நஞ்சுண்ட காடு

ஈழப்போரிலக்கியத்தில்  புலிப்போராளிகளின் படைப்புக்கள்

ஈழப்போரிலக்கியங்களை ஈழத்தின் சகல இயக்கங்கள் சார்ந்தும், மூன்று பெரும்பாகத்தினுள் குறிப்பிடமுடியும்.

1. போராளிகள் , களமாடும் சமகாலத்திலேயே எழுதிய படைப்புக்கள்

2. போராட்டத்தின் நேரடிப்பங்காளர்களாக அல்லாத அதனுடைய ஆதரவாளர்களால் எழுதப்பட்ட படைப்புக்கள்.

3. போராட்ட அமைப்புக்களிலிருந்து விலகிய பின்னர் அதிருப்தியடைந்த அல்லது அதிருப்தியடைந்த பின்னர் விலகியவர்களால் எழுதப்பட்ட படைப்புக்கள்,

இங்கே, நஞ்சுண்டகாடு நாவலுக்கு நெருக்கமான பரப்பாக, களத்திலாடும் போதே போராளிகளால் எழுதப்பட்ட நாவல்களை மேலும் குறுக்கி புலிப்போராளிகளால் எழுதப்பட்ட ஒருசில நாவல்கள் பற்றிய குறிப்புக்களோடு நஞ்சுண்டகாடு நாவலுக்குள் நுழைகின்றேன்.

புலிகள் இயக்கப்போராளிகளால் சிறுகதைகள், கவிதைகள் பலநூற்றுக்கணக்கில் எழுதப்பட்டிருந்தபோதும், நாவல்கள் சொற்ப அளவிலேயே எழுதப்பட்டுள்ளன. அவற்றை எழுதுவதற்கான, நேரமும் பொழுதும் யுத்தத்தையே தம்முடைய பிரதான இலக்காகக் கொண்டவர்களுக்கு வாய்த்திருக்காது என்பதையும் இங்கே மனம்கொள்ள வேண்டும். அவ்வாறாக எழுதப்பட்ட சில நாவல்கள்..

1. பாலகணேசன் எழுதிய விடியலுக்கு முந்தைய மரணங்கள், 1986 இல் இது புலிகளால் வெளியிடப்பட்டது, ஈழத்தின் முதலாவது யுத்த நாவலும் கூட. கொக்கிளாய் ராணுவ முகாமினைத் தாக்கியழித்த நடவடிக்கையினை இலக்கிய அழகியலோடு இந்நாவல் பதிவுசெய்திருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.

2. மலரவனின் போருலா, 1993ல் வெளியிடப்பட்டது. இதுவும் மாங்குள ராணுவமுகாம் தகர்ப்பையும் அதில் பங்குபற்றிய போராளிகளின் அனுபவங்களையும் மனவிசாரணைகளையும் பதிவு செய்த ஒரு படைப்பு.

3. போராளியாகவிருந்த தமிழ்க்கவி எழுதிய இருள் இனி விலகும் 2004இல் வெளியானது. யாழ்ப்பாணம் இலங்கைப் படையினரால் கைப்பற்றபட்ட பின்னர் அங்கு அனுப்பப்படுகின்ற பிஸ்ரல் குழு என்று அறியப்படுகின்ற பெண் போராளிகளுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, அவர்கள் யாழ்ப்பாணத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், சிப்பாய்களை நேராகச் சந்திக்கும் தருணங்கள், சண்டைகள், அடைந்த சாவுகளென அந்தக் குரூப் மறுபடியும் வன்னிக்க மீள்வதுவரை இது பதிவு செய்துள்ளது.

4. இதைவிட மருத்துவப்போராளியாகவிருந்த தூயவன் 3 நாவல்களை எழுதியுள்ளதாக அறியமுடிகிற போதும், வேறு தகவல்களைப் பெறமுடியவில்லை.

5. இறுதியாக நஞ்சுண்டகாடு, இந்நாவல் வெளியாகின்ற இக்காலத்தில் இதனுடைய ஆசிரியர் ஒரு போராளியாக இல்லாதபோதும், எழுதப்பட்ட 2004 காலத்தில் ஒரு செயற்படுபோராளியாகவிருந்தார்.

