comment 0

சுகன்

நஞ்சுண்ட காடு ,விடமேறியகனவு,ஆறாவடு,ஆதிரை போன்ற நாவல்கள் தமிழகத்தில் மற்றும் புகலிடத்தில் கவனம் பெறுதலும் கவனம் கோரலுக்கான முன்மொழிவிற்குமான பின்னணி என்ன ?

யுத்தத்தின் இறுதி நாட்கள் வரை யுத்தத்தின் மானசீகமான ஆதரவுத்தளமாக அதன் ஆதாரமாக அதன் இயக்குதளமாக இருந்த தமிழக – புகலிட ஈடுபாட்டாளர்கள்,யுத்தத்தின் அவலமுடிவை சீரணிக்கமுடியாமல் தலை கவிழ்ந்தார்கள், எதிர்கொள்ளமுடியாமல் முகம் திருப்பினார்கள் ,அவர்களுக்கு தப்பித்தல் ஒன்று தேவைப்பட்டது,மாற்று வடிகால் ஒன்று தேவைப்பட்டது ,சர்வதேச விசாரணை -இனப்படுகொலை -கூண்டிலேற்றுதல் போன்ற பங்குச் சந்தை – ஊக வாணிப கோரிக்கைகள் ஏமாற்றமளிப்பதாகவும் அதை வலியுறுத்துவதற்கான வலுவான தமிழ் அரசியல் தரப்பு இன்மையாலும் அந்தப் போர் ஆதரவு உளவியலுக்கு ஒரு மாற்றுப் பதிலீடு,ஒரு ஆற்றுப்படுத்தல் -காடாத்துதல் தேவைப்பட்டபோது இந்த நாவல் வகைமாதிரிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன,
இந்த வகை மாதிரிகளின் முக்கிய பண்பாக தார்மீகமாக எழுந்த எதிர் விமர்சனங்களை-எதிர் நிகழ்வுகளை எப்படித் தவிர்த்து கதையைக் கட்டமைத்தல் என்பதிலேயே கவனமாக இருக்கிறது,

யோ .கர்ணன் – ஷோபாசக்தி வகை இலக்கியப் படைப்புகள் தவிர்க்கப்படும் உளவியலையும் குணா .கவியழகன் -சயந்தன் வகை படைப்புகள் முன்மொழியப்படுவதுமான பொது உளவியலும் இதுவே,

படைப்பு மனநிலை என்பது சுய விசாரணை ,தன் அறிதலுக்கு மாறு செய்யாத ஒப்புதல்.
அது சொரிந்துகொடுத்தல்- ஒத்தடம் கொடுத்தல் அல்ல. வள்ளுவரில் சொல்வதெனில் தன் நெஞ்சு நாணுதல்.

ஆதிரை நாவல் தொடக்கத்தில் இந்த உளவியல் இப்படித்தான் தொடங்குகிறது..
விஜேரத்தின என்ற பேத்தையன் சித்திரவதை செய்பவனாகவும் நிலாம்தீன் அவனுக்கு துணை நிற்பவனாகவும் நாவல் தொடக்கம் அமைகிறது
0 0 0

ஓங்கிய இரண்டு பனைமரங்கள் ,அதன் பின்னணியில் தாக்குதலுக்காகக் காத்திருக்கும் கையில் துப்பாக்கி ஏந்திய, வெற்றி நிச்சயம் ,ஓயாத அலைகள், சுதந்திரப்பறவைகள் என்ற பகுதி பகுதியான கட்டமைப்புகளோடு தலைவரின் இரண்டு பொன்மொழிகள் மட்டுமே துணைகொண்டு நம்காலத்து நாயகன், நிரபராதி, சோமையா ராசேந்திரன் என்ற சிங்கமலை லெட்சுமணன் என்ற தமிழன் கிளாசிக் அட்டையில் முன்னிற்கிறான்(ள்); முன்னிறுத்தப்படுகிறான்(ள்); மின்னல் அடிக்குதுசார்!

உபாலி கேட்கிறான், “மச்சான் ! நீ புலிதானே ! அப்படியானால் உனக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும் ,மறைக்காமல் சொல்லு ! சந்தையில் புதிதாக என்ன ஆயுதம் வந்திருக்கிறது ?”

