comment 0

லவநீதன் ஜெயராஜ்

ஒரு நாவல்/நூலினை வாசகரொருவர் வாசித்து முடித்துவிடும் போது ஏற்படும் மன எண்ணங்களில் தான் அதன் வெற்றி தங்கியுள்ளது என நான் நினைக்கிறேன். அதற்காக நூலினை விளங்கமுடியாமல் போவது ஆசிரியரின் பிழை அல்ல, அது நிற்க

ஆதிரை நாவலை வாசித்துமுடிந்தவுடன் அதனை மூடி வைக்கலாமா அல்லது இன்னுமொரு தரம் வாசிக்கலாமா என்று ஒரு தாகத்தை ஆனால் மனதில் ஒருமிகப் பெரும் வெறுமையை ஏற்படுத்தி நிறைவிற்றது.

இப்படியான எழுத்துக்களை நான் ஒருசில எழுத்தாளர்களிடம் மட்டுமே காண்கிறேன். வாசிப்பு பழக்கம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லாவிட்டாலும் கூட கல்கியின் ” பொன்னியின் செல்வனும் ” , வைரமுத்துவின் ” கள்ளிக்காட்டு இதிகாசம் ” , “கருவாச்சி காவியம் ” , “மூன்றாம் உலகப்போர்”, “தண்ணீர் தேசம் ” போன்ற நாவல்கள் ஏற்படுத்திய அதே பாதிப்பு (உள்ளடக்கம் வேறிருந்தாலும் ) வாசிக்கும் போது அவை எதோ நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருப்பன போன்றதொரு பார்வையினைத தருவன.அதே போன்றதொரு உணர்வினை “ஆதிரை” தந்தாள் என்பது வலிசுமந்த உண்மை.இதைவிடவா மற்றவரகளின் “ஈழகாவியங்கள்” இருக்கப்போகின்றன ?

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தினை உள்ளவாறு ( சற்று கசப்பான அனபவங்களுடன்) அதன் அரசியல் , சமூக தாக்கங்கள் என்பவற்றை அவற்றை நேரடியாக அனுபவித்த மக்களினூடு தந்துள்ளார் சயந்தன்.பிரதேச/வட்டார தமிழ்ப் பேச்சு வழக்குகளை அநாயசமாக அருமையாக (பொருத்தமான இடங்கள் எனக்கூற முடயாது, ஏனெனில் அவை இல்லாது விடின் நாவல் நிச்சயம் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது)கையண்டுள்ளார்.கால ஓட்டத்தின் பதிவுகளை தான் கூறாது கதைமாந்தரூடு சொல்லியிருப்பது சிறப்பு.

664 பக்க நாவலை தினம் 30 பக்கங்களைக் கூட வாசிக்கமுடியாமற் செய்து வாசகர்களைக் கட்டிப்போடுகிறார் ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும் போதும் கைகள் தீயைத் தீண்டுவன போலிருக்கின்றன.லெட்சுமணனின் சித்திரவதை, இத்திமரத்தின் சரிவு,நடராசனின் சாவு(ஓதிய மலைப் படுகொலைகள்),இறுதிக கட்டப்போர் , அத்தார், சங்கிலி,ராணி, வல்லியாள் இப்படி சம்பவங்கள், இடங்கள், மாந்தரகள் என வரிக்குவரி தமிழர் வடுதலைப் போராட்டத்தை அவரவர் பார்வையில் உள்ளபடி சில விமர்சனங்களோடு ( இனிப் பேசவேண்டிய கருத்துக்களோடு) மக்களின் வாழ்வியலை குறிப்பாக பாதிக்கப்ட்ட அடித்தட்டு மக்கள் அல்லது அப்படி போரினால் மாறியவர்கள் பார்வையில் மிகவும் அழுத்தத்துடன் நகர்ந்து செல்கிறது கதை. சிற்சில இடங்களில் மீள்வாசிப்பு அல்லது மீளாராய்வு செய்யப்படவேண்டிய சம்பவங்களையும் கருத்துக்களையும் கூட கூறிச் செல்கிறார் ஆசிரியர்

நாவாலின் தலைப்பில் சொல்லப்படும் “ஆதிரை” யை காட்டியவிதம் அவளின் முழுக்கதையை எதிர்பார்கக வைக்கிறது.

கதைமாந்தர்களை அப்படியே அவர்கள் காலத்திலேயே விட்டிருப்பது அநாவசிய கதைநீட்சியைத் தவிர்க்கின்றது.

இன்னும் சொல்ல எவ்வளவோ இருப்பினும்

“ஆதிரை” ஈழ்த்திலிருந்து ஈழத்திற்கான ஈழகாவியத்தின் ஒரு ஆரம்பப்புள்ளி.

இந்த விமர்சனம் “அத்தாருக்கு” சமர்ப்பணம்

Leave a Reply