 

உண்மைகளும் அனுபவங்களும் பிரச்சாரங்களும்

இங்கேயொரு கேள்வி எழுகிறது. போராட்டத்தை நடத்துகின்ற, அதனுடைய வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட ஓா அமைப்பிலிருந்து பிரச்சாரமில்லாத ஒரு படைப்புச் சாத்தியமா என்பதுதான் அது. உண்மைக்குச் சாட்சியாகவிருப்பதே இலக்கியமென்றால், யுத்தகளத்தில் உண்மை எந்தளவிற்கு அனுமதிக்கப்படும்.? அல்லது இன்னொருவிதத்தில், ஒரு பிரச்சாரமென்பது பொய்யையும் கொண்டிருக்குமென்று கருதினால், அப்படிப் பொய்யைக் கொண்டிருக்காத, அதே நேரத்தில், சில உண்மைகளையும் கொண்டிராத பிரதிகளையும் பிரச்சாரமென்று கருதவேண்டுமா என்பதெல்லாம் கேள்விகள்..இந்தப்பின்னணியிலேதான், மேற்சொன்ன நாவல்களையும் நஞ்சுண்ட காட்டையும் பார்க்க வேண்டும்.

முதலாவதாகக்குறிப்பிட்ட விடியலுக்கு முந்தைய மரணங்கள் நாவலை நான் படித்ததில்லை, ஆனால் அதுபற்றி காலம் இறுதி இதழில் மு.புஸ்பராஜன் இவ்வாறு குறிப்பிடுகிறார். – இயக்கத்தின் வெளியீடு என்பதில் பிரச்சாரம் வெறுப்பூட்டும் அளவிற்குத் தலைதுாக்கியிருக்கும் என்ற கற்பிதத்தை இக்குறுநாவல் மிறீயிருக்கிறது என்கிறார் அவர்.

என்னுடைய வாசிப்பில் நஞ்சுண்டகாடும் அவ்வாறானதுதான். இன்னமும் சொன்னால், இந்த நாவல், தாம் சார்ந்த போராட்டத்திற்கு ஒரு நியாயமுண்டு, தம்முடைய நிலைப்பாட்டிற்கு ஒரு நியாயமுண்டு என்பதைக் கூட நேரடியாகச் சொல்ல முயலவில்லை. ஆகக்குறைந்தது ஒரு மென்தீவிரத்தோடு கூடத் தொடவில்லை. மாறாக நாவலின் மாந்தர்களிடையே ஊடுபாவியிருக்கின்ற மன உணர்வுகளிடையேயும், போராட்ட வாழ்வுச் சித்தரிப்பின் பின்னாலும், தமிழர்களுடைய அரசியல் நியாயப்பாடு மௌனமாகப் பயணிக்கின்றது என்பதைத் தேர்ந்த வாசகனால் கண்டுகொள்ள முடியும்.

குறிப்பாக தமிழக நண்பர்களுக்கு நான் ஒன்று சொல்வதுண்டு.

ஏதேனும் ஒரு தருணத்தில் புலிகள் இயக்கம் தொடர்பாக அவர்கள் கற்பனை செய்கின்றபோது, அதன் தலைவர் பிரபாகரனைத்தான் முதலில் கருதிக்கொள்கிறார்கள். ஆதரவளிப்பதாக இருந்தாலும் சரி, எதிர்ப்பதாகவிருந்தாலும் சரி தலைமை மீதான மதிப்பீடுகளின் வழியாகத்தான் புலிகள் இயக்கத்திற்குள் இறங்குகிறார்கள். ஆனால் தொன்னூறுகளின் தொடக்கத்தில் நினைவுதெரியத் தொடங்கிய என்னுடைய தலைமுறைக்காரர்களுக்கு அப்படியல்ல.. ஒன்றாகப் படித்தவர்கள், விளையாடியவர்கள், நீச்சலடித்தவர்கள், வகுப்பறைகளில் அழி றப்பருக்காகச் சண்டைபிடித்தவர்கள், இவ்வாறான மிகச் சாதாரண மனிதர்களுக்கு ஊடாகத்தான் புலிகள் இயக்கம் அறிமுகமானது. அதாவது கீழிலிருந்து மேலாக..

