பெயரற்றது – சிறுகதை

இவனுக்குப் பகல் இரவு எனப்பாராது கண்களைச் சுழற்றிக்கொண்டு வந்தது. மூன்று நாட்களாக ஒழுங்கான நித்திரையில்லை. நித்திரை மட்டுமென்றில்லை. ஒழுங்கான சாப்பாடு, குளிப்பு முழுக்கு, கக்கூசு என ஒன்றுமில்லை. ரவியண்ணனின் வீட்டின் முன் விறாந்தையில் பனங்கிழங்குகளை அடுக்கியமாதிரி படுத்திருந்த இருபது பேர்களில் கடந்த இரண்டு இரவும் இவன் தன்னையும் அடுக்கியிருந்தான். இந்தப்பக்கம் ஐயாத்துரை மாஸ்ரரும் அந்தப்பக்கம் தீபனும் இவனைக் கண்ணயரவே விடுவதில்லை என்று முடிவு பண்ணியிருக்கவேண்டும். “க்ர்.. புர்..” என்ற அவர்களின் குறட்டை ஒலிக்கு கவிழ்ந்து படுப்பதும், காதுகளைப்பொத்தியபடி படுப்பதுமென என்று இவனும் எல்லாத் தந்திரங்களையும் பாவித்துப்பார்த்தான். ம்கூம். நித்திரை வரவேயில்லை. போதாதற்கு தீபன் அவ்வப்போது தன் வலது காலைத்தூக்கி இவனின் தொடைக்கு மேலே போட்டு “அவ்..உவ்..” என்று புரியாத மொழியில் புசத்தியபடியிருந்தான். அப்படி அவன் காலைத் துாக்கிப் போடுகிற ஒவ்வொரு தடவையும் இவனுக்கு இடுப்பில் கிடக்கிற சாரம் கழன்று போய்விடுமோ என்று சீவன் போனது. “பூனைக்கு விளையாட்டு, சுண்டெலிக்குச் சீவன் போகிறது” என இதைத்தான் சொன்னார்களோ என்று நினைத்துக் கொண்டான். அடிக்கொரு தடவை இடுப்போடு சேர்த்து சாரத்தை இறுக்கி விட்டுக்கொண்டாலும், அது இளகியபடியிருப்பதாகவே உணர்விருந்தது.

விறாந்தையோடு இணைந்து இரண்டு அறைகள் இருந்தன. உள்ளே பெண்களுக்கு ரவியண்ணன் இடமொதுக்கிக் கொடுத்திருந்தார். அவர்களில் கிருஷாந்தியையும் தமிழினியையும் இவனுக்கு ஏலவே தெரிந்திருந்தது. சரியான பயந்தாங்கொள்ளிகள். நேற்றும் பார்த்தான். இரவில் பாத்ரூம் போகும்போது துணைக்கு ஐந்தாறு பேரை அழைத்துச் சென்றார்கள். அத்தனை பேரும் ஒவ்வொருவரின் கையையும் பற்றிப் பிடித்தபடி விறாந்தையில் படுத்திருந்தோரின் கால்களுக்கிடையில் மெதுவாக நடந்து சென்றார்கள். அதனாலேயே ஒருபோதும் துாங்கக் கூடாதென்று இவன் நினைத்தான். சற்றே கண்ணயர்ந்தாலும், தீபனின் கால்பட்டு சாரம் இடுப்பினின்றும் நழுவி விட்டால் என்னாகும் என்ற நினைப்பு உதறலை உண்டுபண்ணியது. “பிறகு பப்ளிக் ஷோ தான். நாசமாப்போன நிலவு வேற, நேரே எறிக்குது.. நல்ல லைற்றிங்”

இவனுக்கு சாரம் கட்டிப் பழக்கமிருக்கவில்லை. அதற்கெல்லாம் பதினெட்டு வயதாக வேண்டும் யாரும் சொல்லாமலேயே ஏனோ தனக்குள் தீர்மானித்திருந்தான். அரைக்காற்சட்டைதான் போடுவான். அல்லது ரன்னிங் ஷோர்ட்ஸ். தர்க்கத்தின்படி பார்த்தால் இவன் ரன்னிங் ஷோர்ட்ஸ்ஸோடுதான் கொடிகாமத்திற்கு ஓடி வந்திருக்க வேண்டும். சுழிபுரத்தில் எங்கேயோ ஒரு பள்ளிக்கூடத்தில் ஒன்னியமார்க்ஸ் கெட் ரெடி என்பதற்குப் பதிலாக “கொப்பர் கொதியில வாறார்.. ஓடு” என்றுதான் சொல்கிறார்கள் என்று ஆனந்தன் அண்ணன் சொல்லியிருந்தார். புளுகாகவும் இருக்கக் கூடும். பொய்யை உண்மையைப்போலவே சொல்ல அவருக்குத் தெரிந்திருந்தது. கந்தக மணம் நிறைந்திருந்த நவாலி தேவாலயத்து வீதியில் இன்னமும் அடங்காதிருந்த புழுதியில் இரத்தமும், தனித்த தலைகளும், பிளந்திருந்த வயிறுகளின் வெளியே குவிந்திருந்த குடலும், அங்குமிங்குமாகப் பிய்ந்திருந்த சதைத் துண்டங்களும் கால்களில் மிதிபட்டபடியிருக்க, ஒற்றைச் சுவரொன்றின் அருகில் கடைசியாக அவரைக் கண்டான். கைகளை இரண்டையும் தலைக்குமேலே விரித்தபடி மேலே வெறித்தபடியிருந்தது அவரது உடல். சேர்ட் பொக்கற்றுக்கு சற்று மேலே துணி கிழிந்திருந்தது. இரத்தம் பீறிடவில்லை. இலேசாகக் கசிந்து சேர்ட்டில் பரவியிருந்தது. ஒருகணம் ஆனந்தன் அண்ணன் நடிக்கிறாரோ என்று தோன்றிய நினைப்பை அழித்துக் கொண்டான். கண்கள் மேலே சொருகி உடல் பஞ்சானதைப் போலிருந்தது. சூழ்ந்த அவலக்குரலை மூளை கிரகித்துக் கொள்ளவில்லை. அரைமணி நேரத்தின் முன்னர் வெள்ளைப் பற்கள் தெரிய பெருத்த உதடுகளுக்கூடாக சிரித்த ஆனந்தன் அண்ணன் செத்துக்கிடந்தார். அடுத்த இரண்டு மணிநேரத்தில் கோம்பயன் மயானத்தில் நெருப்பு அவரைத் தின்று தீர்த்தது. ஆயிற்று மூன்று மாதங்கள்.

ஆனந்தன் அண்ணன் நம்பும்படி சொன்னார். “நீ நம்பாட்டிப் போ, ஆனால் அப்படித்தான் சொல்லுவாங்கள். பெடியங்கள் வரிசையா நிக்க, கொப்பர் கொதியில வாறார் ஓடு.. என்ற உடனை ஓடத்தொடங்குவாங்கள்.”

அன்றைக்கு அப்படித்தான் சொன்னார்கள். “ஆமிக்காரன் கொதியில வாறான். ஓடு..” அப்பொழுது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தான். போட்டிருந்த காற்சட்டையையும் சேட்டையும் ஒரு சைக்கிளையும் தவிர்த்து ஏதுமிருக்கவில்லை. காற்சட்டை அரியாலைக்குள் அதிகாலை மழையில் நனைந்தது. நாவற்குழிப் பாலத்தில் ஏறப் பயந்து ஏரிக்குள் இறங்கியதில், உப்பு நீரிலும் நனைந்தது. அப்போது அடக்க முடியாத அவசரத்தில், இன்னொரு உவர்நீரில் மேலும் நனைந்தது. நனைந்து நனைந்து சாவகச்சேரி வெயிலில் காய்ந்துபோயிருந்தது காற்சட்டை. அன்றைக்கு இரவு, பூச்சி மருந்து மணக்கிற மடித்த சாரமொன்றினைத் தந்த ரவியண்ணன், “இப்ப படுங்கோ, மிச்சத்தை காலமை கதைக்கலாம்” என்றார்.

