comment 1

இந்தியா,பிணந் தின்னி நாடென பிள்ளைக்கு சொல்லி வளர்ப்பதைத் தவிர

கடந்த ஏப்ரல் திங்கட்கிழமை , 20ம் திகதி. அதிகாலை. வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரமளவில் மக்கள் இரவோடிரவாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புகுவதற்காக சிங்கள ராணுவ முன்னரண்களை அணுகியிருந்தனர். காலைக்குப் பிறகு அவர்களை உள்ளெடுப்பதாகச் சொல்லியிருந்த இராணுவம் விடியல் நேரத்தில் மீளவும் அவர்களை பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் சென்று விடுமாறு திரத்தியது. அல்லோலகல்லோலப்பட்ட மக்கள் மீளவும் திரும்ப அவர்களுக்கு பின்னாலேயே கனகர ஆயுதங்களோடு இராணுவம் முன்னேறியது.

ராணுவம் புலிகளை எதிர்கொள்ளவும் தொடங்கியது சண்டை. இடையில் ஆயிரக்கணக்கான மக்கள் அகப்பட்டுக் கொள்ள மாபெரும் மனிதப்பேரவலம் அங்கு நிகழ்ந்தேறியது. அன்றைய சில மணிநேரங்களில் செத்தவர்கள் தொகை ஆயிரத்தைத் தாண்டியது.

இந்தக் கொடும்நிகழ்வுக்கிடையில் இன்னொரு பக்கமிருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ராணுவ பிரதேசத்திற்குள் புகுந்து கொண்டார்கள். இராணுவமே எதிர்பார்த்திராத இந்த நிகழ்வை அவர்கள் பெருமெடுப்பில் உலகின் மாபெரும் மனிதாபிமான நடவடிக்கை என பிரச்சாரப் படுத்தத் தொடங்கினார்கள்.

000

நடைபெறுகின்ற நிகழ்வுகள் மக்கள் பாதுகாப்புவலயத்தை விட்டு வெளியேற எத்தனிப்பதை புலப்படுத்தி நிற்கின்றன. புலிகளின் ஆளுகையிலிருந்து வெளியேறி ராணுவ ஆளுகைக்குள் வர விரும்புவதற்கான எத்தணிப்பு இது என்றல்லாமல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ச்சியான இடம்பெயர்வையும் கடந்த நான்கைந்து மாதங்களாக இருபத்து நான்கு மணிநேர எறிகணைத்தாக்குதல்களையும் நாளுக்கு நான்கைந்து தடவைக்கு மேற்பட்ட விமான குண்டு வீச்சுத்தாக்குதல்களையும் எதிர்கொண்டு உறவுகளை தின்னக் கொடுத்து பொஸ்பரஸ் எரிகுண்டுகள் க்ளஸ்ரர் குண்டுகள் நச்சுப்புகை என ஒருவித எரிந்த வாழ்வு நிலையிலிருந்து விடுபட்டு அந்தமாதிரியான குண்டுவீச்சுகளும் புகைக்குண்டுகளும் கிடையாது என நம்புகின்ற இடமொன்றிற்கு தம்மை தம் பிறந்த குழந்தைகளை பிறக்கப் போகும் குழந்தைகளை கருகுவதிலிருந்து காத்துக் கொள்ள முடியலாம் என்ற நம்பிக்கையில் வெளியேறுகிறார்கள்.

மரணித்தாலும் மானத்தோடும் மரியாதையோடும் சாவதற்கு வன்னியின் அப்பாவி மக்கள் வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. கனடா லண்டன் அவுஸ்ரேலியா என உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தம் உயிர்களைக் காத்துக் கொள்வதற்காக இடம் பெயர்ந்த மற்றய தமிழர்களைப் போலவே உயிர்வாழ்வதற்கான ஆசையும் அதற்கான உரிமையும் கொண்டவர்கள். அதனை ஒதுக்கித் தள்ள முடியாது.

