comment 0

த்ரிஷா உங்களுடைய கேர்ள் ப்ரண்டா?

இந்த சினிமாச் சுற்று கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்றுதான் நினைக்கிறேன். இப்படி முடிவடைந்து விட்டதாக எல்லோரும் நினைக்கும் பொழுதில் ஏதாவது ஒரு புள்ளியில் முடிவை முறியடித்துக்கொண்டு யாரேனும் எழுவதில்லையா ? அது போலத்தான் இந்தச் சுற்றுக்கு அழைத்த லோசன் சின்னக்குட்டி ஆகியோரின் கேள்விகளோடு நீண்ட தாமதத்தில் வந்திருக்கிறேன். இதற்கு கொஞ்சம் காரத்தை குறைக்கும் நோக்கமும் உண்டு.

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ஏழு! நிறையவே நினைவிருக்கிறது. மத்திய கிழக்கிற்கு போன அப்பா கொண்டு வந்த டிவி விசிஆர் இல் பாண்டியன் நடித்த ஆண்பாவம். இங்கே பாண்டியன் விசிஆர் என்பதெல்லாம் ஏழு வயதில் தெரிந்த விடயங்கள் அல்ல. அதற்கடுத்ததாக அதே நாளில் பார்த்த திரைப்படம் சரஸ்வதி சபதம். யோசித்துப் பார்த்தால் இத்திரைப்படத்தையே முதலில் பார்த்து எனது சினிமா பார்க்கும் வாழ்க்கையை கடவுள் ஆசியோடு ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் யாரோ ரேவதி ரசிகரோ அல்லது சீதா ரசிகரோ அதை தடுத்து விட்டார்கள். ( நாளை அப்பாவிடம் அவர் யார் ரசிகர் எனக் கேட்க வேண்டும்)

உணர்வதற்கு எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்த முன்வீட்டம்மா அற்பனுக்கு பவிசு வந்தால் என்ற பழமொழியைக் கூறி காசு வந்தால் அதை வீட்டுக்குள்ளை வைச்சு பூட்டி வையுங்கோ என ஆலோசனை கூறிச் சென்றார். அவரது வார்த்தைகள் யாழ்ப்பாணத்தில் மிச்சம் சொச்சமாக செயலளவில் வழக்கிழந்தும் வலுவிழந்தும் போன சமூக ஆதிக்கத்தின் கருத்தளவில் தொடரும் வெப்பியாரம் / வெம்மை என்பதான பின்னாட்களின் புரிதலுக்கு அதுவே முதற் கால்கோள்.

திரையில் பார்த்த முதற்சினிமா ரஜினியின் ராஜா சின்ன ரோஜா. ராஜா தியேட்டர். 1990 யூன் 5 – எனது பிறந்த நாளுக்காக கூட்டிச் சென்றார்கள். அடுத்த ஐந்தாவது நாள் பிரேமதாசா புலிகள் யுத்தம் வெடித்தது. திரையரங்குகள் மூடப் பட்டன. ஆகவே அதுவே நான் யாழ்ப்பாணத்தில் வெண் திரையில் பார்த்த கடைசித் திரைப்படமும்.

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

நாறினியா… தமிழில் சொல்வதை விட ஆங்கிலத்தில் சொல்வதே உத்தமம். Narnia 2. ஆங்கிலப் படங்களுக்கே சப்டைட்டில் தேடும் பேர்வழியான நான் விதியே என ஜெர்மன் மொழிப் படத்திற்கு சென்று உட்கார்ந்து வெர்ஜினியா சிரித்த போதெல்லாம் சிரித்து விட்டு வந்தேன்.

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சரோஜா ! வீட்டில் ஒரு பிராங் டிவிடியில் (1 CHF) (ஒரு பிராங் எத்தனை இலங்கை ரூபாய்கள் எனச் சொல்ல மாட்டேன். ஞானியிடம் குட்டு வாங்குவதெல்லாம் நமக்கு முடியாதப்பா )

கொஞ்சக் காலமாகவே படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் கெட்ட பழக்கம் ஒன்று தொற்றி விட்டிருக்கிறது. ஒரு காலத்தில் காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த கணக்காக டிவியில் யாராவது வந்து நடித்தால் பாடினால் ஆடினால் சண்டையிட்டால் போதும் என எல்லாப் படங்களையும் பார்த்து தொலைத்த எனக்கு இதுவொரு குறிப்பிடத் தகுந்த மாற்றமாகத் தான் தெரிகிறது. காதல் வெயில் கல்லூரி பருத்தி வீரன் வகைகளில் ஒரு வித இறுக்கமான (இந்தப் பதம் சரியானதா தெரியவில்லை ) படங்கள் கவர்கின்றன. சில சமயங்களில் விபத்தாக வல்லவன், அரசாங்கம் போன்ற படங்களையும் பார்த்து விடுகின்றேன்.

(கப்டனின் அரசாங்கம் பார்த்த அன்று நாட்பலனில் அதிகாரிகளால் மன உளைச்சல் என இருந்தது. யோசித்து பார்த்த போதுதான் அப்படத்தில் அவர் அதிகாரியாக நடித்திருப்பது புரிந்தது.)

சரோஜா இறுக்கமான படம் அல்ல. ஆனால் பிடித்திருந்தது. பிடிக்காதவற்றுக்கு காரணம் சொல்ல முடியும். பிடித்ததற்கு எப்படி காரணம் சொல்வது ?

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

இதற்கு இரண்டு பதில்கள் உண்டு. ஒன்று சின்னத் தம்பி. மற்றயது வைகாசி பொறந்தாச்சு. அப்போது யாழ்ப்பாணத்தில் மின்சாரம் கிடையாது. திரைப்பட வெளியீட்டுப் பிரிவினரால் மீளத்தணிக்கைக்கு உட்படுத்த படங்கள் பார்ப்பதற்கு கிடைத்தன. ஆனால் ஜெனரேட்டர் வாடகைக்கு எடுக்க வேண்டும். அவ்வாறான ஒரு நாள் சின்னத் தம்பியோடு வேறும் சில படங்களை அத்தை வீட்டில் டிவியிட்டார்கள். (திரையிட்டது போல) நான் சின்னத் தம்பியை பார்க்க ஆர்வமுற்றிருந்தேன். ஆனால் ஏற்கனவே சின்னத்தம்பியை பார்த்தவர்கள் அதிகமிருந்ததால் வேறுபடங்களை முதலில் போட்டார்கள். இரண்டாவது படம் ஓடிக்கொண்டிந்த போது ஜெனரேட்டர் மீளமுடியாத வகையில் ஓய்வு பெற்று விட்டது.

Leave a Reply