000
காரைநகரிலிருந்து சனங்கள் பொன்னாலைப் பாலத்திலும் பாலத்தின் கீழே தொடையளவு தண்ணீரிலும் ஓடிவந்துகொண்டிருந்த போது அதுநாள் வரை வெறுமனே பற்றை படர்ந்துபோய்க்கிடந்த தனது வளவுக்குள் அவசரஅவசரமாக ஆட்களைப் பிடித்து பத்மாக்கா மிளகாய்த்தோட்டம் செய்து கொண்டிருந்தார். நிலம் கொத்திய ராசுவன் “அம்மா, இந்த நிலம் மிளகாய்க் கண்டுக்குச் சரிவராது” என்றபோது பத்மாக்க இடுப்பில் கைகளை ஊன்றியபடி அவனை முறைத்தார். “நான் சொன்னதை மட்டும் நீ செய்” என்றார்.

பொன்னாலைக்கும் காரைநகருக்குமிடையிலிருந்த கடல் ஆழம் குறைந்திருந்தது. அமைதிக்கடல். கடலுக்குள் நீண்டிருந்த வீதியில் ஒன்பது பாலங்கள் இருந்தன. காரைநகருக்குள் கடற்படையும் இராணுவமும் காலையில் இறங்கியதிலிருந்து சண்டை நடந்துகொண்டிருந்தது. சனங்கள் கையில் கிடைத்தவற்றுடன் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். பாலங்களை பெடியங்கள் எந்த வேளையிலும் குண்டுவைத்துத் தகர்க்கலாம் என்ற கதை பரவியிருந்ததால் நிறையப்பேர் வீதிக்கு அருகாக கடலுக்குள் இறங்கியிருந்தனர்.

இடம்பெயர்ந்து வந்த சனங்கள் வாசிகசாலைகளிலும் கோயில்களிலும் அவசரத்திற்குத் தங்கியிருந்தார்கள். பூதராசி கோயிலின் கூரைத் தீராந்திகளில் ஏணைகள் குழந்தைகளைச் சுமந்து தொங்கின. வெளியே மூன்று கற்களை வைத்து சுள்ளித்தடிகளையும் பனம்பாளைகளையும் நெருப்புமூட்டி கஞ்சி காய்ச்சினார்கள். முதியவர்கள் பசிக் களையில் கோயில் துாண்களில் முதுகு சாய்த்திருந்தனர். அவர்களின் கண்கள் எங்கோ வெறித்திருந்தன. காரைநகரை பெடியங்கள் கைவிட்டு வந்தார்களாம் என்ற செய்தியை சுரத்தில்லாமல் இளைஞன் ஒருவன் சொல்லிக்கொண்டிருந்த போது கோயிலின் பரிபாலனசபைக்காரர் மோட்டர் சைக்கிளில் அங்கு வந்திருந்தார். அவர் யாரையும் ஏதும் கேட்டாரில்லை. “அகதிச்சாதியள், இந்தப் பக்கமும் வரக்கூடாது.” என்பதே அவரது முதற்சொற்களாயிருந்தன.

“தம்பி, இந்த ஒரு பொழுதுக்கு மட்டும் தங்கிப்போட்டு போறம். பெண் பிரசுகள் களைச்சுப் போட்டுதுகள்”

“அந்த இந்தக் கதையில்லை, பின்னேரப் பூசைக்கு கோயில் கிளீனா இருக்க வேணும். சாப்பிட்ட கையோடை வெளிக்கிடுறியள். சரியோ..” என்றவர் உள்ளே கர்ப்பக்கிரகத்திற்கு அருகாக நின்ற சிறுவன் ஒருவனை “டேய், நாயே இங்காலை வா மூதேவி” என்று திட்டினார். அவன் பதுங்கிப் பதுங்கி வெளியேறினான். பின்னர் அவர் அகதி நாய்கள் என்ற படி மோட்டர்சைக்கிளில் புறப்பட்டார்.

“அகதிச்சாதியெண்டொன்று இருக்கோ” என்று இவனைக் கேட்டான் அவன். பக்கத்து வாசிகசாலையிலிருந்து புளிச்சல் விளையாட வந்திருந்தான். இவனது வயதுகளில் ஒன்றிரண்டு கூடிக்குறைந்திருக்கலாம். அவனும் மற்றவர்களும் அன்றைக்கே கோயிலிலிருந்து வெளியேறி வாசிகசாலையில் புகுந்து கொண்டார்கள் என்றான். இவனது வீட்டிலும் அப்பம்மா வீட்டிலும் அவர்களைப் போல நிறையப் பேர் தங்கியிருந்தார்கள்.

ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த பேணிகளின் மீது பந்தை கோபத்தோடு வீச்சுடன் எறிந்த போது மீண்டும் ஒருதடவை “அகதிச்சாதியள்” என்று அவன் சொல்லிக்கொண்டான். அந்த வார்த்தை அவனைக் காயப்படுத்தியிருந்தது. இவனுக்குத் தெரிய அப்படியொரு சாதி இருந்திருக்கவில்லை. ஆனாலும் நாய்ச்சாதியென்ற ஒன்றை பத்மாக்காவும் மில்கார பாலுவும் அடிக்கடி சொல்ல இவன் கேட்டிருந்தான்.

சும்மா கிடக்கிற வளவுகளில் இடம்பெயர்ந்த சனங்களை இயக்கம் குடியமர்த்துகிறதாம் என்ற கதை பரவியபோது பத்மாக்காவின் மிளகாய்க் கண்டுகள் காய்ந்து வாடிக் கருகிப்போயிருந்தன. இம்முறை வேறொரு ஐடியாவினை அவர் பாவித்தார். வளவு முழுவதும் பனங்கிழங்குப் பாத்திகளை அவர் போட்டார். பிரேதங்களைப் புதைத்த மண் கும்பிகளைப்போல பனங்கிழங்குப் பாத்திகள் வேலிக்குள்ளால் பார்த்தபோது தெரிந்தன. “பனங்கொட்டைகள் எப்பொழுது கிழங்குகளாக மாறும்” என்று இவன் அப்பம்மாவிடம் கேட்ட அடுத்தநாள் பத்மாக்கா வேலியருக்கில் சன்னதம் கொண்டு ஆடினார்.

“எளிய அகதி நாய்கள், வேலியைப் பிடுங்கிக்கொண்டு போயிருக்குதுகள். கள்ளச்சாதியள் அடுப்பெரிக்கிறதுக்கு என்ரை வேலியின்ரை கருக்கு மட்டைதான் கிடைச்சதோ.. பூதராசி அம்மாளே உந்தக் கேடு கெட்டதுகள் புழுத்துச் சாகோணும்..” என்று மண்ணை இரண்டு கைகளாலும் வாரி அள்ளி காற்றில் வீசியெறிந்து கத்தினார். அவரது குரல் எட்டு வீட்டுக்குக் கேட்கத்தக்கதாய் இருந்தது. தெருவுக்கு இறங்கினால் வீணாண பிரச்சனைகள் வருமென்று அப்பம்மா படலையை மூடிவிட்டு வந்தார். அவர் பத்மாக்கவோடு கதைப்பேச்சை நிறுத்தி நீண்ட நாட்களாயிருந்தது.