000

புலிகளின் ராணுவ வெற்றிக் கனவுகள் மிதப்புகள் மற்றும் குத்தகைக்கார மன நிலையிலிருந்து தற்போதைக்கு புலம் பெயர்ந்த மக்கள் முழுமையாக விடுபட்டிருக்கிறார்கள் என நிச்சயமாகச் சொல்ல முடியும். புலம் பெயர் நாடுகளில் ஈழ போராட்டச் செயற்பாடென்பது மாதாமாதம் பணங்கொடுத்தல் மற்றும் நிகழ்வுகளில் கொத்துரொட்டி விற்றல் என்றிருந்த நிலைமாறி மக்கள் வீதிகள் எங்ஙனும் தமது கோரிக்கைகளோடு நிறைகிறார்கள். (ஐநா வளாகத்தில் வருடா வருடம் நடைபெறும் பொங்கு தமிழ் என்ற பெரும் பானை வைத்துப் பொங்கும் ஒரு நிகழ்வு குறித்து கருத்துக் கேட்ட வெள்ளையின நண்பர் உங்களது கலாசார விழா அழகாயிருக்கிறது என்றார். ) உணர்ச்சித் தளத்தில் நின்று மக்களின் கொலைக்கெதிராக கூடுகிறார்கள்.

புலம்பெயர்ந்த நாடுகளில் போராட்டம் இத்தனை முனைப்பும் கவனிப்பும் பெற்றமைக்கு அப்போராட்டம் தமிழ் இரண்டாம் தலைமுறையின் கைகளுக்கு சென்றமையே காரணமென சொல்லப் படுகிறது. அது உண்மையும் கூட. 94 காலப்பகுதிகளில் ஒரு தடவை ஐநா அலுவலர்களுக்கு விடுமுறை என்பது கூட தெரியாமல் போய் நின்று கத்திவிட்டு வந்தோம் என முந்திய தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் சொன்னார். அவ்வாறல்லாமல் இப்போது மக்களின் நோக்கம் எவரைச் சென்றடைய வேண்டுமென எதிர்பார்க்கப் படுகிறதோ அது நடைபெறுகிறது.

தற்போதைய போர் நிறுத்தக் கோரிக்கைகளுக்கு சார்பான ஆக்கபூர்வமான எந்த சமிக்கையும் எவரிடத்திலிருந்தும் இது வரை வரவில்லை. வரும் என்பதும் நிச்சயமற்றது. இங்கே ஒரு விடயம் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.

தற்போதைய எல்லா போராட்டங்களுமே உடனடிப் போர்நிறுத்தத்தை மேற்கொண்டு பாதுகாப்பு வலய மக்களைப் பாதுகாக்கும்படியான கோரிக்கையை கொண்டுள்ளன. வரும் நாட்களில் ராணுவ நடவடிக்கைகள் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டால் அல்லது வெளியேறினால் போர்நிறுத்தக் கோரிக்கை வலுவற்றதாகி விடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

பாதுகாப்பு வலய பகுதியிலிருந்து மக்கள் வெளியேறி விட்டார்கள் என்பதற்காக தமிழரின் நியாயமான அரசியல் கோரிக்கைகள் நீர்த்துப் போய் விடாது. அது அப்படியே தான் இருக்கும்.

இங்கே இரண்டிலொன்று நடைபெறும். சிங்கள படைகள் முழுமையாக நில ஆக்கிரமிப்பினைச் செய்து மக்களை முகாம்களில் அடைத்த பின்னர் – விரக்தியுற்று இனியென்ன நடந்தது நடந்து போய்விட்டது. விதியெனச் சொல்லி வீடுகளுக்குத் திரும்புதல் அதில் ஒன்று.

மற்றையது தொடர்ந்தும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துப் போராடுவதன் ஊடாக இடம்பெயர்ந்த முகாம்களில் வாழும் மக்களுக்கான உடனடி மீள் குடியேற்றம் மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை என்பவற்றோடு தமிழருக்கான தீர்வொன்றிற்கு அரசினை நெருக்குதலுக்குள்ளாக்கும் தொடர்ச்சியான போராட்டம் மற்றையது. (இவ்வாறான ஒரு போராட்டத்தினை புலிகள் பேச்சு மேசையில் கலந்து கொண்டிருந்த காலப் பகுதியில் சிங்கள அரசு பேச்சுகளில் ஒப்புக் கொண்ட விடயங்களை நடைமுறையில் செயல்ப் படுத்த தவறிய தருணங்களில் நடாத்தியிருக்கலாம் என எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை)

இவற்றை விட கொஞ்சம் கலக்கம் தரக்கூடிய ஒரு எதிர்வு கூறலும் உண்டு. பொதுவாக அதிகாரங்களை விசுவாசிப்பதன் ஊடாக தன் தனி மனித மேம்பாட்டைக் கவனித்துக் கொள்ளும் இனமென்ற ஒரு பார்வை இருப்பதனால்.. சரி.. மகிந்த மாத்தையா எனப் போய்விடவும் கூடும் என்பதுவே அது.

