குற்ற உணர்வின் பிரேத பரிசோதனை: யதார்த்தன்

நான் போரினை உணரத்தொடங்கும் போது போர் முடியத்தொடங்கி விட்டது. துப்பாக்கிகளும் பீரங்கிகளும் கிபிர் சத்தமும் உறுமி கேட்ட செவிப்பறைகளை கொண்ட இறுதித்தலை முறையாக நாங்கள் நிற்கின்றோம். தோற்ற தரப்புகளும் வென்ற தரப்பும் எஞ்சிய தர்ம அதர்மங்களை பங்கு போட்டு இன்னும் முடியவில்லை. ஒட்டு மொத்த மானுட இருப்பையும் போர்கள் மாற்றியமைத்தன . ஈழம் அதற்கு விதி விலக்கல்ல.

மக்கள் தோற்ற தரப்பிற்கும் வென்ற தரப்புக்கும் இடையே முப்பது வருடங்களாக மாற்றப்படாத அதே முகங்களுடன் இன்னும் பொலிவிழந்து கிடக்கின்றார்கள். கொள்ளைகள் கற்பிதங்கள் எல்லாம் மேற்புல் மேயும் நம்பிக்கையீனம் கொண்ட மிருகங்களாகவே நிற்கின்றன. போராடியவர்களில் ஒரு தரப்பு உடல் உளம் இரண்டும் விதம் விதமாய் சிதைக்கப்பட்டு போர் மிருகத்தின் பல்லிடுக்குகளில் இருந்து நழுவி வீழ்ந்து கிடக்கின்றார்கள். யாரும் கடந்த காலத்தை ஞாபப்படுத்த தயாராக இல்லை , மறக்கவும் தான்.

தோற்று போனவர்களின் பிணங்களை வாசனை திரவியமிட்டு அரசியல் நடக்கின்றது . பிணங்களின் உள்ளே தேசத்தின் குற்றங்களும் காழ்புகளும் , தர்மமும் , அதர்மமும் , அறமும் , கொண்டாட்டமும் சீழ் பூசிக்கிடக்கின்றன. விட்ட பிழைகளையும் தீர்வுகளையும் உயிருள்ள வெற்று மூளைகளுள் தேடுகின்றது மனிதம் . இன்னும் அவை கடந்த காலத்தின் இடைவெளியில் நசுங்கி கிடப்பதை ஒரு சிலரே உணர்கின்றனர்.

போருக்கு பிந்திய இலக்கியங்கள் இன்று மெல்ல மெல்ல நம் பிணங்களை பிரேத பரிசோதனை செய்ய ஆரம்பித்து விட்டன. ஆறிப்போன வடுக்களுக்கு பின்னால் இன்னும் கட்டிபோய் கிடக்கும் சீழ்குப்பிகளை மெல்லம்மெல்ல உடைத்து பேனாக்கள் எழுத தொடங்குகின்றன. இவ்விடத்தில் தான் சயந்தனின் ஆறாவடுவும் நிற்கின்றது.

விடுதலை போராட்டத்தின் நேரடி சாட்சிகளில் பலதும் ஊமையாகி விட்டன. ஏனையவை தமக்கென தரப்புகளை தெரிவுசெய்து கொண்டிருக்கின்றன. போர்கால மற்றும் போருக்கு பிந்திய இலக்கியங்களில் பெரும்பாலானவை தரப்புகளை உன்னதமாக்கும் நுண்ணரசியலையே பேசுகின்றன, தனிமனித அறவுணர்வும் நேர்மையும் சோரம் போன இலக்கியங்களை சகட்டு மேனிக்கு கொண்டாடி தள்ளுகின்றது நம் சமூகம். ஆனால் அடிப்படை மனிதத்துவம் வாய்க்கப்பட்ட படைப்பாளிகள் மேற் சொன்ன மாசுக்களை நீக்கி விட்டு மேலெழுகின்றனர். சயந்தனை நான் இவ்வகையாறாக்குள் நிறுத்துகின்றேன்

ஆறாவடு பற்றி கதைக்க முதல் அண்மையில் வாசித்த இரண்டு போருக்கு பின்னரான இலக்கியங்களை நான் இங்கு குறிப்பிட வேண்டும் ஒன்று தமிழ்கவி யின் “ஊழிக்காலம் ” இன்னொன்று சாத்திரியின் ஆயுத எழுத்து . என்னை பொறுத்த வரை அடிப்படை மனித அறம் , நல்ல இலக்கிய பரிச்சயமற்ற மோசமான நபர்களால் எழுதப்பட்டவை இவை இரண்டும் . இரண்டும் செய்வது மேலே சொன்ன பிண அரசியலை தான். தமிழ்கவியின் குழப்பம் மிக்க தரப்பு தொடர்பான நிலையும் , சாத்திரியின் வீரசாகச மனநிலையும் மட்டும் எஞ்சும் மோசமான படைப்புக்கள் இவ்விரண்டும் .

இதை நான் இங்கே சுட்டிகாட்ட காரணம் ஊழிக்காலமும் , ஆயுத எழுத்தும் சயந்தனின் ஆறாவடுவிற்கு பிற்பட்டவை. அண்மையில் சயந்தனை சந்தித்த போது “நாவல் எழுதி மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது அதன் கருத்தியல் சார் நிலைப்பாடுகளில் நான் இன்னும் மாற்றமடைந்து விட்டேன் ” என்றார். நாவலை வாசித்து முடித்ததும் எனக்கும் அவர் சொன்னது சரி என்றே பட்டது.

நான் ஆறாவடு நாவலை இரண்டு நிலைப்பாடுகளில் வைத்து பார்க்க முற்படுகின்றேன்.

நாவலின் எடுத்துரைப்பு முறை
நாவலின் நுண்ணரசியல்

01 நாவலின் எடுத்துரைப்பு முறை சமீபத்திய ஈழத்து நாவல் வளர்ச்சியில் முன் நிற்கின்றது என்று சொல்லலாம் .ஆனால் கதை சொல்லியின் அமைப்பு சார் நிலைபாட்டில் இன்னு நுணுக்கம் தேவைப்படுகின்றது. பெயர்கள் மூலம் முடிச்சுக்களை அவிழ்த்து செல்ல முற்படுகின்றார் சயந்தன் , ஷோபாசக்தியின் கதை சொல்லும் பாணியை இடைக்கிட தொட முற்படுகின்றார். லீனியர் வகை எழுத்திற்கும் நொன் லீனியர் வகை எழுத்திற்கும் இடையில் நகர்கின்றது நாவல் . யாழ்ப்பாண மக்களின் பிரத்தியே காலப்பின்னணியில் அமைந்த மொழிநடையை சயந்தன் நன்கு உள்வாங்குகின்றார். போராளிகளுக்கும் –மக்களுக்கும்-காலத்துக்கும் இடைவெளி கொடுக்கும் இடங்களில் சயந்தனின் சொல்லாட்சிகள் நின்று வேலைசெய்கின்றன. நான் படித்த அளவில் ஷோபாவிற்கு பிறகு சயந்தனிற்கு யாழ்பாண மொழி இயல்பாய் வருகின்றது.

கதை சொல்லும் போது இடையறும் இடங்களில் அங்காங்கே சில இடங்களில் நொன்லீனியர் தன்மை குழப்பங்களை ஏற்படுத்து கின்றது ,சாதாரண வாசகன் அவ்விடங்களில் புத்தகத்தை பிறகு படிக்கலாம் என்று மூடிவைத்து விட்டு போகக்கூடும்.

02 அடுத்து நாவலின் பேசு பொருளில் நுண்ணரசியலை அவதானிக்க வேண்டும் தமிழ்கவியின் சந்தர்ப்பவாத புலி எதிர்ப்பு குழப்பமோ , சாத்திரியின் பழைய புலி சாகசமோ இங்கே பேசப்படாதது இந்நாவல் எனக்கு தந்த மிகப்பெரும் மனத்திருப்தி.

சயந்தன் தரப்பொன்றில் நிற்பதை விரும்பவில்லை கடந்த காலத்தை மனிதத்துவத்தின் மீது நின்று பார்கின்றார் . தவறுதலாக குற்றம் செய்து விட்ட ஒரு குழந்தையின் வீறுடுகை நாவலெங்கும் இடைக்கிட எழுகின்றது . சம்பவங்களை சொல்லி முடிக்கும் போதெல்லாம் சொல்லிய சம்பவங்களில் மேலெழும் அதர்மங்களுக்கும் , குற்றங்களுக்கும் மேலே தன் குற்ற உணர்வை ஊற்றி அவற்றை மூடிவிடப்பார்க்கிறார்.சயந்தனின் கதாநாயகன் மீது காலம் திணித்ததையும் சரி அவனே எடுத்து கொண்டவையையும் சரி ஒரே தளத்தில் நிறுத்துவது நெருடுகின்றது.

முன்னுரையில் “பதுங்கு குழியற்றவாழ்வினை பாரதம் தந்துவிடுமென அவர்கள் எதிர் பார்த்திருந்தார்கள் முடிவில் நம்பிக்கைகள் சிதைந்தழிந்தன , சனங்களின் முகங்களில் போர் அமிலமாய் தெறித்தது” ஆனால் இங்கே மக்களின் கருத்து நிலை குழப்பமான ஒன்றாகவே நிலைகின்றது. தலைமைகளும் காலமும் சிதைத்த போராளி ஒருவன் ஆற்றாமையின் முடிவில் குற்ற உணர்வின் மூலமாக ஞானமடைய துடிக்கிறான். அவனுடைய முடிவே அவனுடைய ஞானம் என்கின்றார் ஆசிரியர்.

கடைசி அத்தியாயம் அமைப்பு ரீதில் நன்றாக இருந்தது. அதேபோல் காலபெருவெளியில் கரைந்து போகும் ஒட்டுமொத்தத்தின் வடிவமாய் அதனை செய்திருக்கிறார் சயந்தன் . போர்காலம் பற்ரி எழுதப்படும் அத்தனை நாவலுக்கும் அந்த அத்தியாயத்தின் கருத்து நிலையை பொருத்தி விடலாம் .
சயந்தனின் ஆறாவடு என்பது புறக்காயம் மட்டும் ஆறிய அடிக்கடி தோண்டி தோண்டி குருதி யும் ஒழுகும் மனித குற்ற உணர்வினதும் தீர்வற்ற முடிவிலியாகிவிட்ட வாழ்வினதும் அடையாளமாகும்.
-யதார்த்தன் –
தினக்குரல் 23.08.2015