“ஆரோ, ஏலாக்கொடுவினையில ரண்டு கருக்கு மட்டையை எடுத்துக்கொண்டு போனதுக்கு இவள் பத்மா ஆடுற ஆட்டத்தைப்பார்”

tamiltigersஇப்பொழுது பத்மாக்காவின் குரல் படலையடியில் கேட்டது. “இஞ்சையும் கொஞ்சப்பேர், காசைக் கண்ட உடனை தலைகால் தெரியாமல் ஆடுதுகள். இதுகள் அதுகளுக்கு அண்ட இடம் கொடுக்கிறதாலைதான் அதுகள் தலைக்கு மேலை ஏறி ஆடுதுகள். இனி ஆரும் வேலியில கை வைக்கட்டும். அடிச்சு முறிப்பன்.”
அன்று இரவு இவனின் சித்தப்பா விறுவிறென்று பத்மாக்கா வீட்டுப்படலையருகில் சென்று“பத்மாக்கா, வெளியில வாங்கோ.. கொஞ்சம் கதைக்கோணும்” என்றார். பத்மாக்கா வரவில்லை. உள்ளே விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது யன்னல்களுக்கால் தெரிந்தது. சித்தப்பா படலையில் கைவைத்துத் தட்டினார். “பத்மாக்கா வெளிய வரப்போறியளோ இல்லையோ..” இதற்கிடையில் ஓடிப்போய் அப்பம்மா சித்தப்பாவின் கைகளைப்பற்றி இழுத்து வீட்டுக்கு கூட்டிவந்தார். இம்முறையும் பத்மாக்கா சித்தப்பாவிடம் முறையாக வாங்கிக் கட்டினார் என்ற செய்திக்காக காத்திருந்த இவனுக்கு ஏமாற்றமாயிருந்தது. சித்தப்பா காலையிலேயே புறப்பட்டுப்போனார். சற்றுநேரத்தில் இரண்டு இயக்கப்பெடியங்கள் சைக்கிளில் வந்து பத்மாக்காவை விசாரித்தார்கள்.

“என்ன அக்கா, சாதிப்பேருகளைச் சொல்லித் திட்டிறியளாம்”

“ச்சீச்சீ, கள்ளர் கூடிப்போச்சு தம்பியவை, நான் சும்மா பொதுவாத்தான் சொன்னனான். வேலியைப் பிய்ச்சுக் கொண்டு போட்டுதுகள். ஆருக்கும் கோபம் வரத்தானே செய்யும்”

“சரியக்கா, இனிமேல் முறைப்பாடுகள் கிடைக்காதமாதிரி நடந்துகொள்ளப்பாருங்கோ..” என்று புறப்பட்டவர்களை பத்மாக்கா தடுத்து நிறுத்தினார். “தம்பியவை, பனங்கிழங்கு போட்டிருக்கிறன். என்ரை வளவுக் கிழங்கு, நல்ல ருசியாயிருக்கும். கிழங்கு புடுங்கேக்கை மறக்காமல் வாங்கோ, உங்களுக்குத்தான்” என்றார்.

பத்மாக்கா பனங்கிழங்குகளைப் பிடுங்கிக் கொஞ்சக்காலம் வளவு சும்மா கிடந்தது. திடீரென்று ஒருநாள் ஆட்கள் கூடி மூன்றடிக்கு ஒன்றென வாழைக்கன்றுகளை அங்கு நட்டுக் கொண்டிருந்தபோது மாதகலில் இருந்து சனங்கள் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்தார்கள்.

0 0 0

கொடிகாமத்தில், ரவியண்ணையின் வீட்டுக் கேற்றடியில் நின்றபோது உள்ளே வாழைத்தோட்டங்களோ பனங்கிழங்குப் பாத்திகளோ இருக்கலாமென இவனுக்கு ஏனோ தோன்றியது. சைக்கிளை உருட்டியபடி நுழைந்தான். அப்படியேதும் இருக்கவில்லை. மூன்று அறைகளுடன் கூடிய சிறிய வீடு அது. குசினி தனியே இருந்தது. ஏற்கனவே சனங்கள் நிறைந்திருந்தார்கள். தயங்கி நின்று திரும்பிப்பார்த்தான். இவனுக்குப்பின்னால் அம்மா, அப்பம்மா, அத்தை, ஐயாத்துரை மாஸ்டர், அவரது மனைவி, மேனகா, சீனியாச்சி, தீபன், கமலாக்கா எல்லோரும் நின்றிருந்தனர். ரவியண்ணையை யாரென்று தெரிந்திருக்கவில்லை. எட்வேர்ட் அங்கிள்தான் கைதடிப்பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக வைத்து “கொடிகாமத்தில எனக்குத் தெரிஞ்ச இடம் ஒன்றிருக்கு, நீங்கள் முதலில அங்கை போங்கோ. ரண்டொரு நாளில நான் எழுதுமட்டுவாளில இடம் ஒழுங்குபடுத்துறன்.” என்று இடம் சொல்லிவிட்டார். கொடிகாமம் சந்திக்கு சற்றுத்தள்ளிப் பிரிகிற ஒழுங்கையில் அவரது லொறி நிற்கிறது. அதற்கடுத்த வீடு.

எட்வேட் அங்கிளை எதேச்சையாகத்தான் சந்தித்தார்கள். கைதடிக்கு வரும்வரையிலும் எங்குபோவதென்ற யோசனையிருக்கவில்லை. எப்படியாவது வெளியேறிவிடவேண்டுமென்ற ஒன்றைத்தவிர. பிறகு எங்கு போவதென்று தெரிந்திருக்கவில்லை. பொழுது பட்டிருந்தது. இரவை எங்காவது சமாளித்துவிட வேண்டும். விடிந்ததும் ஏதாவது கோயிலையோ வாசிக சாலையையோ தேடிக்கொள்ளலாம்.

அம்மாதான் எட்வேட் அங்கிளைக் கண்டாள். வேலியொன்றின் ஓரமாக ஒரு பனங்குற்றியில் அமர்ந்திருந்தார். “எட்வேட் அண்ணன்.” என்று கத்தினாள். அவர் கண்டுகொண்டார். எழுந்து கைகளை விசுக்கியவாறு நடந்து வந்தார். அவருக்குச் சொந்தமான தென்னந்தோட்டமொன்று எழுதுமட்டுவாளில் இருந்தது. அதில் ஓரிடம் கேட்கலாம் என்று அம்மா நினைத்திருந்தாள்.

“வந்திட்டீங்களே, நான் என்ரை குடும்பத்தைப்பாத்துக் கொண்டு நிக்கிறன். நானிங்கை அலுவலா தோட்டத்தில நிண்டனான். அப்பதான் அறிவிச்சிருக்கிறாங்கள். இதாலதானே வரவேணும். அதுதான் நிக்கிறன். நீங்கள் எங்க தங்கப் போறியள்..” என்று கேட்டபோது அம்மா வெறுமையாக அவரைப்பார்த்தபடி மௌனமாக நின்றாள். இவன் தலையைக் குனிந்து கொண்டான். அழுகை வரும்போலிருந்தது. எட்வேட் அங்கிள் சட்டென்று சுதாகரித்துக் கொண்டார்.

“ஒண்டுக்கும் யோசிக்கவேண்டாம். ஆளையாள் மாறுப்படாமல் கொடிகாமம் சந்திக்குப் போய் நில்லுங்கோ, நான் எங்கடையாட்களையும் கூட்டிக்கொண்டு வாறன். எல்லாம் சமாளிக்கலாம்.”

“அண்ணன், எங்களோடை வேறையும் ரண்டு குடும்பம் நிக்குது” என்றாள் அம்மா. அவர் சொல்லப்போகிற பதிலுக்காக ஐயாத்துரை மாஸ்டர் ஏக்கத்தோடு நிற்பதாக இவனுக்குத் தோன்றி அது கஸ்ரமாயிருந்தது.