000

எரிக்சொல்கெய்ம் தனது நெருங்கிய ஊடக நண்பர்களுக்கு இந்தியாவை மீறி தம்மால் எதுவும் செய்ய முடியாதுள்ளது என சொன்னதாகப் படித்தேன். சமாதான காலத்தில் கிளிநொச்சி வரும் எரிக் புட்டும் தோசையும் சாப்பிட்டுவிட்டு போகும் வழியில் புதுடில்லிக்கும் போய் மரியாதை நிமித்தமான சந்திப்புகளை செய்து விட்டு போவார். உண்மையில் ஒழுங்கு மரியாதையாக வந்து என்ன பேசினாய் என சொல்லிவிட்டு போ என்ற டில்லியின் அழைப்பே அது.

தற்போதும் கூட மக்கள் அவலத்தை முன்வைத்து பிரிட்டன் அமெரிக்கா பிரான்ஸ் போன்ற நாடுகள் இலங்கை விடயத்தில் தலையிடத்தான் விரும்புகின்றன. ஆனால் தடுப்புச் சுவர் இந்தியாவைத் தாண்ட முடியவில்லை. அதே நேரம் இலங்கையென்ற ஒருநாட்டில் வடகிழக்கு கடலோரம் சிக்கியிருக்கிற மூன்று லட்சம் மக்களுக்காக மேற்குறித்த நாடுகள் இந்தியாவோடு முரண்படவும் விரும்பவில்லை. அவ்வாறு முரண்பட முடியாதவாறு அவர்களது பொருளாதார பிராந்திய டீல்கள் வகுக்கப் பட்டிருக்கின்றன. சீனா குறித்தான அச்ச உணர்வு எப்போதும் இந்தியாவோடு நெருங்கியும் உறவாடியும் இருப்பதற்கான தெரிவையே இந்நாடுகளுக்கு வழங்குகிறது.

இந்தியா புலிகளை அழித்த பிறகு என்ன ? என்ற நினைப்பிலிருக்கிறது எனப் புரியவில்லை. புலிகள் அழிக்கப்பட்ட பிறகு தமிழருக்கான தீர்வொன்று குறித்துச் சிந்திக்கலாம் எனவும் அதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்னிலைப்படுத்தப் படுமெனவும் சில கூட்டமைப்புக்காரர்களுக்கு ஆறேழு மாதங்களுக்கு முன்னரேயே சிக்னல் கொடுக்கப்பட்டுவிட்டதாக நண்பர் ஒருவர் சொன்னார். எந்தளவுக்கு சரி என தெரியவில்லை.

ஆனால் தமிழருக்கு தீர்வொன்றினை ஏதோ இதோ எடுத்துக் கொள்ளுங்கள் என்ற மாதிரி சிங்கள அரசுகள் தந்துவிடும் அல்லது எடுத்துவிடலாம் என இந்தியா நம்பினால் பரிதாபப்படத்தான் முடிகிறது.

அவ்வாறு அவர்கள் முயல்வாராயின் இன்று ராணுவ உதவிகளுக்கு நன்றி சொல்கின்ற சரத் பொன்சேகாவிலிருந்து பிக்குகள் ஜேவிபியினர் என பலரும் குண்டியில் படிந்த புழுதியைப் போல இந்தியாவை தட்டிவிட்டு இது என் உள் நாட்டு பிரச்சனை. நீ தலையிட முடியாது என சொல்லத்தான் போகிறார்கள்.

முடிந்தவரை சிறுகச் சிறுக உருவெடுத்து தன் முதன்மை எதிரியான சிங்களப்படைகளை எதிர்கொள்ளத் தக்கவகையில் மட்டுப்படுத்தப்பட்ட ராணுவ ஆளணி ஆயுத வளங்களோடிருந்த ஒரு விடுதலை போராட்டத்திற்கு எதிராக வல்லரசு நாட்டின் ஆயுத வள உதவியை அளித்து போராளிகளின் தியாகத்திலும் வீரத்திலும் இதுவரை காலமும் பேணப்பட்ட ராணுவ சமநிலையைக் குழப்பியடித்து ஒரு இனத்தின் விடுதலைக் கனவை கருவறுத்த இந்தியாவிற்கு நாம் என்ன செய்ய முடியும்..

இந்தியா ஒரு பிணந்தின்னி நாடு என எம் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்ப்பதைத் தவிர…

1 Comment so far

  1. anbuvel

    நிச்சயமாக நான் என் மகனிடம் இந்தியா ஒரு பிணந்தின்னி நாடு எனச் சொல்லியே வளர்ப்பேன் இந்தியாவில் பிறந்திருந்தும்.

Leave a Reply