந்தது. அன்றாட வாழ்வின் கதாபாத்திரங்களின் பார்வைகளினூடே விரியும் காட்சிகள், புலி ஆதரவு புலி எதிர்ப்பு கருத்துகள், வன்னி காட்டு வாழ்க்கையை விபரித்த அழகியல் என ஆவலை தூண்டி, அலுப்படிக்காமல் அடுத்த பக்கங்களை புரட்ட வைத்த நாவல் “ஆதிரை”.

“ரெண்டாம் தர பிரஜைகளாக நாங்கள் உணராத எல்லாமே கெளரவமான தீர்வுதான்”

“ஆதிரை” புத்தகத்தை சென்னையிலிருந்து இயங்கும் இணைய புத்தகாலயத்தில் (அதான் online bookshop) வாங்கலாம். வீட்டுக்கொரு பங்கர் வைத்த இனம் நாங்கள், ஆளுக்கொரு புத்தகம் வாங்கி இனமானம் காப்போம். “ஆதிரை” வாங்கும் போது, சயந்தனின் “ஆறாவடு” குணா கவியழகனின் “நஞ்சுண்ட காடு”, “விடமேறிய கனவு” புத்தகங்களையும் வாங்கி எங்கள் இளம் எழுத்தாளர்களை ஊக்கிவியுங்கோ. ஒரே நேரத்தில் பல புத்தகங்கள் வாங்கிறது மலிவும் பாருங்கோ.

“காலம் ஒரு அரக்கனடா”

ஆதிரை
மண் சுமந்த வலியையும்
இனம் பட்ட வேதனையையும்
மனங்களில் பதிய வைத்த,
மண்ணின் வாழ்க்கைச் சித்திரம்
தமிழன்னையின் கண்ணீர்

http://kanavuninaivu.blogspot.com