“ஓம், முதலில இண்டைக்கு இரவு எல்லாரும் காலாற வேணும், மிச்சத்தை நாளைக்குப் பாப்பம். நீ எல்லாரையும் கூட்டிக்கொண்டு போ”
தொடர்ந்து நடக்கத் தொடங்கினார்கள். இன்னமும் சன நெருக்கம் குறைந்ததாய் இல்லை. இயக்கத்தின் வாகனங்கள் சனங்களை விலக்கியபடி ஓடித்திரிந்தது. இருள் மூடிப்பரந்திருந்தது. சாவகச்சேரிச் சந்தி மட்டும் இயக்கத்தின் ஏற்பாட்டில் ரியுப் லைற்றுக்களின் வெளிச்சமாயிருந்தது. அங்கிருந்த கட்டடத் தாள்வாரமொன்றில் சாந்தாக்கா காலை நீட்டி சுவரில் முதுகைச் சரித்து இருந்ததைக் கண்ட அப்பம்மா துடித்துப்பதைத்து அருகாக ஓடிப்போனா. சாந்தாக்காவின் இரண்டு வயதுக் குழந்தை பக்கத்தில் வளர்த்தப்பட்டிருந்தது. அதன் முகத்தில் அமர்கிற இலையான்களை சாந்தாக்க கலைத்தபடியிருந்தா. அப்பம்மாவைக் கண்டவுடன் முகத்தில் லேசான மலர்ச்சி பரவியிருந்தது.

“கடவுளே, வயித்தைப்பாத்தால் இண்டைக்கோ நாளைக்கோ எண்டிருக்கு, ஏனடி பிள்ளை தனிய வெளிக்கிட்டனியள், புருசன் எங்கை..”

சாந்தாக்காவும் கணவரும் ஊரில் தனியத்தான் இருந்தார்கள். சொந்த இடம் தெரியவில்லை. நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் சாதி மாறி ஓடிப்போய் கல்யாணம் கட்டினார்களென்றும், அதனால் இரண்டு வீட்டிலும் அவர்களை அண்டுவதில்லையென்றும் இவன் கேள்விப்பட்டிருந்தான். அதன்பிறகே இவர்களது ஊருக்கு குடிபெயர்ந்திருந்தார்கள். சாந்தாக்காவின் அண்ணன் “அவளை வெட்டிப்போட்டுத்தான் என்ரை தாடியை வழிப்பன்” என்று சாமியார் போல தாடி வளர்த்துத் திரிந்தாராம்.

அப்பம்மா சாந்தாக்காவை ஆதரவாகப் பற்றினா. “பிள்ளைக்கு பால் குடுக்க வேணும். அவர் எங்கையாவது சுடுதண்ணி எடுத்துவரப்போட்டார். நாள் முழுக்க ஒண்டும் குடிக்கேல்லை. பசிக்களையில அழுது அழுது படுத்திட்டுது..” சாந்தாக்கா தலையைக்குனிந்து அழுதா. வார்த்தைகள் அழுகையில் சிக்குப்பட்டு திக்கித் திணறி வந்தன.

“நீ எழும்பி எங்களோடை வா, எங்களுக்குக் கிடைக்கிற திண்ணையில ஒரு துண்டை உனக்கும் தந்தால் ஒண்டும் குறைய மாட்டம். மெதுவா எழும்பு. உனக்கு எப்ப திகதி..”
சாந்தாக்காவின் கணவர் பிளாஸ்ரிக் சோடாப் போத்தலொன்றில் சுடுதண்ணீர் கொண்டு வந்தார். போச்சிப் போத்தலில் மா விட்டுக் கலக்கி குழந்தையின் வாயில் வைக்கவும் அது அவசர அவசரமாக உறிஞ்சத் தொடங்கியது. “சரியான பசி..”

சாந்தாக்கா சுவரையும் அப்பம்மாவின் தோளினையும் பற்றி எழுந்து கொண்டார். சற்றுத்துாரம் நடப்பதுவும் பிறகு முழங்கால்களில் கைகளை ஊன்றி நின்று மூச்சுவாங்குவதுமாக நிறையச் சிரமப்பட்டார். அவரைப்பார்க்கப் பாவமாக இருந்தது. வருகிற வழியில் நாவற்குழிக்குக் கிட்டவாக யாருக்கோ வீதியில் குழந்தை பிறந்திருந்ததாம். அதே வீதியில் ஒரு கிழவி செத்துப்போனதாம். அருகிலேயே குழிதோண்டிப் புதைத்தார்கள் என்று பேசிக்கொண்டார்கள்.

கொடிகாமத்துச் சந்திக்கு வந்தபோது ஐயாத்துரை மாமி தலையிலடித்துக் குளறத்தொடங்கினா. “எடியே மேனகா, உன்ரை கொய்யாவைக் காணேல்லையடி.. ” என்றபடி அவ வீதியோரத்தில் இருந்தா. இவன் சுற்றும் முற்றும்பார்த்தான். ஐயாத்துரை மாஸ்டரைக் காணவில்லை. சாவகச்சேரியிலிருந்து புறப்பட்டபோது இவனுக்குப் பின்னால் நடந்து வந்துகொண்டிருந்தார். இருட்டியிருந்ததாலும் வீதி முழுவதும் சனங்களால் நிரம்பியிருந்ததாலும் இவர்கள் ஒருவரையொருவர் கூப்பிட்டபடியே வரிசையில் நடந்துகொண்டிருந்தனர்.

“தீபன்.. தீபன்.”

“ஓமோம்.. ஓமோம்..”

“பூரணமாச்சி.. பூரணமாச்சி..”

“ஓம் பிள்ளை.. ஓம் பிள்ளை..”

ஒருதடவை இன்னொரு தீபனும், இரண்டு தடவைகள் வேறிரு பூரணமும் இதற்குள் உள்ளிடப்பார்த்தார்கள். “ஐயா மாஸ்டர், ஐயா மாஸ்டர்..” என்று இவன் கத்தினான். “என்னங்கோ, இஞ்சேருங்கோ..” என்று மாமி கிட்டத்தட்ட அழுகிற நிலைக்கு வந்திருந்தா. “கடவுளே, நான் என்ன செய்வன், மனிசனிட்டைத்தானே காசு நகைகளும், வீட்டு உறுதியும் கிடக்கு. படிச்சுப் படிச்சுச் சொன்னனான். முன்னுக்கு வாங்கோ எண்டு. அலமலாந்திக்கொண்டு நிண்டு துலைஞ்சு போச்சுது..” மாமி கணவருக்காக அழுகிறாவா அல்லது வீட்டு உறுதிக்கும் நகைக்கும் பணத்திற்கும் கவலைப்படுகிறாவா என்று இவனுக்குத் தோன்றிய போது சிரிப்பு வந்தது.

கொடிகாமம் சந்தியில் காணாமற் போனவர்களைப் பற்றிய அறிவிப்புக்களை இயக்கம் செய்து கொண்டிருந்தது. மினி பஸ் ஒன்றிலிருந்து சந்தியில் பொருத்திய ஒலிபெருக்கிகளுக்கூடாக வழியில் தவறிய மனிதர்களின் பெயர்களும் அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகளும் சொல்லப்பட்டுக்கொண்டிருந்தன. பெரும்பாலும் முகவரிகளாக பஸ் ஸ்ரான்டுகளும், கோயில்களுமே இருந்தன. இவனும் சாந்தாக்காவின் கணவரும் அங்கு போனபோது இயக்கப்பாடலொன்று “ஓடு.. ஓடு.. ஓடு.. நீயும் ஓய்ந்து விட்டால் வரும் கேடு..” என ஒலித்தபடியிருந்தது. அவர் இவனைத் தட்டி “நாசமாப்போவார், போடுற பாட்டைப்பார்..” என்றார்.