“உனக்கு துப்பாக்கிகளைக் கையாளத் தெரியுமல்லவா…. நீ என்னோடு சேர்ந்துவிடு ”
என்ன கொடுமை சார் ! சிங்களவனும் முஸ்லிமும் சேர்ந்து தமிழனை என்னமாய்க் கொடுமைப்படுத்தி சித்திரவதைப் படுத்துறாங்க சார் ! கிளாசிக் !
0 0 0

தமிழ் உணர்வுக் கவிஞர்களும் அடையாள நெருக்கடி – அவதிக்குள்ளாகும் அடிப்படைவாத எழுத்தாளர்களும் ஒரு சுகமான ஆறுதலாக, ஆசுவாசமாக தமது உணர்வுகளை கதைகளின் பாத்திரங்கள்மேல் ஏற்றிச் சொல்வது ஒரு நல்ல தந்திரோபாயமாக கொள்ளப்படுகிறது , இந்த “ஏவிவிடுவதற்கு “இலக்கிய மதிப்பு இருப்பதில்லை .ஆனால் அதற்கு கவர்ச்சிகரமான உடனடி கவனஈர்ப்பு இருக்கவே செய்கிறது, இந்த அவ்வப்போதைய உணர்ச்சிகளில் குளிர்காயும் அந்த உணர்ச்சிகளில் ஆதாயம்தேடும் எழுத்து பின்னர் அந்த அலை ஓய்ந்தபின் இலக்கிய அந்தஸ்து பெறுவதில்லை. நந்தசிறிகளும் சுமக்கமுடியாமல் தொட்டிலைச் சுமந்துபோன பொடிமெனிக்கே களும் லங்காராணி களும் இங்கு அப்படித்தான் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.

“நாலுபக்கமும் சிங்களவங்க கிட்ட அடிவாங்கிக்கிட்டு கிடக்கிறதைவிட இந்தத் தமிழ்ச் சனங்ககூட வாழ்ந்திட்டுப் போயிடலாம் ” என இளைஞர்கள் சிலர் அபிப்பிராயப்பட்டனர் என நாவல் ஒரு சரடை அவிழ்த்துவிடுகிறது,

ஆனால் அதேநேரம் அவனுக்கு கடைக்காரச் செட்டியார்களும் கங்காணிகளும் தங்களைத் தொடுவதில்லை,வீட்டுக்குள் விடுவதில்லை என்ற தீட்டுக் கொடுமையிலிருந்து தப்பிச்சிரலாம் என்று சிங்கமலை நினைக்கிறான் …

மலையகத்தில் சாதி ஒதுக்குதல்கள் அல்லது சாதி முரண்கள் ஒரு பிரதான, குறிப்பிட்ட பிரச்சனையாக இல்லை, தீட்டு என்கிற தீண்டாமை முரண் அங்கு ஒரு தாக்கமாக இல்லை, எவ்வளவுதான் அதை அங்கு ஒரு ஆய்வு நிமித்தமாகவேனும் தேடினாலும் அதற்கு வலு இருப்பதில்லை,

“மலையக தொழிற்சங்கங்களில் சாதியம்” என தன்னிடம் பயின்ற ஆய்வு மாணவர் ஒருவருக்கு பேராசிரியர் சிவத்தம்பி ஆய்வு செய்வதற்காகப் பரிந்துரைத்தபோதிலும் அம்மாணவரால் அதை அங்கு செய்யமுடியவில்லை அம்மாணவர் அவ்வாய்வைக் கைவிட்ட சேதி ஒன்றுள்ளது, பின்னர் அப்படியான ஆய்வு ஒன்று வந்ததா தெரியவில்லை.

ஆனால் சிங்கமலைக்கு துரைத்தனம் என்பது சாதிய தீட்டாகவும் கண்காணித் துரைத்தனமாகவும் முடிந்ததில் டேவிற் ஐயாவின் காட்டுப்புலத்தில் குடியேற நேர்ந்துவிடுகிறது ,குடியேற நேர்ந்த பிற சம காரணிகள் எவையென தேடினால் நான்குபக்கமும் கடலால் சூழப்பட்ட சிங்களவர்கள்..