முதலில் குறிப்பட்டவர்களைப் பொறுத்தவரை தலைமை மீதான பிம்பம் உடைகிற தருணமொன்று ஏற்படுகின்ற அதே கணத்திலேயே புலிகள் மீதான பிம்பமும் உடைந்துவிடும். எங்களுக்கு அப்படியல்ல.. இந்தச் சாதாரண மனிதர்களுடைய நினைவுகளும், அவர்கள் இல்லையென்ற நிதர்சனமும், அதுவேற்படுத்துகின்ற குற்ற உணர்ச்சியும், சட்டென்று வெட்டமுடியாத ஒரு ஒட்டுறவாக அந்த இயக்கம் சார்ந்து நீண்டு கொண்டேயிருக்கும்.

நான் குறிப்பிட்ட சாதாரண மனிதர்களின் கதைதான் நஞ்சுண்டகாடு.

இந்நாவலில், விசித்திரன், சுகுமார்,கோபி, வேதநாயகம், நாகேந்திரன் முதலான மனிதர்கள், மிகச்சாதாரண குடும்பங்களிலிருந்து இணைந்தவர்கள் ஒரு பயிற்சி முகாமில் ஒன்றாகிறார்கள். அவர்கள் எவ்விடத்திலும்கூட தாங்கள் இணைந்துகொண்டதற்குத் தத்துவார்த்தமானதும் புரட்சிகரமானதுமான காரணங்களைச் சொல்லவில்லை.

காதலிலும் தோற்று வெளிநாடு செல்லவும் இயலாமல் போதைக்கு அடிமையான இந்நாவலின் பாத்திரமொன்று “ என்ர கெட்ட பழக்கங்களை விட எனக்கு விருப்பம் இருந்தாலும் விட ஏலாமல் தவிச்சன். இயக்கத்துக்குப் போனா அதுகளை எப்படியும் விட்டிடுவன். என்னில் எனக்கிருக்கிற வெறுப்பாவது இல்லாமல் போகும். வெளிக்கிட்டு வந்திட்டன்.” என்று சொல்கிறான்.
இன்னுமொருவன், எல்லா வீரமரண ‘உடல்களும்’யும் கோப்பாயில் அடக்கம் செய்ய எங்கட ரோட்டாலதான் போகுது. பெடிபொட்டையள், கிழவிகூட கொண்டுபோய்ப் பூப்போடுகிறார்கள். ஒரு நாளைக்கு அஞ்சுதடவையும் போகும். ஒவ்வொருக்காலும் நானும் பூக்கொண்டுபோய் போட்டுட்டுவந்து சாப்பிடச் சொல்லுறியே? அப்படிச் சாப்பிடேலாமல் தான் வந்தனான்” என்கின்றான்.

பல்கலைக்கழகத்திலிருந்து போனவனுடைய காரணம் வேறு. “கஷ்டப்பட்டுப் படிச்சன். எஞ்சினியரிங்க் கிடைக்கல. physical சயன்ஸ்தான் கிடைச்சுது. ரெண்டாம் வருசத்தோட கம்பசில படிச்சு வாழ்க்கையில் புதுசா ஒண்டும் பண்ணேலாதெண்டு தெரிஞ்சிட்டுது. அதைவிட இயக்கம் இன்ரலீயண்டாயும் மதிநுட்பமாயும் அக்ரிவாயும் செயல்முனைப்பாயும் இருக்கிறதாப் பட்டிது. இதுதான் சரியான இடமெண்டு வெளிக்கிட்டு வந்திட்டன்”
இந்த நாவலில் கதைசொல்லி விவரிக்கின்ற சுகுமார் என்ற பாத்திரம், மிகுந்த சிந்தனைத் தெளிவு மிக்கது. வறுமையான குடும்பத்திலிருந்து பாசமான அக்காவையும், முகிழ்த்த சிறு காதலையும் துறந்து அவன் இயக்கத்தில் இணைந்து கொள்கின்றான்.