விபரங்களைக் கொடுத்தார்கள். ஓய்வுபெற்ற அதிபர் ஐயாத்துரை அவர்கள் எங்கிருந்தாலும் கொடிகாமம் சந்திக்கருகில் வரவும் என இரண்டு தடவைகள் அறிவித்தார்கள். பின்னர் அதே தகவலை வோக்கி டோக்கியில் சாவகச்சேரிக்கு அறிவித்தார்கள். ஓய்வு பெற்ற அதிபர் ஐயாத்துரையின் குடும்பத்தினர் கொடிகாமம் சந்தியில் அவருக்காக காத்து நிற்கின்றனர் என்ற அறிவிப்பு சாவகச்சேரி சந்தியில் ஒலித்துக் கொண்டிருந்தபோது ஒரு பஸ் தரிப்பிடத்தில், நகையும் காசும் உள்ள பையைச்சுற்றி கோவணத்திற்குள்ளும், வீட்டுப்பத்திரத்தை தலைமாட்டிலுமாக வைத்தபடி ஐயாத்துரை மாஸ்டர் க்ர்.. புர்.. என்று குறட்டைவிட்டுத் துாங்கியபடியிருந்தார்.

கடைசிவரை அவரைக் கண்டுபிடிக்க முடியாமல், இவர்கள் எட்வேட் அங்கிள் சொன்ன இடத்திற்கு வந்திருந்தார்கள். எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. இவனுக்கு தண்ணீர் தாகமாயிருந்தது. உள்ளேயிருந்து வந்த ஒருவரிடம் “இங்கை ரவியண்ணை எண்டது...” என்று தயங்கி இழுத்தான்.

“நான்தான், சொல்லும்..”

“எட்வேட் அங்கிள் எங்களை இங்கை போகச் சொன்னவர். தான் பிறகு வாறனெண்டு..”

“ஓ.. உள்ளை வாங்கோ, எல்லாரும் வாங்கோ..” ரவியண்ணை முகம் மலர வரவேற்றார். பொதிகளை இறக்காமல் சைக்கிளை வேலியோரமாக நிறுத்திவிட்டு விறாந்தையில் இருந்து கொண்டார்கள். சாந்தாக்கா துாணைப்பிடித்தபடி மெதுமெதுவாக உட்கார்ந்தார். இவன் சுற்றும் முற்றும் பார்த்தான். இவனது கணக்குக்கு ஐம்பது பேரளவில் நிறைந்திருந்தார்கள். அறைக்குள்ளிருந்து கிருஷாந்தியும் தமிழினியும் வெளியே வந்ததைக் கண்டான். சட்டென்று மனம் குளிர்ந்ததைப் போலிருந்தது.

அப்பம்மா அவசர அவசரமாக அரிசி மாவிற்குள் சீனியும் தண்ணீரும் விட்டுக் குழைத்துக் கொடுத்தா. சாப்பிடப் பிடிக்கவில்லை. ஆனால் வயிறு பசியிலிருந்தது. இரண்டு மூன்று உருண்டைகளை விழுங்கினான்.

ரவியண்ணை சாந்தாக்காவிற்கு கட்டிலொன்று ஏற்பாடு செய்தார். இவனுக்கும் தீபனுக்கும் கட்டுவதற்கு சாரம் தந்தார். “முதல்லை எல்லாரும் படுத்தெழும்புங்கோ, விடியப்பாப்பம்..”

இருபத்தியாறு மணிநேரம் நடந்த களைப்பில் எல்லோரும் அடித்துப் போட்டதைப்போன்று துாங்கினார்கள். அன்றைக்கு உறக்கம் வராமல் இருந்ததென்றால் இவனும் ஐயா மாமியும்தான். அவருக்கு கணவரைப்பற்றியோ அல்லது வீட்டுக் காணி உறுதியைப்பற்றியோ கவலை. இவனுக்கு தீபன் மேலே காலைப் போட்டு படுத்திய ஆக்கினை. இடுப்பில் தளர்ந்து தளர்ந்து சரிகிற சாரத்தை செருகியும் இறுக்கியுமாக இரவு நகர்ந்து விடிந்தபோது எல்லோருக்கும் ரவியண்ணையின் மனைவி சுடச்சுட கோப்பி கொடுத்தார்.

0 0 0
பத்மாக்காவிற்கும் சித்தப்பாவிற்கும் இடையில் ஒரு கோப்பியினால்தான் சண்டை மூண்டது. சோனாவாரி மழையொன்றிற்கு வேராடு சாய்ந்த பத்மாக்காவின் பின்வளவுப் புளியமரத்தினை ஆட்களை வைத்து அவர் தறித்து விறகுகளாக்கினார். அன்றைக்கு காலை “நேசன், ஒருக்கா வா, ஆளும் பேரும் சேந்தா கெதியில முடிக்கலாம்” என்ற போது சித்தப்பா போயிருந்தார். பத்மாக்கா ஆட்களை அழைப்பதே, அதட்டுவதைப் போலிருக்கும். அப்பம்மாவைக் கூட “பூரணம், இங்கை வா..” என்றுதான் கூப்பிடுவார்.

எல்லோருமாக மரத்தைத் தறித்துத் துண்டாக்கினார்கள். மழை இலேசாகத் துாறியபடியிருந்தது. மத்தியானம் நெருங்கிய போது கேத்தலில் கோப்பியைக் கொண்டுவந்த பத்மாக்கா புத்தம் புதிய சிரட்டைகளில் அதனை வார்த்து ஆட்களுக்குக் கொடுத்த கொஞ்ச நேரத்தில் திடுதிடுப்பென்று சித்தப்பா வீட்டுக்கு வந்தார். பின்னாலேயே பத்மாக்காவும் வந்தா.

“எளிய வடுவா, கோப்பி குடுத்தால் அதை என்ரை மூஞ்சையில ஊத்திப்போட்டுப் போவீரோ.. உங்களுக்கெல்லாம் எப்ப வந்த கெப்பம். என்ரை புரியனுக்கு முன்னால வாயையும் சூத்தையும் பொத்திக்கொண்டு திரிஞ்சதுகள் எல்லாம் இண்டைக்கு தலையெடுத்துத் திரியுதுகள். ஐயோ என்ரை ராசா.. நீர் போன பிறகு ஒரு நாய்ச்சாதியும் என்னை மதிக்குதுகள் இல்லை..” என்று நடு முற்றத்தில் நின்று ஒப்பாரி வைத்தா. சித்தப்பாவைத் திட்ட வந்த இடத்தில் கணவருக்கும் சேர்த்து ஒப்பாரி வைப்பது இவனுக்கு விசித்திரமாயிருந்தது. கொஞ்ச நேரத்திற்கு அங்கு நின்று கத்தியவர் பிறகு “பூதராசி அம்பாளே, உதுகள் புழுத்துப் போக..” என்று இரண்டு கைகளையும் மேலே உயர்த்திச் சாபமிட்டார். பிறகு போய்விட்டார்.

“என்ன இருந்தாலும் இவள் பத்மா இப்படிச் செய்திருக்கக் கூடாது. மூக்குப் பேணியில எண்டாலும் கோப்பியைக் குடுத்திருக்கலாம்” என்ற அப்பம்மா சித்தப்பாவிடம் திட்டு வாங்கினா. “ஏன், ரம்ளரில தந்தால் என்ன. உப்பிடியே நீங்களும் கூழைக்கும்பிடு போட்டு அவ சொன்னமாதிரி புழுத்துப் போங்கோ..”

அன்றைக்கு இரவு சித்தப்பா இவனிடம் சொன்னார். “நான் கோப்பியை முகத்தில ஊத்தவில்லை. நிலத்திலதான் ஊத்திப்போட்டு வந்தனான். ஆனால் இப்ப நினைக்கிறன். சுடச்சுட மூஞ்சையில ஊத்தியிருக்கோணும்.”