0 0 0

வெறுப்பு- துவேச அரசியலிலும் இனத்துவ அடிப்படை மனநிலைகளிலும் சுகமும் ஆறுதலும் கொள்ளும் எழுத்துகள் அவ்வளவு நாகரீகத்திற்குரிய மனித மாண்புகளுக்குரிய உன்னதமான -மேன்மையான -தகுதியான அடையாளத்தை பெற்றுக்கொள்வதில்லை ,காசிஆனந்தனுக்கும் சேரனுக்கும் புதுவை ரத்தினதுரைக்கும் இங்கு அதுதான் நிகழ்ந்தது, இலக்கிய உத்திமுறைகளை ,சொல்லும் முறையில் பரீட்சார்த்தங்களை மொழியின் எல்லையற்ற சாத்தியங்களை பயன்படுத்தி மானுடம் போற்றும் தனித்துவமான போற்றத்தக்க படைப்பாளிகளாக மிளிர்வதற்குப் பதில் “மண்டைக்குள் என்ன அரசியல் இருக்கிறதோ அதுதான் எழுத்திலும் வரும் ” என வெளியே வரும் வேகத்திலேயே அங்கீகாரங்களுக்காக பரிதாபமாக யாசித்துக் காத்துக்கிடக்கின்றன , பெருந்தன்மையான ஒரு சின்னப்பாராட்டில் பெருமிதம் கொண்டுவிடுகின்றனஅவ்வெழுத்துக்கள் .

காலத்தைக் குலைத்துப்போட்டு கதை நுட்பத்தை ஆழமாக்குவதற்குப்பதிலாக நாவலில் முதல் பாகம் 1991 இற்கும் அடுத்த அத்தியாயம் 1983 இற்கும் அடிப்படையில் அது கையாளும் வெறுப்பு மனநிலையில் எந்த மாற்றமுமில்லை ,குலைப்புமில்லை ,கவிழ்ப்புமில்லை . முதல் பக்கத்தில் என்ன சொல்ல விழைந்ததோ பண்ணிப்பண்ணி தவளைப்பாச்சலில் அதனது 104 வது பக்கத்திலும் அதைத்தான் பேச வந்துவிடுகிறது .மண்டைக்குள் என்ன அரசியல் இருக்கிறதோ …அதுதான்.

//ரோந்துகளுக்குப் புறப்படும் ஆமிக்காரர்கள் இப்போதெல்லாம் தெருக்களில் இரத்தம் காணாமல் திரும்புவதேயில்லை ,கண்டபாட்டிற்குச் சுட்டுப் பழிதீர்த்தார்கள், தமிழ்ப் போராளிகளுடைய எழுச்சி கிளைத்துப் பரவத் தொடங்கியிருந்தது ,யாழ்ப்பாணத்தின் போலிஸ் நிலையங்கள் முற்றுகையிடப்பட்டிருந்தன ,சிப்பாய்கள் வழிமறித்துத் தாக்கப்பட்டார்கள் //

78 ஆம் பக்கத்தில்// சிங்களச் சனத்தின்ரை கோபத்தைப் புரிந்துகொள்ளிறன் என்று ஜெயவர்த்தனா சொல்லிறார் , ….அத்தார் பிறகு தீர்க்கமாகச் சொன்னான் ,தமிழ்ச் சனத்தின்ரை கோபத்தைப் புரிந்துகொள்ளிற காலம் ஒண்டு வரும் சிங்கமலை //
2015 இல் எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தைகள் ,கூல்….கூல் ..

(தொடரும்)

சுகனின் பிந்திய குறிப்பு:

“ஒருபேப்பர்” என்ற கீழ்த்தரமான அவதூறுப் பத்திரிகையில் அ.ரவியுடன் ஆசிரியர்குழுவில் இருந்தவர் சயந்தன் என்று அ .ரவியின் முகநூல் தகவல் சொல்கிறது ,இது எனக்குத் தெரியாது ,முன்னர் தெரிந்திருந்தால் நான் ஆதிரையை விமர்சனத்திற்கு எடுத்திருக்கமாட்டேன் ,விமர்சனத்திற்குத் தகுதியான அல்லது நிராகரிப்பிற்குத் தகுதியான புனைவுகள் பல இருக்கின்றன , பொய்யையும் அயோக்கியத்தனத்தையும் அடிப்படையாகக்கொண்ட அந்தப்பத்திரிகையால் மன உழைச்சல்களுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளானவர்கள் ,பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் ,தற்சமயம் அதுகுறித்த விமர்சனத்தைப் பாதியிலேயே நிறுத்தவேண்டியிருக்கிறது.

Leave a Reply