kaviazhagan-wrapper1அவனுடைய உரையாடல்கள், மனித மனங்களையும், வறுமையையும், ஏழை பணக்காரனென்ற வர்க்க வேறுபாடுகளையும், குடும்ப உறவுகளையும் விசாரணை செய்கின்றன. உதாரணமாக, வேதக்குடும்பத்தில பிறந்தா வேதச் சமயம், சைவக்குடும்பத்தில பிறந்தா சைவச் சமயம், எண்டமாதிரி கஸ்ரப்பட்டவன் குடும்பத்தில பிறந்தா கஸ்ரப்பட்டவன்தானே.. என்பதுவும், சிவனும், தேவியும் உலகத்தைச் சுத்தி வந்தாத்தான் மாம்பழமெண்டு சொன்னவை, அவையளுக்குத் தெரியும் ஒருத்தராலயும் சுத்தேலாதெண்டு, பின்னை தாங்கள் தின்னத்தானே அப்படிச் சொன்னவை, என்பதுவும், மனிதன் ஒரு மதிப்புத்தின்னி, அவன் உருவாக்கிய கடவுள்கதைகளும் அப்படித்தானிருக்கும் என்று சொல்லுவதும், சொந்தபந்தமெல்லாம் வாழ்க்கையில் ஒரு போலி, ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான போலி என்பதுவுமான கூர்மையான உரையாடல்களை அவன் நிகழ்த்துகிறான்.

இவ்வாறு மனித விசித்திரங்கள் ஒன்றிணைந்து போராளிகளாக மாறும் காலகட்டத்தில் ஏற்படுகின்ற உளச்சிக்கல்களை வெளிச்சொல்வது நாவலின் இன்னொரு பரிணாமம்..

அவர்கள் தமக்குள் மோதுப்படுகிறார்கள், பொறுப்பாளரிடம் காட்டிக்கொடுக்கிறார்கள், காட்டிக்கொடுத்தவனையும் காட்டிக்கொடுக்கிறார்கள். (இப்படிக்காட்டிக்கொடுக்கிற சந்தர்ப்ப உரையாடல்கள் எனக்குச் சுவாரஷியமாயிருந்தன. இவர் மாஸ்ரர்… அங்க மாஸ்ரர்…ஓம் மாஸ்ரர்..செய்தவர் மாஸ்ரர் ..” என்றோ அல்லது “ஓமண்ணை..அவரண்ணை..அதுவண்ணை..அப்பவும் சொன்னான் அண்ணை” இந்த உரையாடல்கள் எனக்க ஓம் ரீச்சர், இவர் ரிச்சர், என்றமாதிரித் தோன்றுகிறது) பட்டப்பெயர்கள் சூட்டுகிறார்கள், ஒருவரையொருவர் ஒதுக்கி வைக்கிறார்கள், பிறகு ஒன்றாகச் சேர்கிறார்கள், வருத்தக்காரனில் பரிவு கொள்கிறார்கள், அவனைத் தூக்கிக்கொண்டு கழிவறைக்குச் செல்கிறார்கள்.. இவற்றைப் படிக்கின்றபோது ஓர் இராணுவ இயக்கமென்ற தரிசனம் மனதில் தோன்றவில்லை. மாறாக நெருக்கமான நண்பர் குழாமொன்றினையொத்த உணர்வு ஏற்படுகிறது. அதிலொரு உண்மையும் இருக்கிறது.

 