அன்றைய நாளுக்குப் பிறகு பத்மாக்கா கதை பேச்சை நிறுத்திக் கொண்டார். காண்கிற இடங்களில் பெரும் சத்தத்தில் காறி நிலத்தில் உமிழ்ந்தார். இவனைக் காண்கிற போதெல்லாம் “எளியதுகள்” என்ற வார்த்தை தவறாமல் அவரிடமிருந்து வரும். சித்தப்பாவிற்கும் அவவுக்குமிடையில் முறுகல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அடுத்து வந்த காலங்களில் சித்தப்பா இயக்கத்திற்குப் போனார். அப்பொழுது கண்ட இடங்களில் காறித்துப்புவதை பத்மாக்கா நிறுத்தினார். நான்கைந்து வருடங்களில் பஜிரோ ஒன்றில் சித்தப்பா வீட்டுக்கு வந்தபோது வாயெல்லாம் பல்லாகச் சிரித்த பத்மாக்கா “நேசன் தம்பி, எப்பிடி சுகமாயிருக்கிறீரோ.. கட்டாயம் ஒருக்கா வீட்டுக்குச் சாப்பிட வரவேணும்” என்றார்.

சித்தப்பா இவனுக்குச் சொன்னார். “போராட்டம் எல்லாவற்றையும் மாற்றும்..” ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று இவன் நம்பத் தலைப்பட்டான்.

0 0 0

ரவியண்ணை வீட்டில் மேனகா சாமத்தியப்பட்டுவிட்டாள். அன்றைக்கு காலை ஐயாத்துரை மாஸ்டர் ஓவென்று அழுதது இவனுக்கு எரிச்சலை ஊட்டியது. “சனியனே, உனக்கு நேரம் காலம் தெரியாதோ.. இப்ப இது தேவையோ.. தேவையோ” என்று மேனகாவின் முதுகில் அடிக்கத்தொடங்கிய போது ஆட்கள் அவரை மறித்துக் கொண்டார்கள். ஐயா மாமி மேனகாவை தனக்குள் அணைத்துக் கொண்டார். அவள் அழுது கொண்டிருந்தாள். இப்பொழுது ஐயாத்துரை “ஐயோ.. நான் என்ன செய்வன், நான் என்ன செய்வன்..” என்று தன் தலையில் அடித்து அழத்தொடங்கினார்.

“ஐயாத்துரை, இப்ப என்னத்துக்கு ஒப்பாரி வைக்கிறாய், இப்ப என்ன நடந்து போட்டுது.. ” அப்பம்மா அவரை சமாதானப்படுத்தினாள்.

சாந்தாக்காவிற்கு சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் மகள் பிறந்திருந்தாள். முன்றாம் நாள் அவரையும் குழந்தையையும் வீட்டுக்கு கூட்டிவந்தார்கள். இவன் பொழுது போகாத சமயங்களில் அவவின் மூத்தபிள்ளையோடு விளையாடினான். இரண்டு கைகளிலும் துாக்கி பறப்பது போல் சுழற்றியபோது அவள் கிலுகிலுவெனச் சிரித்தாள். ஒருநாள் பிறந்த குழந்தையை வருடியபடியிருந்த சாந்தாக்கா விரக்தியான சிரிப்பொன்றினுாடே “என்ரை மகள் பிறக்கும்போதே அகதி” என்று சொன்னதை தாங்க முடியாமல் இருந்தது.

சித்தப்பாவும் இரண்டு இளைஞர்களும் வந்திருந்தார்கள். வெளியே ஒழுங்கையில் பஜிரோ நின்றது. நிசான் என்பதை நேசன் என எழுத்துக்கூட்டி இவனுக்குக் காட்டிய அதே பஜிரோ. ஒருநாளைக்கு அதிலேறி ரியுஷன் வரையாவது போக வேண்டுமென்றொரு ஆசை இவனுக்கு இருந்தது. இவனின் விருப்பத்தை சித்தப்பா ஒருபோதும் நிறைவேற்றியதில்லை. அவர் தலையைக் குனிந்திருந்தார். நீண்ட அமைதிக்குப் பிறகு “வன்னிக்குப் போறது நல்லம்..” என்றார்.

“நீ ஒரு சொல்லுத்தன்னும் முதலே சொல்லியிருந்தா கொஞ்சம் ஆயத்தங்களோடை வந்திருப்பமெல்லே, இஞ்சை பார், ஒண்டுக்கும் உருப்படியான உடுதுணி இல்லை.” அப்பம்மா அவரைக் கடிந்து கொண்டாள்.

“எனக்கும் அண்டைக்கு இரவுதான் தெரியும்..”

கொஞ்ச நேரத்தில் அவர் புறப்பட்டார். “அண்ணி, சனங்கள் எங்களைத் திட்டுறது உண்மைதான். நியாயமும்தான். சொல்லுறனெண்டு குறை நினைக்காதைங்கோ, பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு வன்னிப்பக்கம் போங்கோ, இந்த இடமும் நிரந்தரமில்லை.”

இவன் கேற் வரை நடந்தான். சித்தப்பா நின்று திரும்பி ரவியண்ணை வீட்டையும் சனங்களையும் ஒருதடவை பார்த்தார். “ரவியண்ணை மாதிரியான ஆட்களை எங்கடை போராட்டம்தான் உருவாக்கியது. சனங்களுக்கு வீடுகளைக் கொடுத்து வளவுகளைக் கொடுத்து எந்த வேற்றுமையும் பாராமல் நாங்கள் ஒரு இனமென்ற ரீதியில ஒன்றுபட இந்தப் போராட்டம்தான் உதவியிருக்கு.. ”
இவனுக்கு அது உண்மையாயிருந்தது. ரவியண்ணை வீட்டிலன்றி வேறெங்கும் பனம்பாத்திகளைக் காணவில்லை. வெறும் வளவுகள் மிளகாய்ச் செடிகளால் நிறைந்திருக்கவில்லை. இருந்தாலும் “இந்த இனத்தின்ரை ஒற்றுமையை உலகுக்குக் காட்ட எத்தினை தடவை வேண்டுமானாலும் இடம் பெயரலாம்” என்று சித்தப்பா சொன்னதைத்தான் சரியென்று எடுத்துக் கொள்ள முடியவில்லை.

நான்காம் நாளும் விடிந்தது. காலையிலேயே பாணுக்கு வரிசையில் நிற்கப்போய், இவனது முறை வருவதற்கு ஒன்றிரண்டு பேரே முன்னால் நிற்கிற நிலையில் கிபிர் விமானம் தலைக்குமேலே சுற்றத்தொடங்கியிருந்தது. பேரிரைச்சலைக் கோடாக இழுத்தது போல சத்தம் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக மாறி மாறி காதைப் பிளக்க வைத்தது. வேலியின் அருகாகப் பதுங்கியவாறு வீட்டிற்கு ஓடிவந்திருந்தான். எல்லோரும் மரத்தைச் சுற்றிக் கீழே விழுந்து குப்புறப்படுத்திருந்தார்கள். எங்கோ துாரத்தில் குண்டுச் சத்தங்கள் கேட்டன. அப்பொழுது பக்கத்திலிருந்தவனுக்கு பத்து வயதும் நிரம்பியிருக்காது. அவன் “அண்ணன், ரொக்கட் அடிக்கிறான்” என்றான்.
கிபிர் சத்தங்கள் ஓய்ந்தபிறகு இவனுக்கு திரும்பவும் பாணுக்குப் போகத் தோன்றவில்லை. விறாந்தையில் படுத்திருந்தான். சற்று நேரத்தில் ஐயாத்துரை மாஸ்டர், ஷொப்பிங் பைகளில் ரோஸ்பாண்களை நிறைத்தபடி வந்தார். அவரது முகத்தில் “காம்ப் அடித்த” பெருமிதக் களை தெரிவதாக இவனுக்குத் தோன்றியது. மாமி கத்தத் தொடங்கினார்.

