அருமையான வாசிப்பனுபவம் : ´ஆறாவடு´

நேற்று வாசித்து முடித்த அருமையானதொரு புத்தகம் இது. சுவிஸ் நாட்டில் வசித்து வரும் புலம் பெயர் தமிழரான சயந்தன் எழுதி இருக்கிறார்.

நீர்க்கொழும்பில் இருந்து இத்தாலி நாட்டிற்குப் படகுப் பயணம் மேற்கொள்ளும் ஒரு போராளியின் முந்நிகழ்வு (பிளாஷ் பேக்) நினைவாக கதை விரிகிறது. அவர் இயக்கத்தில் சேர்வது ஒரு சுவாரசியமான கதை. தான் வாங்கிய சோலாபுரி செருப்பை ஒருவன் திருடிவிடுகிறான். அவன் இலங்கையில் மையமிட்டுள்ள இந்திய ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவன். அவனுடன் ஏற்பட்ட தகராறு இவரை பெரும் சோதனைக்கு ஆளாக்கிவிடுகிறது. அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அவரை இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற உந்துகிறது. மேம்போக்காகப் பார்த்தால் ஒரு செருப்புக்கான சண்டை காரணம் போலத் தோன்றும், ஆனால் நாம் எதிர்பாராத சில சிறிய நிகழ்வுகள் கூட நம் வாழ்கைப் பாதையின் போக்கை மாற்றிவிடும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகப் பட்டது.

இந்திய அமைதிப் படைகளின் அட்டூழியம் குறித்து அரசியல் மேடைகளில் கேட்டிருக்கிறேன், புலம் பெயர் தமிழ் நண்பர்களிடம் அவர்களது அனுபவங்கள் வாயிலாக சில விடையங்களை அறிந்து கொண்டிருக்கிறேன், சில புத்தகங்களில் தரவுகளாக வாசித்திருக்கிறேன். ஆனால் இப்புத்தகத்தில் வரும் நிகழ்வுகளை உள்வாங்கி கற்பனைகளில் காட்சிப் படுத்திப் பார்க்கும் பொழுது, அட்டூழியம் என்கிற சொல்லாடலின் மெய்யாழம் புரிந்தது.

தொடர் சம்பவங்களின் வரலாற்றுத் தரவுகளை வாசித்துத் தெரிந்து கொள்வது என்பது வேறு.அது வெறும் தகவல்தான். ஆனால் அன்றாட வாழ்வில் ஏற்படும் சம்பவங்களின் ஆழமான விவரணை உணர்வுகளை உலுக்கிச் செல்லும் வல்லமை உடையது. கல்லூரி பயிலும் வரை போர் என்றால், சின்ன வயதில் டிடி தொலைகாட்சியில் பார்த்த மகாபாரதக் காட்சி கண்முன் விரியும். இல்லையேல் பீரங்கிகள், துப்பாகிகள் இருமருங்கிலும் முழங்கும் காட்சிகள் தெரியும். ஆனால் போர் மூலமாக சாதாரண மக்களின் சமூக வாழ்வு எவ்வாறு பாதிக்கப் படும் என்பதை சிண்ட்லர் லிஸ்ட், பியானிஸ்ட் போன்ற படங்களைப் பார்த்த பொழுதுதான் முதன் முதலாகப் புரிந்து கொள்ள முடிந்தது. பாய்ந்து வரும் குண்டுகள் கூட ஒரு நொடியில் உயிரை மாய்த்து விடும். ஆனால் போர் நடக்கும்பொழுதும், போர் முடிந்த பிறகும் அதனால் பாதிப்புக்குள்ளான சமூகம் தான் உண்மையான தாக்கத்தை உள்வாங்கி அதிக காலம் அல்லல்படுவது.

பள்ளியில் வரலாற்றுப் புத்தகத்தில் உலகப் போர் குறித்து பாடம் பாடமாகப் படித்த பொழுது ஏற்படாத , புரிந்துகொள்ள இயலாத உணர்வுகளை இப்படங்கள் பார்த்த பொழுது உணர்ந்துகொள்ள முடிந்தது. அதைப் போலத்தான் இந்தப் புத்தகத்தில் போர், இந்திய ராணுவ ஆக்கிரமிப்பு முதலியன மூலம் சாதாரண மக்களின் சமூகப் பொதுவாழ்வு எவ்வாறு பாதிக்கப் பட்டிருந்தது என்பதை கூர்ந்து கவனித்து உணர முடிந்தது.

இதில் எனக்கு வியப்பளிக்கிற விடையம் என்னவென்றால், இவ்வளவு சீரியசான கவலையான சம்பவங்களை விவரிக்கும் பொழுதும் ஆங்காங்கே நகைச்சுவை இழையோடுவது. ஈழத் தமிழர்களுக்கு தமிழகத்தில் உள்ளவர்களைக் காட்டிலும் நகைச்சுவை உணர்வு குறைவு என்கிற எனது நம்பிக்கையை புரட்டிப் போட்டுவிட்டது. ஆங்கிலத்தில் நான் மிகவும் ரசித்து, நேசித்து, பூஜித்துப் போற்றி மகிழ்ந்த எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல். அவரது நகைச்சுவை சாயல் இதில் தென்பட்டது வியப்பளித்தது.

தியாகம், காதல், தயக்கம், வீரம், அரசியல் நிகழ்வுகள் என அனைத்து அம்சங்களையும் கதை தொட்டுச் செல்கிறது. புலிகள் பாசறையில் பயிற்சிக்குச் செல்கிற கதை நாயகனுக்கு அரசியல் என்பதன் விளக்கம் ´´ யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம் ´´எனப் பயிற்றுவிக்கப் படுகிறது. யுத்தத்தைக் காட்டிலும் அரசியல் எவ்வளவு கடினமானது என்பதை சமாதானக் காலத்தில், போர்நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துக்களில் உள்ள மிகுந்த கட்டுப்பாடுகள் கைகளைக் கட்டிப் போட்டுவிட்ட காரணத்தால், ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் புலி வீரனின் புலம்பலில் வெளிப்படுவதைக் காண முடிகிறது.

புலிகள் இயக்கத்தின் கடுமையான தண்டனை வழங்கும் முறை, விசாரணை முறையும் ஆங்காங்கே விவரிக்கப் பட்டுள்ளன. புலம்பெயர் சமூகத்தில் வாழ்கிறவன் என்கிற முறையில், பலதரப் பட்ட மக்களைச் சந்திக்கின்ற, நட்பு பாராட்டுகின்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் புலி எதிர்பாளர்களும் அடக்கம். அரசியல் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அனைவரும் நல்ல மனிதர்கள்தான். நமது நம்பிக்கைக்கு ஒவ்வாத கருத்து உடையவரை காரணமின்றி எதிரியாகப் பார்க்கும் மனப்பக்குவத்தை அகற்றிவிட்டால், ஒற்றுமைக் குறைவினால் பாழ்பட்டுப் போன இனம் தமிழினம் என்கிற நிலை மாறிவிடும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.

எதிரணியைச் சார்ந்த நண்பர் ஒருவர் அவரது பழைய அனுபவத்தை விளக்கினார். அவர் வேறொரு இயக்கத்தின் பெரிய மாகான தளபதியாக இருந்தவராம். சகோதரச் சண்டை உச்சத்தில் இருந்தபொழுது, புலிகள் இயக்கம் அவருக்கு தண்டனை அறிவித்து தேடிக் கொண்டிருந்ததாம். விஷயமறிந்த அவர் தப்பித்து வந்த கதையை நகைச்சுவை ததும்ப விவரிப்பார். தென்னை மரத்தில் கயிற்றைக் கட்டிக் கொண்டு தூங்கும் கலையை கற்றுக் கொண்டாராம். ஒரு வார காலம் இப்படியே தென்னை மரத்தில் தொங்கி, தூங்கி தப்பித்து வந்த கதையை சொன்னார். அந்தக் கதையை இப்புத்தகத்தில் வரும் சில சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் திகில் கலந்த நகைச்சுவை ஏற்பட்டது.

இந்தக் கதையின் ஊடாக புலிகள் மீதான சிற்சில விமர்சனங்களை மிகவும் மென்மையாக, தண்மையாக, பட்டும் படாமல் கதையின் போக்கில் வைத்திருக்கிறார்.

எல்லாவற்றையும் விட, அகதிகளாக தப்பித்துச் செல்பவர்கள் மேற்கொள்ளும் கடல் பயணம் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர முடிந்தது. ஏஜென்ட்களிடம் பணம் கட்டி, படகில் ஏறும் வரை பெரும்பாடுதான். ஏறிய பிறகு பயணத்தின் இறுதி வரை தாக்குப் பிடிப்பதென்பது அதைவிட பெரும் சவால். கடல் சீற்றம், நோய், கடல் கொள்ளையர்கள், உணவுப் பற்றாக்குறை என பல சவால்களைக் கடந்துதான் அவர்களால் வேறொரு இடத்திற்கு செல்ல முடிகிறது. இலங்கையில் இருந்து கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி என நெடுந்தூரம் பயணம் செய்த சில செய்திகளை ஊடங்களில் பார்த்துவிட்டு எளிதில் அடுத்த பாட்டு நிகழ்ச்சிக்கு கடந்து சென்றிருப்போம். ஆனால் அங்கே சொல்லனா அல்லல் பட்டுக் கொண்டிருப்பது நம் சக தமிழன் என்கிற குற்ற உணர்ச்சி பெரும்பாலான நமக்கு ஒருபோதும் ஏற்பட்டிருக்காது. எனது நண்பர் ஒருவர் அவரது அனுபவத்தைச் சொன்னார், 100 பேர் பயணப்பட்டால், இறுதியில் 50 தேறுவார்கள் என்றார்.

எனது மாமனார் பகிர்ந்துகொண்ட அவரது அனுபவங்களும் நினைவிற்கு வந்தது. மகிழ்சிகரமாக வாழ்ந்துகொண்டிருந்த அவரது வாழ்வை போர் எப்படி புரட்டிப் போட்டது என்பதை பருந்துப் பார்வையில் விவரித்தார். ஒரு கட்டத்தில் தாக்குப் பிடிக்க இயலாது என்கிற நிலை. பதுங்கு குழிகளை வெட்டி வைத்துக் கொண்டு, பிள்ளைகளை பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற அச்சச்சூழல். ஒரு சந்தர்பத்தில், குடும்பத்தினரை பதுங்கு குழிகளில் இறக்கிவிட்டு, இவர் இறங்குவதற்குள், எங்கோ தூரத்தில் இருந்து பறந்து வந்த செல் கணை இவரை நோக்கி வர, நல்ல வேளையாக கொல்லைப்புறத்தில் இருந்த பனைமரம் ஒன்று அதனைத் தடுத்து விட்டதாம். இப்படி ஒன்றல்ல ரெண்டல்ல எத்தனையோ சம்பவங்கள்.

ஒருவழியாக உயிர்பிழைத்தால் போதும் என்கிற முடிவிற்கு வந்து, படகில் ஏறி தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது எனது துணைவியார் கைக்குழந்தையாக இருந்துள்ளார். அவரது மூத்த சகோதரர் 3 வயது பாலகன். படகில் ஏறும் அடிபிடியில் மகனைக் காணவில்லை. பிறகு இவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது தண்ணீரில் குதித்து மூழ்கித் தேடி இருக்கிறார். சில நிமிடங்கள் கழித்து மகன் கையில் அகப்பட்டுள்ளார். ஒருவழியாக அனைவரும் உயிர் பிழைத்து விட்டனர். இப்படியாக ஒவ்வொரு புலம்பெயர் தமிழனுக்கு ஒவ்வொரு கதை நிச்சயம் இருக்கும்.

ஆனால் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப் படும் படகுப் பயணத்தில் ஒருவர் கூட உயிர்பிழைக்கவில்லை. புத்தகத்தில் உள்ள சிறு குறையாக நான் கருதுவது, மிகுந்த சுவாரசியத்துடன் சென்றுகொண்டிருந்த கதைக்களம், இறுதி அத்தியாயங்களில் சற்று தொய்வு பெற்றிருந்ததைப் போன்றதொரு உணர்வு. மற்றபடி நல்ல புத்தகம்.

புத்தக ஆசிரியர் சுவிஸ் சயந்தன் பேஸ்புக்கில் உள்ளாரா தெரியவில்லை. யாரேனும் அவரது தொடர்பில் இருந்தால், எனது இந்த பதிவை அவருடன் பகிரவும். மேலும் பல நல்ல படைப்புகள் வெளிவர வாழ்த்துக்கள்.