போராளியாக்குகின்ற நடைமுறை விவரிப்புக்கள்

உடலை வருத்துகின்ற பயிற்சியும், பயிற்சியிலிருந்து தப்புவதற்காக பொய்யாக மயங்கும் போராளிக்கு முதுகில் விளாசும் பொறுப்பாளரும், பயிற்சிக்குக் கள்ளமொளிக்க, நல்லெண்ணையைக் குடித்து வயிற்றாலடிக்கச் செய்வதும், புண்ணில் புழுப்பிடித்து மணப்பதுவும், காய்ச்சலடிப்பதுவும், கால்வீங்குவதும், துப்பாக்கிக்குரிய மரியாதையை கொட்டான் என்ற பொல்லுக்கு வழங்குவதும், தவறும்பட்சத்தில் தண்டனை பெறுவதும், நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் பொறுப்பாளர்களின் அதிகாரம் பற்றிப்பேசவேண்டும். நாவல் வாசிப்பில், பொறுப்பாளர்கள் தங்களுடைய அதிகாரங்களை மிகக் கடுமையாகப் பிரயோகிப்பதான, தோற்றப்பாடு இயல்பாக ஏற்படுகிறது. எனக்கு நம் சமூகத்தின், இயல்பான ஆசிரியர் மாணவர் உறவும், அதிலிருக்கின்ற வன்முறைப் பிரயோகங்களும், அதிகாரமுமே நினைவுக்கு வருகின்றன. இது இந்தச் சமூகத்திலிருந்து எழுந்த இயக்கமென்பதையும் ஞாபகப்படுத்திக்கொள்கின்றேன்.
இதில் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம்.

குறிப்பாக இங்கேதான் போராளிகளுக்கும் மேல்மட்டத்தினருக்கும் அதிகாரங்கள் உருவாகின்றன என்று முகப்புத்தகத்தில் யமுனா குறிப்பிட்டதாக நினைவு. இதனைத் தனிப்பரப்பாகவும் உரையாடலாம். ஆனால் தலைக்கு ஒழுங்காக எண்ணெய் வைக்காத போராளியைத் திட்டும்போது அந்த அதிகாரத்திலிருக்கிற கரிசனையையும் எவ்வாறு புரிந்துகொள்வதென்பதுவும் ஒரு கேள்வியல்லவா..
இவ்வாறு போர்ப்பயிற்சியின் கடினமும், அந்த வலியும் விரிவாகப் பதிவு செய்யப்படுகின்ற பின்னணியில்தான் இந்த நாவல் வெளியாவது இரண்டுமுறை புலிகளால் நிறுத்திவைக்கப்பட்ட செய்தியையும் நாம் பார்க்க வேண்டும்.

புலிப்போராளியால் எழுதப்பட்டு, க.வே பாலகுமாரனால் முன்னுரை வழங்கப்பட்டு, அச்சுக்குத் தயாரான நேரத்தில், 2 தடவைகள் தடையுத்தரவுகள் கிடைத்ததாக நுாலில் குறிப்பிடப்பட்டுள்ளது. போராட்ட வாழ்வென்பது எவ்வளவு வலி மிகுந்தது என்பதையும், பயிற்சியின் கடினத்தையும் இந்நாவல் விரிவாகப் பதிவுசெய்வதானது ஆட்சேர்ப்பைப் பாதிக்கக்கூடுமென்று கருதியிருக்கலாம்.

இன்றைக்கு ஈழப் போரைக் குறித்த இலக்கியங்கள், பெரும்பாலும், ஈழப்போர் பயணித்த பாதை பற்றியும், அதனுடைய தடம்புரள்வையும், விமர்சனத்தோடும், சிலநேரங்களில் வன்மமும் வெறுப்பும் நொதிக்க நொதிக்கவும், வெளியாகிக்கொண்டிருக்கற இக்காலச் சூழலில் அந்தப்போராட்டத்தின் பங்காளர்களாகிய சாதாரண மனிதர்களின் கதையை, தூயதும், கொச்சைப்படுத்தமுடியாததுமான தியாகத்தை, அவர்களுடைய பேரன்பையும் மானுடத்தையும், எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களுடைய ஆன்மாவை, இந்நாவல் ரத்தமும் சதையுமாக முன்வைக்கிறது.

எல்லோர் முதுகிலும் விழுந்த ஈழயுத்தம் என்ற பிரம்படியை, வாய்ப்புக்களாக மாற்றும் தந்திரமும், விச்சுழித்தனமும் இல்லாத இந்த உண்மை மனிதர்களின் கதையைப் படித்து முடிகின்ற போது, குற்ற உணர்ச்சி நம்மைக் கவ்விக்கொள்கிறது.

(லண்டனில் 30 ஓகஸ்ற் 2014 நடந்த அரசியல் நாவல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது)