comment 0

காஸா! படுகொலை நாட்களின் குறிப்புகள்

Gaza, July 10, 2014

சண்டையின் இரண்டாம் நாள். வாழ்வில் ஒருபோதும் அனுபவித்திராத பயங்கரத் தருணங்களை இந்த நாளில் கடந்தேன்.

மதியத்தின் பின்னர், வீடு அதிர்ந்தாடிய பெரு வெடியொலியிற்குச் சில நிமிடங்கள் கழித்து தொலைபேசி அழைத்தது. அக்கா அழைத்தாள். “இஸ்ரேலிய விமானங்கள் தாக்குகின்றன. அயலவர்களும் நாங்களும் வீடுகளிலிருந்து வெளியேறிவிட்டோம். அனைத்தும் தரை மட்டம்” என உடைந்துவிழும் குரலில் அவள் சொன்னாள். பேசிக்கொண்டிருந்த போதே இணைப்பு அறுந்தது. மீண்டும்அழைப்பதற்காகத் தீவிரமாக முயற்சித்தேன். கைகூடவேயில்லை.

அப்பாவும் சகோதரரும் நேராகச் சென்று அவளை எங்களுடைய வீட்டிற்கு அழைத்துவர முடிவெடுத்தார்கள். வெறுச்சோடிப்போன தெருவில் காரைச் செலுத்தினார்கள். மேலுமொரு இடிமுழக்கவொலி கேட்டது. என் இதயம் துடிக்கின்ற சத்தம், மொத்த உலகிற்கும் கேட்கக்கூடும். எண்ணங்களெல்லாம் இடைவெட்டப்பட்டுவிட்டன. அம்மாவை அமைதிப்படுத்த வேண்டும். நானும் முழுவதுமாக நிலைகுலைந்து போயிருந்தேன்.

இஸ்ரேலியப் படைகளையும் அவர்களுடைய போர்க்கப்பல்களையும், விமானங்களையும், தாங்கிகளையும் காஸாவிலிருந்து துடைத்தழிக்கும் மாபெரும் சக்தியை நான் கொண்டிருக்க வேண்டுமென்று அந்தக் கணத்தில் ஒரு வெறி.

அக்காவையும் அவளுடைய குழந்தைகளையும் வாசலில் கண்ட வரையிலான இந்த 20 நிமிடங்கள் என் வாழ்க்கையில் பயங்கரமானதும் திகிலானதுமான அனுபவமாகப் பதிந்துவிட்டது. அக்காவின் மகன் என்னை ஆரத்தழுவினான்.

அக்காவும் அவளுடைய குடும்பத்தாரும் எங்களோடே தங்கப்போகிறார்கள். அயல் வீடுகள் தகர்க்கப்பட்டபோது எப்படியெல்லாம் கதறினார்களென்று அக்கா சொன்னாள். F 16 விமானத்திலிருந்து ரொக்கெற்றுக்கள் வீசப்படுவதற்கு முன்பாக அபாச்சி ரக உலங்கு வானூர்தி இலக்குவைக்கப்பட்ட வீட்டின்மீது எச்சரிக்கைக் கணைகளை வீசும். (F 16 இற்கு இலக்கை அடையாளம் காட்டும் நடவடிக்கையே இது) குறிவைக்கப்பட்ட வீடுகளிலிருந்து வெளியேற சிலநேரங்களில் அவகாசம் கிடைக்கும். பல நேரங்களில் கிடைப்பதில்லை. அதிஷ்டவசமாக அக்காவும் கணவரும் கட்டிட இடிபாடுகளுக்கிடையில் தப்பித்துக்கொள்ள குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு கீழ்த்தளத்தில் பதுங்கிக்கொண்டார்கள். எச்சரிக்கைக் கணை வீசப்பட்ட ஆறாவது நிமிடத்தில் F 16 இலன் ரொக்கெற்றுக்கள் வீடுகளைப் பதம் பார்த்தன. அக்காவின் எதிர்ப்புற வீடு இலக்கானது. அங்கிருந்து பெண்களும் குழந்தைகளும் கதறியழும் ஓலம் பின்தொடர்ந்தது.
நான் அக்காவின் குழந்தைகளைப் பார்த்தேன். இந்த அனுபவங்கள் எப்படியான உளவியல் தாக்கத்தை அவர்களில் ஏற்படுத்தும் என்பதை நினைக்கவே அச்சமாயிருந்தது. இந்த யுத்தத்தை எதிர்கொள்ளும் மக்கள், பெண்கள், குழந்தைகளையே என்னுடைய நினைவுகள் சுற்றின. முன்னைய யுத்தகாலங்களில் காஸாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக நான் பணியாற்றியிருக்கின்றேன். போருக்குப் பின்னான காலங்களில் இச்சிறார்களைக் கையாள்வதும், சிகிச்சையளிப்பதும் எத்துணை சிக்கலானதென்றும் உணர்வுமயமானதென்றும் நான் அறிவேன். .