“கிபிர் அறம்புறமாச் சுத்தியடிக்கிறான். பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேருவமெண்டில்லை. நிண்டு பாண் வாங்கிக் கொண்டு வாறியள், என்ன மனிசனப்பா நீங்கள்.”

“எடி போடி விசரி, ஒவ்வொரு நாளும்தான் அவன் குண்டு போடுறான். அதுக்காக மனிசர் பட்டினி கிடக்க முடியுமே. நீ சம்பல் இடி, ரோஸ் பாணுக்குச் சோக்கா இருக்கும்..”
ஐயாத்துரை மாஸ்டர் இந்த நான்கைந்து நாட்களிலேயே தன் வாத்தியார் புத்தியைப் பயன்படுத்தி தனக்குக் கீழே அணி ஒன்றை உருவாக்கியிருந்தார். “எல்லாரும் வாருங்கோ பிள்ளையள் விறகு பொறுக்கியருவம், கிளம்புங்கோடி பாணுக்குப் போவம்..” என்று ஒரு கொமாண்டரைப் போல ஆகியிருந்தார். எரிச்சலாக இருந்தாலும் அணியில் இருக்கிற தமிழினிக்காகவும் கிருஷாந்திக்காகவும் இவன் தன்னையும் அதில் இணைத்துக் கொண்டான்.

ஒருநாள் “தம்பி டோய், இந்தா நீயும் தீபனும் இந்த ரண்டு பெடியங்களோடை போய், கோயில் தாண்டி வாற காணிக்குள்ளை தென்னம் பாளையள் கிடக்கும். பொறுக்கி வாருங்கோ” என்று இவனைப் பிரித்து அனுப்பிய போது இவன் மனதிற்குள் கறுவினான். “ரண்டு பெட்டையளையும் சேர்த்து அனுப்பினால் குறைஞ்சே போயிடுவியள்..” அன்றைக்கே அணியிலிருந்து விலகுவதென முடிவு செய்தான். நல்ல வேளையாக காலை கிபிர் வந்து அதனைச் செய்தது.

ஆனாலும், கோயிலடிக்குப் போக மனம் அவாவியது. அங்கே இயக்கமுகாமொன்றிருந்தது. சென்ற முறை விறகு பொறுக்கப்போனபோது கண்டிருந்தான். சீற்றுக்களால் கூரை வேயப்பட்ட நீண்ட கொட்டகையைச் சுற்றி தகரங்களால் அடைத்திருந்தார்கள். புதிதாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இன்னமும் வேலை முடிந்துவிடவில்லை. வெளியே மரங்களுக்கிடையில் இழுத்துக்கட்டிய கயிற்றினில் சாரங்களும் சேட்டுக்களும் காய்ந்து கொண்டிருந்தன. முகாமைக் கடந்து சென்ற போது தீபன் “காயக்காரரை கொண்டு வந்து விட்டிருக்குப் போல” என்றான்.

அவர்களில் பலர் ஊன்றுகோல்களுடன் திரிந்தனர். உள்ளே சக்கர நாற்காலியில் உட்கார்ந்து ஒன்றிரண்டுபேர் பத்திரிகை படித்துக்கொண்டிருந்ததை இவன் கண்டான். பலமான சிரிப்புச் சத்தங்களும் கேட்டன. விறகுகளோடு திரும்பிய போது முகாம் வாசலில் நின்றவரின் இடது கண் வெறுமனே சதைத் துண்டமாக ரத்தச் சிவப்பில் இருந்தது. அவர் பு்ன்னகைத்தார். “தம்பியாட்கள் எந்த இடம்..”

நெற்றியின் கீழாக ஒரு செந்நிறக் குழியைப் போலிருந்த அவர் முகத்தை ஏறிட்டுப்பார்ப்பது இவனுக்கு அந்தரமாயிருந்தது. தலையைக் குனிந்தபடி சொன்னான். தனது சேட்டுப் பொக்கற்றுக்குள்ளிருந்த கருநிறக் கண்ணாடியொன்றை அணிந்து கொண்டவர், “முன்னேறிப்பாய்ச்சல் சண்டைநேரம் அந்த ஏரியாக்களிலதான் நிண்டனான். உள்ளை வாங்கோ”

இவன் “ஓம்” என்று உள்ளே போனான். இருபது இருபத்தைந்து இளைஞர்கள். ஒவ்வொருவரும் உடலில் ஏதோ ஒன்றை இழந்திருந்தார்கள். அந்த வலி முகத்தில் தெரியவில்லை. மனதின் அடி ஆழத்தில் இருக்குமோ என்னவோ, பம்பலும் பகிடியுமாக இருந்தார்கள். இரண்டு கால்களுமற்று சக்கர நாற்காலியை கைகளால் உந்தி வந்தவர், “தம்பியவை, இவன் கூப்பிட்டான் என்று உள்ளை வந்தீங்களா.. இண்டைக்கு உங்களை அறு அறு என்று அறுத்து காதிலை ரத்தம் பாக்காமல் விடமாட்டான் இவன்” என்று சிரித்தார்.

யாரோ உள்ளே, “டேய் என்ரை பென்ரரை எடுத்துப் போட்டவன் ஆராயிருந்தாலும் மரியாதையா தந்திடுங்கோ, இல்லாட்டி இண்டைக்கு இரவுக்குள்ளை என்ரை கடி சொறி அவங்களுக்குப் பரவும்” என்று கத்த, சிரிப்பொலி நிறைந்திருந்தது.

இரவு இவனுக்கு நித்திரை வரவில்லை. தீபனோ, ஐயாத்துரை மாஸ்டரின் குறட்டை ஒலியோ காரணமாயிருக்கவில்லை. நினைவு முழுவதும் அந்தப் போராளிகள் ஆக்கிரமித்து நின்றார்கள். அவர்கள் சித்தப்பா சொன்னதுபோல இனத்தின் விடுதலைக்கு மட்டுமல்லாது, இந்த சமூகத்தின் விடுதலைக்கும் தங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தங்கள் உடலை கொடுத்திருக்கிறார்கள். பலர் உயிரையே கொடுத்திருக்கிறார்கள். இப்படியிருக்க தீபன் காலைப்போடுகிறான், மாஸ்டர் குறட்டை விடுகிறார் என்றெல்லாம் சிந்திப்பது சுயநலம் என்றவாறாக யோசனைகள் ஓடின.

0 0 0

தீபன்தான் அந்தக்கிணற்றை அடையாளம் காட்டினான். முகாமைத்தாண்டி சற்று அப்பால் சென்றால் கோயிலுக்கு அருகாக கப்பியில் தண்ணீர் அள்ளக்கூடிய சிறிய கிணறு. கயிறு முடிச்சிடப்பட்ட வாளியொன்றும் இருந்தது. தண்ணீர் தெளிவாயிருந்தது. ரவியண்ணை வீட்டின் கிணற்றில் தண்ணீர் ஒரு மாதிரியான செம்மஞ்சள் நிறத்தில் எப்பொழுதும் தரைதட்டியபடி இருந்தது. இரவு ஊற்றில் கொஞ்சம் நிறைந்திருக்கிற நீரும் காலையில் சமையலுக்கும் வேறு தேவைகளுக்கும் எடுக்கிற போது தீர்ந்து விடுகிறது.