இன்றைய நாளின் தொடக்கத்தை நினைவுபடுத்துகிறேன். விமானங்களின் இரைச்சலாலும் செய்திகளைப் பின்தொடரவேண்டுமென்ற ஆவலாலும் நேற்றிரவு நித்திரைகொள்ள முடியவில்லை. ஒவ்வொரு குண்டுச் சத்தங்களிற்குப் பிறகும் தன்னிச்சையாக பேஸ்புக்கில் தகவல்களைத் தேடிக்கொண்டோ அல்லது வானொலியை முடுக்கிக்கொண்டோயிருந்தேன்.

சிலமணிநேரம் தூங்குவதும், மறுபடியும் எழுந்து செய்திகளை அறிவதுமாக பொழுது கழிந்தது. நாள் முழுவதும் இஸ்ரேலியக் கடற்படைகள் காஸாவின் அடையாளம் காணமுடியா நிலைகளை இலக்குவைத்துக் கடுமையான ஷெல் தாக்குதல்களை நடத்தியிருந்தன. வீடுகளையும் பள்ளிவாசல்களையும் பெண்களையும் குழந்தைகளையும் குறிவைக்கும் கடல், வான் தாக்குதல்கள் பற்றியே எல்லாச் செய்திகளுமிருந்தன. இஸ்ரேலின் குறி அம்புலன்ஸ்களிலும், மருத்துவ வாகனங்களிலும், ஊடகங்கங்களிலுமே இருந்தது.. வெறித்தனம்.. இந்த யுத்தம் பிரதானமாக அப்பாவிகளையே குறிவைக்கின்றது. மனிதாபிமானச் சட்டங்களும் சர்வதேச ஒழுங்குகளும் எங்கே போயின..? ஜெனிவா ஒப்பந்தங்கள் என்னாயின ? ஐக்கியநாடுகள் சபை என்றழைக்கப்படும் நிறுவனத்தின் பணிதான் என்ன? பலஸ்தீனர்கள் தம் துயரைத் தாமே தாங்கிக்கொள்ள வேண்டியதுதானா..? இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்புக்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற ஐ.நா.மன்றம் சிறு காலடியைத்தன்னும் முன்வைத்ததில்லை. தலையிட்டதுமில்லை. வெட்கக்கேடு ஐ.நா. மன்றமே..

காஸாவின் பிரதான வைத்தியசாலையான ஸிபா தன்சக்திக்கு மீறி இயங்கிக்கொண்டிருந்தது. கடுமையான காயங்களுக்கு உள்ளானோரை வெளியேற்றுவதற்காக எகிப்தின் ரஃப்பா எல்லையைத் திறந்துவிடும்படி எகிப்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அவசர வேண்டுகோளுக்குப் பின்னரும் ரஃப்பா மூடித்தான் கிடக்கிறது. ஹமாஸ் இயக்கத்தைத் துடைத்தழிக்கும் பரஸ்பர நலனின் அடிப்படையில் – காஸாமீதான தாக்குதல்கள் எகிப்திய அதிகாரிகளின் முன் அனுமதியுடனும் ஒருங்கிணைப்புடனுமே நடைபெறுவதாகச் சொல்கிறார்கள்.
நோன்பு முடிக்கும் நேரம். மின்சாரமில்லை. பகலில் 8 மணி நேர விநியோகமே உண்டு. எப்படியாயினும் சிறுவெளிச்சத்திற்கும் இணைய இணைப்பிற்கும் போதுமான மின்கலச் சேமிப்பிருந்தது. வேவு விமானங்கள் பறக்கும் வானத்தின் இருண்மையிலும் எரிக்குமாற்போன்ற கோடையிலும் ஆகக்குறைந்தது ஒரு மின்விசிறியையாவது நம்மால் சுழலவைக்க முடிந்தது.

இன்றைய நாளில் மேலுமொரு துயரமான சாவுச்செய்தி கிடைத்தது. நெருக்கிய நண்பனின் இரண்டு உறவினர்கள் இறந்து விட்டார்கள். அவர்கள் சாதாரண பொதுமக்கள். நிராயுதபாணிகள். குண்டுவீச்சில் எரிக்கப்பட்ட அவர்களுடைய பண்ணையைப் பார்க்கச் சென்றிருந்தார்கள். காஸாவின் மத்தியிலிருந்த பண்ணை. அபாச்சி உலங்கு வானூர்தியிலிருந்து வீசப்பட்ட எச்சரிக்கைக் கணைகளை அவர்களால் விளங்கிக்கொள்ள இயலவில்லை. சில நிமிடங்களிலேயே சாவு அவர்களை அரவணைத்தது. அவர்கள் குடும்பஸ்தினர்கள். அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தன. வாழ்வும் பிரியமான உறவுகளுமிருந்தன.

நான் உறைந்தே போனேன். இது இரண்டாவது நாளின் முடிவா.. அல்லது மூன்றாவது நாளின் தொடக்கமா.. குழம்பிப்போயிருந்தேன்.. எதுவும் நிச்சயமாயில்லை. நேரப் பிரக்ஞையை முற்றாக இழந்துவிட்டேன். மணித்துளிகள் கடந்துகொண்டிருந்தன. குண்டுவீச்சுக்கள் தொடர்கின்றன. வேவுவிமானங்கள் இரைகின்றன. நாம் இன்னமும் உயிருடன் உள்ளோம். ஆம் இந்தக் கணம்வரை.

யுத்தத்தின் இந்நொடி வரை 450 ஏவுகணைகள் வீசப்பட்டுவிட்டன. 55ற்கும் அதிகமான வீடுகள் மண்ணாகின. பலஸ்தீன மருத்துவர்களின் கருத்துப்படி சாவு எண்ணிக்கை 58 ஆக உயர்ந்திருந்தது. காயமடைந்தோர் 486இற்கும் அதிகம் – எல்லாமுமே இக்கணம் வரை.

கொல்லப்பட்ட இந்த மக்கள் தமக்கென ஒரு பெயரைக் கொண்டிருந்தார்கள். நிறையக் கனவுகளோடிருந்தார்கள். உலகின் எந்தச் சட்டத்தின் கீழ் இவர்கள் கொல்லப்பட்டார்கள்..?

சோர்வுற்ற உடலுக்கும் ஆன்மாவிற்குமான ஓய்வுவேண்டி சில மணித்துளிகள் உறங்க விரும்பினேன். அவசரகால வேளைகளில் வெளியேறிச் செல்வதற்கேதுவாக உடை உடுத்திக்கொண்டேன். முக்கிய ஆவணங்களைப் பொதி செய்து வைத்துக்கொண்டேன். விடியப்போகின்ற நாளாவது அமைதியைக் கொண்டுவருமா..?

யுத்தத்தின் இரண்டாவது நாள் முடிந்தது.

Leave a Reply