இவன் தன் உடம்பில் புதுமாதிரியான நாற்றம் கிளம்புவதாக உணர்ந்தான். வியர்வையும், புழுதியும் சமவிகிதத்தில் கலந்தமாதிரி இருந்தது. குளித்தால் நன்றாயிருக்கும். தனியே முகத்தையும் கால்களையும் மட்டும் கழுவி இன்றோடு ஆறாவது நாள். “பின்னேரம் குளிப்பம்” என்றான் தீபன். துவாயை கழுத்தில் சுற்றிக்கொண்டு கிணற்றடிக்குப் போனபோது அங்கே ஏற்கனவே குளித்துக்கொண்டிருந்தவரை எங்கேயோ கண்டதாய்த் தோன்றியது. சற்று யோசித்தபோது சிக்கினார். அன்றைக்கு பாணுக்கு வரிசையில் இவனுக்கு முன்னால் நின்றவர். கிபிரின் இரைச்சல் காதைக்கிழிக்கத் தொடங்கியபோது வரிசை குலைந்து ஓடத்தொடங்கியது. அப்போது வேலியோரமாக ஓடியவர் அங்கிருந்த பெரிய கல்லொன்றைக் காவி வந்து இவனுக்கு முன்பாக நிலத்தில் போட்டார். பிறகு இவனைப்பார்த்து மூச்சு வாங்க “தம்பி, வடிவாப்பாரும்.. இது என்ரை இடம். சரியே.. உமக்கு முன்னாலை.. நான் திரும்ப வரேக்கை பிறகு இடைக்குள்ளை புகுந்ததென்று சொல்லப்படாது..” என்று விட்டு ஓடியிருந்தார். மீள நினைத்தபோது உதடுகளோரம் சிரிப்புப் படர்ந்தது.

சோப்புப் போட்டுக் குளித்தால் நன்றாயிருக்கும். கொண்டுவரவில்லை. அருகில் எங்காவது புற்றுமண் இருக்கிறதா எனத் தேடினான். சித்தப்பா புற்றுமணலை உடலில் தேய்த்துக் குளிப்பார். சவர்க்காரங்களுக்குத் தட்டுப்பாடு நிலவியபோது செவ்வரத்தம் பூச்சாற்றை உடலில் தேய்த்துக் குளிக்கலாம் என்று எங்கோ சொன்னதைக் கேட்டு பூவை அரைத்து வடிகட்டி சாற்றினைப் பிழிந்து உடலில் தேய்த்து ஒரு முறை குளித்துப்பார்த்தான். உடல் முழுவதும் வழு வழுவென்று ஆகியது. எத்தனை முறை தண்ணீரை ஊற்றினாலும் போகவில்லை. அப்படியே அடிவளவுக்கு ஓடிப்போய் புற்றுமண்ணை உடைத்து அள்ளிப் பூசியபோதுதான் நொளுநொளுப்பு வெட்டிப்போனது. நல்லவேளையாக பனம்பழச்சாற்றைப் பரிட்சித்துப்பார்க்கவில்லை. அது உடுப்புக்களுக்குத்தான் நல்லதென்றார்கள். உதயன் பேப்பரிலும் வந்திருந்தது. ஆனால் கிணற்றடிவளவு வாத்தியார் தன் வேட்டியை பனம்பழச்சாற்றில் தேய்த்துத் தோய்த்துக் காயவிட்டபோது நல்லையாவின் மாடு வேட்டியை ஒன்றிரண்டு தடவைகள் முகர்ந்தும் நக்கியும் பார்த்துவிட்டு வேட்டியை சப்பி இழுத்துக் கொண்டு ஓடியது.

தீபன் ஒண்டுக்கிருக்கப்போனான். வரிசையில் கல்லுவைத்தவர் சோப்புப் போடத்தொடங்கிய, இவன் முதல் வாளித்தண்ணீரை எடுத்து கைகளில் ஏந்திய நேரம் திடுப்பென குரல் ஒலித்தது.

“ஆரைக் கேட்டுக் குளிக்கிறியள் இங்கை..” சற்று வயதானவர் வெண்மையான வேட்டியுடுத்து வெறும்மேலுடன் முன்னால் நின்றார். மார்பில் வெண் பஞ்சினைப்போல ரோமங்கள் குழைந்திருந்தன. வீபூதியை மூன்று கோடுகளாக நெற்றியில் பூசியிருந்தார். “என்ன நடக்குது இங்கை..”
தீபன் ஒண்டுக்கிருந்ததைப் பாதியில் நிறுத்திவிட்டு ஓடிவந்தான். சோப்புப் போட்டவர் முகத்துச் சோப்பு நுரையை வழித்தபடி பார்த்தார். இவன் தண்ணீரை உடலில் ஊற்றுவதா இல்லையா என்னுமாப்போன்றொரு நிலையில் நின்றிருந்தான்.

“இடம்பெயர்ந்து வந்திருக்கிறம். குளிச்சு நாலைஞ்சு நாளாகுது. அதுதான்.. ஏனய்யா ஏதும் பிரச்சனையோ.. ” என்று இழுத்தார் சோப்பிட்டிருந்தவர்.

“ஓ.. பிரச்சனைதான். ஆர் என்னாக்கள் எண்டு ஒண்டும் தெரியாத கண்ட கண்ட நாயெல்லாம் வந்து கோயில் கிணத்தில குளிச்சிட முடியுமோ.. எல்லாத்துக்கும் ஒரு முறையிருக்கு. இது சாமிக்கு அபிசேகத் தண்ணியெடுக்கிற கிணறு.” என்ற கோயிற்காரர் “கொண்டா இங்கை” என்று வாளியை இவனிடமிருந்து பறித்து கயிற்றைக் கப்பியிலிருந்து கழற்றிய நேரம் இவனுக்குக் கோபம் கிளம்பியது.

சோப்புப் போட்டவரைப்பார்த்து குரலை உயர்த்தி “அண்ணை வாங்கோ, எனக்கு இயக்கக்காரரைத் தெரியும். போய்ச் சொல்லுவம். வெளிக்கிடுங்கோ” என்றான். இப்போது கோயிற்காரர் வாளியைக் கீழே பொத்தென்று வைத்துவிட்டு இவனை முறைத்துப் பார்த்தார்.

“அண்ணை நீங்கள் உங்கடை சித்தப்பாட்டைச் சொல்லுங்கோ. அவர் இயக்கத்தில பெரிய ஆளெல்லே..” என்று தீபன் சொன்னபோது அவர் கழற்றிய கயிறையும் வாளிக்குள் செருகி வைத்தார். “கலிகாலமாப் போச்சு. எல்லா ஆச்சாரமும் போச்சு.. ஆரார் எங்கையெண்டு ஒரு முறையில்லாமல் போச்சு” என்று புறுபுறுத்தவாறே கோயிற்காரர் பின்வாங்கினார். இவர்களைத் திரும்பியும் பார்க்கவில்லை. ஆனால் கோபமாக திட்டியபடி போவது தெரிந்தது.

இவன் கயிற்றைக் கப்பியில் கொழுவி வாளியை கிணற்றினுள் விட்டான். சோப்புப்போட்டவர் காய்ந்து போயிருந்தார். “தம்பி கொஞ்சத் தண்ணி ஊத்தடா” என்றார்.

“என்ன ஆளண்ணை நீங்கள், நாங்கள் சின்னப்பெடியளே துணிஞ்சு கதைக்கிறம். நீங்களும் சேர்ந்து ஒரு வெருட்டு வெருட்டியிருக்கலாமெல்லே.. அதை விட்டுட்டு பாத்துக்கொண்டு நிக்கிறியள்” என்றான் இவன். இயக்கத்திடம் கட்டாயமாக முறையிட்டிருக்க வேண்டுமென்றான் தீபன். அவர் உடலோடு காய்ந்து போன சோப்பு நுரையை தண்ணீரால் கழுவிக்கொண்டே சொன்னார்.

“விடுங்கோடா விடுங்கோடா.. அவருக்கு நானொரு வெள்ளாளன் என்று தெரியாது போலயிருக்கு.”

குளித்துமுடித்து வரும்போது முகாமில் போராளிகள் கையசைத்தார்கள். இவனது கைகள் தன்னியல்பாக அசைந்தன. அவர்கள் புன்னகைத்தார்கள். அப்பொழுது இவனது உதடுகள் “பாவங்கள்” என்றொரு வார்த்தையை தன்னியல்பாக உச்சரித்தன.